அதிகார விளக்கம்: மக்களை நீதியுடனும் நேர்மையுடனும் பாதுகாத்து ஆட்சி செய்வதே நல்ல அரசனின் கடமையாகும். சட்டம், நீதி, கருணை மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி நாட்டின் அமைதியையும் வளத்தையும் உறுதி செய்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 541 |
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை பொருள்: குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.
|
| 542 |
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி பொருள்: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
|
| 543 |
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் பொருள்: அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
|
| 544 |
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு பொருள்: குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
|
| 545 |
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு பொருள்: அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.
|
| 546 |
வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின் பொருள்: ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
|
| 547 |
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் பொருள்: ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
|
| 548 |
எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் பொருள்: நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.
|
| 549 |
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் பொருள்: அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.
|
| 550 |
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் பொருள்: கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.
|