For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

81. பழைமை

By Staff
Google Oneindia Tamil News

பழைமை எனப்படுவது யாதெனில் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

(801)

விளக்கம்:

"பழமை என்னும் தொடர்பின் தன்மை யாது?" என்றால் அது உண்டாகிய உரிமைத் தொடர்பை எதுவும் சிதைத்து விடாமல் காத்து வரும் நல்ல நட்பு ஆகும்.


நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

(802)

விளக்கம்:

நட்புக்கு உறுப்பாவது நெருக்கமாகப் பொருந்தும் உரிமைத் தன்மை ஆகும். அப்படிப்பட்ட உரிமைத் தன்மைக்கு இலக்கணமாக நடத்தல் சான்றோரது கடமை.


பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.

(803)

விளக்கம்:

தாம் கொண்ட நெருக்கமான உறவுத் தன்மையானது, தம் நண்பரிடத்திலும் அமைந்திரா விட்டால் அவரோடு நெடுங்காலம் பழகிய நட்பும் என்ன பயனைச் செய்யும்?


விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

(804)

விளக்கம்:

தம்மோடு கொண்ட நெருக்கமான நட்புரிமை காரணமாக ஒரு செயலைச் செய்து விட்டாலும், அதனைத் தாமும் விரும்பினவரைப் போல் இருப்பவரே நல்ல நண்பர்கள்.


பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

(805)

விளக்கம்:

நட்பாகக் கொண்டவர் நாம் மனம் விரும்பாத ஒரு செயலைச் செய்தாரென்றால் அதனை அறியாமை என்று நினைக்கக் கூடாது. நட்புரிமை என்றே நினைக்க வேண்டும்.


எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

(806)

விளக்கம்:

அறிவுடையவர் தமது தொல்லைகளின் போது உதவியாக நின்றவரின் தொடர்பை அவர் தொலைவான இடங்களுக்குப் போனாலும் கூடக் கைவிட மாட்டார்கள்.


அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

(807)

விளக்கம்:

அன்பாலே பொருந்திய நட்பை உடையவர்கள், அழிவு வரக்கூடிய ஒரு செயலைச் செய்தாலும், அவர் மீது நாம் கொண்டிருந்த அன்பு அறுந்து போகாது.


கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

(808)

விளக்கம்:

நண்பரின் குற்றம், குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு, நண்பர் குற்றம் செய்தால், அது அந்நாளில் குறையாகவே தோன்றும்.


கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

(809)

விளக்கம்:

கெடுதல் இல்லாத வழியோடு தொடர்ந்து பழகிவந்த நட்பினை எதனாலும் கைவிடாத பண்பினரை உலகத்தார் எல்லாருமே நண்பராகக் கொள்ள விரும்புவார்கள்.


விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

(810)

விளக்கம்:

பழமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்து கொள்ளும் பண்பினர், தம் பகைவராலும் விரும்பி நட்பாக்கிக் கொள்ளப்படுவார்கள்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X