அதிகார விளக்கம்: குடும்பப் பொறுப்புகளையும் சமூகக் கடமைகளையும் மறந்து தவறான ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமையாகாமல் இருக்க வேண்டும். அறிவும் ஒழுக்கமும் கொண்டவர் தன் வாழ்க்கை, குடும்பம் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்து நடப்பார்.
| எண் | குறள் |
|---|---|
| 901 |
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது பொருள்: மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.
|
| 902 |
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும் பொருள்: தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.
|
| 903 |
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும் பொருள்: மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.
|
| 904 |
மனையாளை யஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று பொருள்: தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
|
| 905 |
இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் பொருள்: தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
|
| 906 |
இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள் அமையார்தோ ளஞ்சு பவர் பொருள்: தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.
|
| 907 |
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து பொருள்: மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
|
| 908 |
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங் கொழுகு பவர் பொருள்: தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
|
| 909 |
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்கண் இல் பொருள்: அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
|
| 910 |
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல் பொருள்: சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.
|