அதிகார விளக்கம்: படையின் எண்ணிக்கையைவிட ஒற்றுமை, ஒழுக்கம், துணிவு, தலைமைத்துவம் மற்றும் போர்திறனே அதன் உண்மையான வலிமையை நிர்ணயிக்கின்றன. வீரர்களின் மன உறுதியும் நாட்டிற்கான பற்றும் படையின் வெற்றிக்கு முக்கியமானவை.
| எண் | குறள் |
|---|---|
| 761 |
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை பொருள்: தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.
|
| 762 |
உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது பொருள்: தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.
|
| 763 |
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் பொருள்: பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.
|
| 764 |
அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை பொருள்: போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.
|
| 765 |
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை பொருள்: எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.
|
| 766 |
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு பொருள்: வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.
|
| 767 |
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து பொருள்: தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.
|
| 768 |
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும் பொருள்: பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.
|
| 769 |
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை பொருள்: எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.
|
| 770 |
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் பொருள்: சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.
|