அதிகார விளக்கம்: பகை, மோதல் மற்றும் மனக்கசப்பு தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன. தேவையற்ற பகையை வளர்க்காமல், பொறுமை, அறிவு மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் மோதல்களைத் தீர்ப்பது சிறந்தது.
| எண் | குறள் |
|---|---|
| 851 |
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் பொருள்: எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.
|
| 852 |
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை பொருள்: நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.
|
| 853 |
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும் பொருள்: மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.
|
| 854 |
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் பொருள்: துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.
|
| 855 |
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர் பொருள்: தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?
|
| 856 |
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து பொருள்: பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.
|
| 857 |
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர் பொருள்: மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.
|
| 858 |
இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகலூக்கின் ஊக்குமாங் கேடு பொருள்: மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்பதாகும்.
|
| 859 |
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு பொருள்: ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.
|
| 860 |
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு பொருள்: மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.
|