அதிகார விளக்கம்: தீய பண்புகள் கொண்டவர்களின் நட்பு வெளிப்படையாக நன்மை தருவது போல தோன்றினாலும், பின்னர் தீமையையும் இழப்பையும் ஏற்படுத்தும். அவர்களின் பழக்கங்களும் செயல்களும் நம் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும்.
| எண் | குறள் |
|---|---|
| 811 |
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது பொருள்: உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.
|
| 812 |
உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என் பொருள்: தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?
|
| 813 |
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் பொருள்: இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.
|
| 814 |
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை பொருள்: போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது.
|
| 815 |
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று பொருள்: நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.
|
| 816 |
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் பொருள்: அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.
|
| 817 |
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும் பொருள்: சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.
|
| 818 |
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல் பொருள்: தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.
|
| 819 |
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு பொருள்: சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.
|
| 820 |
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு பொருள்: நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.
|