திருவாதிரை: தில்லை சிதம்பர நடராஜர் முதல் நெல்லை செப்பறை அழகிய கூத்தர் வரை ஆருத்ரா அபிஷேகம்
மார்கழி திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிதம்பரம்: மார்கழி திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். இன்றைய தினம் மார்கழி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு சிவ ஆலயங்களில் நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மார்கழி திருவாதிரையை முன்னிட்டு இன்றைய தினம் சிவபெருமானின் பஞ்சசபைகளிலும் இன்று மகா அபிஷேகம் நடைபெற்றது. பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிரசபை, சித்திர சபை என நடராஜர் நடனமாடும் பஞ்சபைகளிலும் இன்று ஏராளமான பக்தர்கள் ஆருத்ரா அபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும். திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். மாங்கல்ய தோஷங்கள் நீங்கும், பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆருத்ரா அபிஷேகம்
நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறை திருமஞ்சனம் நிகழ்த்தப்படுகிறது. சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நாட்களில் நிகழ்த்தப்பெறும் திருமஞ்சனங்கள் நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுவன. மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி யில் திருமஞ்சனம் நடக்கும்.
ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். இந்த மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு பிரம்மமுகூர்த்த நேரத்தில் பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

குளிர்விக்க அபிஷேகம்
நடராஜருக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது உஷ்ணம் மிகுந்த நட்சத்திரமாகும். அதோடு வெம்மை மிகுந்த சுடலையின் சூடான சாம்பலை திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியையும் ஏந்தியிருப்பதால் நடராஜர் கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கிறார். இந்த வெப்பத்தை தணிக்கவே வருடத்திற்கு ஆறுமுறை அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

திருவாதிரை திருவிழா
மார்கழி திருவாதிரை தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதிகாலை முதலே சிவ ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடராஜருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டு தரிசித்த பக்தர்கள் தாண்டவ தீபாராதனையைக் கண் குளிர மெய்சிலிர்க்க தரிசனம் செய்தனர்.

களி நைவேத்தியம்
திருவாதிரை திருநாளை முன்னிட்டு அதிகாலையில் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். களி நைவேத்தியம் படைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலயம் பொற்சபையாகவும் பஞ்ச பூத தலங்களில் ஆகாய ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. இன்றைய தினம் பிற்பகலில் ஆருத்ரா தரிசனம் அற்புதமாக நடைபெற உள்ளது.

குற்றாலம் சித்திரசபை
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குற்றாலநாதர் ஆலயம் அருகில் அமைந்துள்ள சித்திரசபையில் நடராஜருக்கு இன்றையதினம் மகாஅபிஷேகமும் தாண்டவ தீபாராதனையும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கண் குளிர தரிசனம் செய்தனர். திருவாலங்காடு ரத்தினசபையிலும் மதுரை வெள்ளியம்பலத்திலும் ஆருத்ரா அபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. நெல்லையப்பர் ஆலயத்தில் நடைபெற்ற தாண்டவ தீபாராதனையை பல்லாயிரம் பேர் தரிசனம் செய்தனர்.

தாமிரசபையில் தாண்டவ தரிசனம்
நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் வயல்வெளிகளுக்கு இடையே செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது. இக்கோவிலில் சிவபெருமான், தன்னுடைய நடன காட்சியை மகாவிஷ்ணு, அக்கினிபகவான், அகஸ்தியர், வாமதேவ ரிஷி, மணப்படை மன்னன் ஆகியோருக்கு அளித்தார். இந்த ஆலயத்திலும் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இன்று அதிகாலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications