அமைச்சர் பதவி, அரசியல் செல்வாக்கு தரும் குரு பகவான் - யாருக்கெல்லாம் தேடி வரும் தெரியுமா
குரு பகவான் திருவருள் பெற்றால் மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்ற அனைத்தையும் பெறலாம்.
சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. குருவின் அருள் இருந்தால் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். அமைச்சர் பதவி எதிர்பாராமல் தேடி வரும். சாதாரண பதவியில் இருந்தவர்கள் மத்திய அமைச்சராகும் யோகமும் இந்த குருவின் பார்வையாலும் சஞ்சாரத்தினாலும் ஆசியினாலும்தான் கிடைக்கும் என்கிறது ஜோதிடம்.
காசியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாறாயிரம் தேவ வருடங்கள் அதை நியமத்துடன் பூஜித்து ஈசனால் ஜீவன் எனும் பெயரால் அழைக்கப் பட்டு தேவேந்திரனுக்கே குருவாகும் வரத்தையும் பெற்றவர் குருபகவான் என காசிகாண்டம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனகாரகன் புத்திரகாரகன் என்று வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வர வாய்ப்பு இல்லை. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும்.
தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் அதிபதி குரு பகவான். சுக்ராசார்யார், வாகீசர், பீதாம்பரர், யுவர், த்ரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிகாரகர், தாராபதி, கிரஹபீடாபஹாரகர், ஸௌம்யமூர்த்தி என பல்வேறு பெயர்கள் குருபகவானுக்கு உண்டு. குருபகவானின் மனைவி தாரை. மகன்கள் பரத்வாஜர், யமகண்டன், கசன். அன்னப்பறவையும் யானையும் குருவின் வாகனங்களாகத் திகழ்வதாக புராணங்கள் கூறுகின்றன. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குரு பகவானின் நட்சத்திரங்கள் ஆகும்.

குரு பார்வையால் நன்மை
ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி,லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசார காலத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார். குரு பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9ம் இடங்களை பார்வையிடுவார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள்.

குரு தரும் பதவி
நம் கை விரல்களில் ஆள்காட்டி விரல் குரு விரல் என்றும் அதன் அடியில் உள்ள மேடு குருமேடு என்றும் அழைக்கப்படும். அந்த மேட்டில் வளையம் போன்ற அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த உன்னத பதவி, செல்வாக்கு, சொல்வாக்கு கொண்டவர்களாய்த் திகழ்வார்கள். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.

குருவின் தசா காலம்
குரு தசை 16 வருடங்கள் கொண்டது. குரு தசை ஒருவருக்கு நடக்கும் போது 16 ஆண்டுகள் அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நல்லது கெட்டதை நடத்தி வைப்பார் குரு பகவான். ஜோதிடத்தில் முழு சுப கிரகம் எனும் அமைப்பையும் பெருமையும் பெற்ற ஒரே கிரகம் இதுவே. வாழ்வின் ஆதாரமான தனம், குழந்தை வரம் இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு ஒருவரே.

குரு தரும் யோகங்கள்
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ராசி, அம்சத்தில் பலம் பெற்ற குரு அமர்ந்து விட்டால் அந்த ஜாதகருக்கு அந்த பலமே போதுமானது. கௌரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாகவே தேடி வரும். ஆன்மிக விஷயங்களில் ஜாதகர் ஆத்மார்த்தமாக ஈடுபடுவார். குரு பகவான் திருவருள் பெற்றால் அமைச்சராகும் யோகம் தேடி வரும், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வித்துறையில் உயர் பதவி கிடைக்கும்.

குரு எங்கு இருந்தால் பலன்
குரு முழு சுப கிரகமாக இருப்பதால் அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் உண்டு. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது சிறப்பல்ல.

குருவின் அம்சங்கள்
குரு பகவான் கருணைக்கடல், நீதிமான், களங்கமற்றவர் குருபகவான். வஜ்ராயுதம் தாங்கிய இவர் கற்பக விருட்சம் போல் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குபவர். வியாழக்கிழமையும் 3, 12, 21, 30ம் தேதிகளும் மஞ்சள் நிறமும் குருவின் அம்சங்களாகக் கருதப்படுகின்றன. குரு அருள் இல்லையேல் திருவருள் இல்லை. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று வாக்குகள் உண்டு.

குரு பகவான் வழிபாடு
குருவருள் கிடைக்க சிவனுக்கே குருவான முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம். திருச்செந்தூர், சுவாமிமலை ஆலயங்களுக்கு சென்று வழிபட குரு அருள் கிடைக்கும். வியாழக்கிழமை நாளில் நவகிரக குரு பகவானுக்கும், சிவ ஆலயங்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வணங்கலாம். வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, மாலை ஐந்து மணிக்கு மேல் வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வைத்து குரு பகவானை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கி நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications