அதிகார விளக்கம்: காதல் பிரிவினால் தலைவியின் உடல் அழகும் உறுப்புகளின் இயல்பான பொலிவும் குறைகின்றன. மனத்தில் ஏற்பட்ட துயரம் உடலில் வெளிப்பட்டு, கண்கள், தோள்கள் மற்றும் முகம் போன்ற உறுப்புகளின் அழகை பாதிக்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 1231 |
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் பொருள்: பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.
|
| 1232 |
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண் பொருள்: பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!
|
| 1233 |
தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் பொருள்: அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.
|
| 1234 |
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் பொருள்: அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.
|
| 1235 |
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் பொருள்: வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.
|
| 1236 |
தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக் கொடியார் எனக்கூறல் நொந்து பொருள்: வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.
|
| 1237 |
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து பொருள்: நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?
|
| 1238 |
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் பொருள்: முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!
|
| 1239 |
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண் பொருள்: (அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?
|
| 1240 |
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு பொருள்: குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!
|