For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரஸ்வதி பூஜை: கணவன் மனைவி ஒற்றுமை சொல்லும் பிரம்மா சரஸ்வதி

Google Oneindia Tamil News

சென்னை: சரஸ்வதிக்கும் பிரம்மாவிற்கும் ஏற்பட்ட சண்டை சாபத்திலும் கோபத்திலும் முடிந்தது. சத்யலோகத்தில் சரஸ்வதி சொன்னதைக் கேட்டு பிரம்மா மறுக்க சரஸ்வதி கோபப்பட்டு பேச பெரிய சண்டையில் முடிந்தது. அந்த கோபத்தில் சரஸ்வதிக்கு சாபம் கொடுத்தார் பிரம்மா. கணவன்-மனைவிக்கு இடையே கருத்தொற்றுமை இருக்க வேண்டும். இல்லையேல், விட்டுக் கொடுத்து செல்லும் தன்மையாவது இருக்க வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் கருத்து வேறுபாட்டால் பிரிய வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதையே இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

சத்தியலோகத்தில் பிரம்மாவும், சரஸ்வதியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சரஸ்வதி, சுவாமி! ஒருவர் பேசும் வார்த்தைதான் அவரின் பண்பைக் காட்டுவதில் முதன்மையாக இருக்கிறது. அவரது உயர்வுக்கும் அதுவே காரணமாக இருக்கிறது என்றார். அதைக் கேட்ட பிரம்மா, இல்லை தேவி.. ஒருவரின் பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு, அவரது உண்மையான பண்பைக் கண்டறிய முடியாது. தற்போது எவரிடமும் உண்மையான பேச்சு இல்லை. தவறான எண்ணங்களை தங்களுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, வெளியில் நல்லவர்களைப் போல் வேடமிட்டுப் பேசுபவர்களே அதிகம். எனவே பேச்சுக்கு எந்த மதிப்புமில்லை' என்றார்.

The significance of Maa Saraswati Vani in means Language and speech

பிரம்மாவின் கூற்று சரஸ்வதிக்கு கோபத்தை உண்டாக்கியது. 'நீங்கள் வேண்டுமென்றே நான் சொன்னதை மறுத்துப் பேசுகிறீர்கள். உங்கள் பேச்சில் உண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை' என்றார்.

'சரஸ்வதி! ஒருவருடைய பேச்சை விட அவரின் நடை, உடை, நடத்தை போன்றவைகளே, அவருடைய பண்புகளைக் காட்டும் கண்ணாடியாக இருக்கின்றன. ஆனால், பேச்சு அப்படியில்லை. சில வேளையில், நாம் விளையாட்டாகச் சொல்லும் வார்த்தைகள் கூட பிறருக்குத் தவறாகத் தோன்றும். நாம் நல்லவராக இருந்தாலும், நம்முடைய பேச்சு அவர்களிடம் நம்மைத் தீயவர்களாக்கி விடும்' என்றார் பிரம்மா.

இதைக்கேட்டு மேலும் கோபமடைந்த சரஸ்வதி, 'பேச்சுத் திறனுக்கும், அனைத்துக் கலைத்திறன்களுக்கும் கடவுளான என்னைக் கோபப்படுத்த வேண்டுமென்கிற எண்ணத்தில்தான் நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள்' என்றார்.

பிரம்மாவும் விடுவதாக இல்லை. 'பேசும் பேச்சில் விளையாட்டாய்ச் சொல்லும் வார்த்தைகள் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அதேபோல, கனிவான வார்த்தைகள் கல் மனம் கொண்டவரையும் கரைத்து அன்புடையவர்களாக்கி விடுகின்றன. பேச்சினால், இன்ப, துன்பங்கள்தான் அதிகம் ஏற்படுகின்றன. அதன் மூலம் பண்புகள் எதுவும் தெரிவதில்லை. பொதுவாக, உன்னைப் போன்ற பெண்களுக்கு இது போன்ற எந்த உண்மையும் புரிவதில்லை' என்றார்.

ஒட்டுமொத்தமாக பெண்களைப் பற்றி பிரம்மா கூறியதும் சரஸ்வதிக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. 'பெண்களைப் பற்றி பெருமையாக பேசுகிறீர்கள். ஆனால் அவர்கள் பேசினால் 'வாயாடி' என்கிறீர்கள். ஆண்கள் மட்டும் எதையும் பேசலாம், எதையும் செய்யலாம். பெண்கள் செய்யக்கூடாது. அனைத்து ஆண்களுக்கும் தான் சொல்வதே சரி, தான் செய்வதே சரி என்ற எண்ணம்தான் அதிகமாக இருக்கிறது. ஆண்கள் சொல்வதற்கெல்லாம் பெண்கள் 'ஆமாம்' போட வேண்டும். இல்லையென்றால் அவர் சரியில்லாதவளாகி விடுவாள். படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கே அந்த எண்ணமிருக்கும் போது, அவர் படைத்த ஆண்களுக்கும் அந்த எண்ணம் இல்லாமலா இருக்கும்?' என்றார்.

தன்னைப் பற்றிச் சொன்னது மட்டுமில்லாமல், தன்னுடைய படைப்பையும் சேர்த்துக் குறை சொல்லிய சரஸ்வதியின் மேல் பிரம்மாவுக்கு கோபம் வந்தது. 'சரஸ்வதி! நீ எந்தப் பேச்சை மேலானது என்று நினைத்து, என்னைக் குறைவாகப் பேசினாயோ, அந்தப் பேச்சு இல்லாதவளாகப் பூலோகத்தில் பிறந்து துன்பப்படுவாய்' என்று சாபமிட்டார்.

இப்போதும் சரஸ்வதியின் கோபம் குறையவில்லை. 'ஆண்கள் சொல்வதை பெண்கள் அப்படியே கேட்க வேண்டும். இல்லையேல், அவர்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க வேண்டும் என்பதில் படைப்புக் கடவுளான பிரம்மாவும் விதிவிலக்கில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். நீங்கள் எனக்குக் கொடுத்த சாபத்தால் நான் எவ்வளவு துன்பப்பட்டாலும் சரி, நான் உங்களிடம் சாப விமோசனம் கேட்கப் போவதில்லை. இனி நீங்களும் நான் இல்லாமல், எனக்குக் கொடுத்த சாபத்தை நினைத்துத் துன்பமடைவீர்கள்' என்று சொல்லி விட்டுப் பூலோகத்தை நோக்கிச் சென்றார்.

சரஸ்வதி தன் தவறுக்காக வருந்தாமல் நடந்து கொண்டது, பிரம்மாவுக்கு கோபத்தை அதிகரித்தது. ஆனால் அவர் மன அமைதிக்காக தியானத்தில் அமர்ந்தார்.

பிரம்மாவின் சாபப்படி சரஸ்வதி, ஒரு ஏழைக் குடும்பத்தில் வாய் பேச முடியாதவளாக பிறந்து, வாணி என்ற பெயரில் வளர்ந்தாள். வாய் பேச முடியாவிட்டாலும், வாணி யாழ் இசைப்பதில் சிறந்தவளாக இருந்தாள். தினமும் அவள் அருகிலுள்ள சிவபெருமான் கோவில்களுக்குச் சென்று யாழை மீட்டி, தனக்கு பேச்சுத் திறன் தரும்படி இறைவனை வேண்டி வந்தாள்.

ஒருமுறை வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காடு சென்ற வாணி, அங்கிருந்த சிவபெருமானை யாழை மீட்டி வழிபட்டாள். அப்போது, 'வாணியே, உனக்குப் பேச்சுத் திறன் இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். கூடிய விரைவில் உனக்குப் பேச்சுத்திறன் கிடைக்கும்' என்று அம்பாளின் அசரீரி ஒலித்தது.

தன் காதுகளுக்குக் கேட்ட அன்னையின் குரல், தான் மீட்டிய யாழில் இருந்து வந்த இசையைக் காட்டிலும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று நினைத்த வாணி, தான் மீட்டிய யாழை மூடி வைத்தார். பின்னர் இறைவனையும், அம்பாளையும் வணங்கி விட்டு, அடுத்த சிவன் கோவிலுக்குச் சென்றார்.

இந்த நிலையில், பிரம்மா உலக நலன்களுக்கான வேள்வி ஒன்றை நடத்த விரும்பினார். வேள்வியில் தனது மனைவியும் உடனிருக்க விரும்பினார். ஆனால் அவரை சாபமிட்டு பிரிந்ததை எண்ணி வருந்தினார். பின்னர் கயிலாயம் சென்று சிவபெருமானிடம், தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டினார்.

சிவபெருமான் 'விரைவில் சரஸ்வதி உங்களுடன் சேர்வாள். வேள்விக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்' என்று கூறி பிரம்மாவை அனுப்பிவைத்தார். பின்னர் சிவன், பார்வதியுடன் மாறுவேடத்தில் வாணி இருக்கும் இடம் நோக்கிச் சென்றார். இறைவனும், இறைவியும் அடியவர் களைப் போல் வேடம் தரித்திருந்தனர்.

பின்னர் வாணியிடம் சென்று, தங்களுக்கு யாழ் மீட்டிக் காட்டும்படி கேட்டனர். வாணியும் ஈசனின் அடியவர்களுக்காக யாழ் மீட்டினார். இசையை கேட்டு மகிழ்ந்த இறைவனும், இறைவியும், 'வாணி! உன் யாழ் இசையோடு உன் பாடலையும் கேட்க விரும்புகிறோம். வாய் திறந்து பாடு' என்றனர்.

அதைக் கேட்ட வாணி, தனக்குப் பேச்சு வராது என்று செய்கையால் அவர்களுக்கு உணர்த்தினாள். ஆனால் அடியவர் வேடத்தில் இருந்த ஈசனும், அம்பாளும், 'உன்னால் அருமையாகப் பாட முடியும்' என்று சொல்லி அவரைப் பாடச் சொல்லி வற்புறுத்தினர்.

இதையடுத்து வாணி பாடுவதற்காக முயற்சித்தாள். இறைவன் அருளால் அவளுக்குக் குரல் வந்தது. இறைவனை வாழ்த்தி அருமையாகப் பாடி முடித்தாள். குரல் வந்ததும் தான், தான் சரஸ்வதி என்பதும், தன் கணவர் பிரம்மாவால் சாபம் பெற்றதும் நினைவுக்கு வந்தது. மேலும் தன் முன்பு இருப்பது சிவபெருமானும், பார்வதியும் என்பதையும் அறிந்து அவர்களை சரஸ்வதி தேவி வணங்கினார்.

அவரை வாழ்த்தி ஈசன், 'கலைவாணியே! நீ என்னை வாழ்த்திப் பாடிய இந்த இடம் உனது பெயருடன் சேர்த்து அழைக்கப்படும். (முதலில் 'வாணியம்மைபாடி' என்று அழைக்கப்பட்டு, தற்போது வாணியம்பாடி என்று அழைக்கப்படுகிறது) இந்தத் தலத்தில் உனக்கும் தனியாக ஒரு சன்னிதி அமையும்' என்று அருளினார்.

சாப விமோசனம் பெற்ற பிறகும் பிரம்மாவின் மீதான கோபம் சரஸ்வதிக்கு குறையவில்லை. கோபம் குறையாமல் எப்படி அவர் நடத்தும் வேள்வியில் கலந்து கொள்வார். அதனால் விஷ்ணுவை அழைத்து சரஸ்வதியை சமாதானப்படுத்தும்படி சிவபெருமான் வேண்டிகோள் விடுத்தார். அவரும் சரஸ்வதியிடம் பேசி அவரின் கோபத்தைக் குறைத்தார். இதையடுத்து பிரம்மாவுடன் உலக நன்மைக்காக வேள்வி செய்ய புறப்பட்டார் சரஸ்வதி.

English summary
Vani in Sanskrit and Hindi means Language and the speech of power associated with speaking. Since Goddess Saraswathi represents Knowledge, Learning and Wisdom, she is also the force behind the power of speech and language, hence referred to as “Vani Puja For Knowledge Education, Athitheeshwarar Shiva Temple, Vaniyambadi,Near Vellore, TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X