அதிகார விளக்கம்: பொருளை நோக்கமாகக் கொண்டு உறவை நாடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் மற்றும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட உறவுகள் நிலையான அன்பையும் நம்பிக்கையையும் வழங்காது என்பதால் அறிவுடன் நடக்க வேண்டும்.
| எண் | குறள் |
|---|---|
| 911 |
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் பொருள்: அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.
|
| 912 |
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் பொருள்: ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.
|
| 913 |
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று பொருள்: பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.
|
| 914 |
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர் பொருள்: அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
|
| 915 |
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர் பொருள்: இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
|
| 916 |
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் பொருள்: தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.
|
| 917 |
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள் பொருள்: பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.
|
| 918 |
ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப மாய மகளிர் முயக்கு பொருள்: வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.
|
| 919 |
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு பொருள்: வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.
|
| 920 |
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு பொருள்: உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.
|