பிள்ளை வரம் தரும் மாங்கனித் திருவிழா - காரைக்காலில் கோலாகலம்
பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
காரைக்கால்: பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்காலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இறைவனுக்கு மாங்கனிகளை பிரசாதமாக படைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கொரோனா கால கட்டுப்பாடுகள் உள்ளதால் கோவில் வளாகத்திற்குள் மாங்கனித்திருவிழா நடைபெற்றது.
63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர்.
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்- 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை- 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி - 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.

ஆனி பவுர்ணமி
மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி ஆனி பவுர்ணமியில் மாங்கனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மாங்கனி பிரசாதம்
காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை மாற்றியது இரண்டு மாம்பழங்கள்தான். எனவேதான் இன்றைய மாங்கனி திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் இரண்டு மாம்பழங்களை படைத்து வழிபட்டு ஒன்றை பிரசாதமாக பெற்றுச் செல்வது மரபு.

பல்லக்கு புறப்பாடு
அன்று மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடும், இரவு ஸ்ரீபுனிதவதியாரும், பரமதத்தரும் தம்பதிகளாக பல்லக்கில் உலா வந்தனர். நேற்று பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவருக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது.

புனிதவதியார் திருக்கல்யாணம்
மாங்கனித் திருவிழா இந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
செவ்வாய்கிழமையன்று பரமதத்தருக்கும் ஸ்ரீபுனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது

மாங்கனி திருவிழா
பரமசிவன் அடியார் கோலத்துடன் எழுந்தருளினார். சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் காரைக்கால் அம்மையிடம் மாங்கனி வாங்கி உண்ட நிகழ்வு இன்று நடைபெற்றது. மாங்கனி பிரசாதமாக படைத்து வழிபடப்பட்டது.

பிள்ளை வரம் தரும் பிரசாதம்
வழக்கமாக இந்த விழா நடைபெறும் போது காரைக்கால் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். மாங்கனி திருவிழாவின் போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைத்து அருள்பெற்றனர். இந்த விழாவில் கலந்துகொண்டு மாங்கனி பெறுபவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. கொரோனா காலமாக இருப்பதால் இந்த ஆண்டு கோவில் வளாகத்தில் எளிமையாக நடைபெற்றது.

அம்மையாருக்கு இறைவன் காட்சி
இன்று பிற்பகலில் ஈசனுக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். நாளைய தினம் அதிகாலை 5 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.












Click it and Unblock the Notifications