For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

101. நன்றியில் செல்வம்

By Staff
Google Oneindia Tamil News

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்.

(1001)

விளக்கம்:

வீடு நிறையப் பொருளைச் சேர்த்து வைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் ஏதும் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான்.


பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

(1002)

விளக்கம்:

"பொருளினால் எல்லாமே உண்டாகும்" என்று அறிந்து, அதை எவருக்கும் கொடாமல், அதன் மீது மயக்கத்தை உடையவனுக்குப் பேய்ப் பிறவிதான் ஏற்படும்.


ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு.

(1013)

விளக்கம்:

உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒருபோதும் விடமாட்டா. அவ்வாறே "நாணம்" என்னும் குணத்தையும் "சால்பு" ஒருபோதும் விட்டுவிடாது.


எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

(1004)

விளக்கம்:

ஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்த பின்ர் இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ?


கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

(1005)

விளக்கம்:

இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடி கோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை.


ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

(1006)

விளக்கம்:

தானும் நுகராமலும், தகுதியானவருக்கு எதையும் கொடுத்து உதவாமலும் இருப்பவன், தான் பெற்ற பெருஞ்செல்வத்துக்கே ஒரு நோய் போன்றவன் ஆவான்.


அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

(1007)

விளக்கம்:

ஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், மிகவும் அழகிய பெண் திருமணப் பயனில்லாமல் தனியாகவே கிழவியானதைப் போன்றதாம்.


நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

(1008)

விளக்கம்:

வறியவராலே விரும்பி வரப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஓர் நச்சு மரமானது நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும்.


அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

(1009)

விளக்கம்:

உறவினரிடம் அன்பு செய்தலை விட்டு நுகராமல் தன்னையும் வருத்திக் கொண்டு, அறத்தையும் பாராது ஒருவன் தேடிய பெரும் பொருளைப் பிறர்தாம் கொண்டு போவார்கள்.


சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

(1010)

விளக்கம்:

புகழ்பெற்ற செல்வம் உடையவரது சிறிது காலத்திய வறுமை, மேகம் சிறிது காலம் வறுமை மிகுந்தாற் போன்ற இடைக்காலத் தன்மையை உடையதே.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X