For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்

சென்னை திருவான்மியூரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம் செய்தனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அவசர யுகத்தால் ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசிக்க இயலாதவர்கள் கோபுரத்தை தரிசனம் செய்தாலே போதும் கோடி புண்ணியம் கிடைக்கும். அத்தகைய கோபுர தரிசனம் இன்று சென்னை திருவான்மியூரில் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு கிடைத்தது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவினை பல்லாயிரக்காண பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. 1300 ஆண்டுகள் பழமையானது. பிறந்தால் இறந்தால் கண்டால் நினைத்தால் முக்தி தருகிற திருத்தலம் திருவான்மியூர். அகத்தியர், வால்மீகி, சம்பந்தர், நாவுக்கரசர் வழிபட்ட பெருமையுடைய தலம். இந்தத் தலத்தில் இந்தாண்டு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரம், ஐந்துநிலை கிழக்கு ரிஷிகோபுரம், மேற்கு ஐந்துநிலை மேற்கு கோபுரம் ஆகிய கோபுரங்களில் பராமரிப்புத் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. கோயில் திருப்பணிகள் யாவும் நிறைவுபெற்று கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 2ஆம் தேதி தொடங்கின.

இன்று காலை கயிலாய வாத்தியங்களும் மேள தாளங்களும் முழங்க, வேதமந்திரங்களும் திருமுறைகளும் ஒலிக்க கலசங்களில் புனித நீரைச் சுமந்துகொண்டு சிவாச்சாரியார்கள் கோபுரங்களின் உச்சியை அடைந்தனர். சுவாமி, அம்பாள் கோபுரங்கள், ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அத்தனை கோபுரங்களிலும் அமைந்துள்ள கலசங்களில் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை சரியாக 9.45 மணிக்கு அனைத்துக் கோபுரக் கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டதை கூடியிருந்த பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

பழமையான சிவ தலம்

பழமையான சிவ தலம்

திருவான்மியூர் தலத்தில் பிறந்தாலும் இறந்தாலும், இத்தலத்தைக் கண்டாலும் நினைத்தாலும் முக்தி என்கிறது தலபுராணம். மருந்தீஸ்வரர் ஆலயம் தொண்டை நாட்டில் பாடல்பெற்ற 32 திருத்தலங்களுள் ஒன்று. இங்கே வன்னி மரத்தடியில் வான்மீகி முனிவர் கண்டெடுத்த சுயம்புலிங்கமே, இங்கு அருளும் மூலவர்.

திருவான்மியூர் திருத்தலம்

திருவான்மியூர் திருத்தலம்

1,300 ஆண்டுகள் பழைமையைக் கொண்டு திகழும் இந்தத் திருத்தலம் அப்பர், சம்பந்தர் ஆகிய சமயக்குரவர்களும் சேக்கிழார், அருணகிரிநாதர் போன்ற மகான்களும் போற்றிப் பாடிய சிறப்பை உடையது. மார்க்கண்டேயர் சொன்னதன்படி தென்திசை பயணித்த வால்மீகி முனிவருக்கு, கிழக்குக் கடற்கரையோரத்தில், `நான் இங்கே இருக்கிறேன்' என அசரீரி மூலம் ஒலித்து வன்னிமரத்தடியில் ஈசன் உமையம்மையோடு திருக்காட்சி அருளிய தலம் என்பதால் திருவான்மியூர் என்று பெயர்பெற்றது.

மருந்தீஸ்வரர்

மருந்தீஸ்வரர்

கயிலாயத்திலிருந்து தென்திசை வந்த அகத்திய முனிவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அவர் இத்தலத்தில் சிவனை நோக்கி வழிபாடு செய்ய வன்னிமரத்தடியில் உமையோடு இறைவன் தோன்றி அவரது நோய் நீக்கியதோடு உடலில் உண்டாகும் நோய்கள் குறித்தும் அதற்கான மருந்துகளாகும் மூலிகைகள் குறித்தும் உபதேசம் செய்தார். பிறவிப்பிணி தீர்க்கும் ஈசன் உடல்பிணிக்கும் மருந்துரைத்த தலம் ஆதலால் இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

தீராத நோய் தீரும்

தீராத நோய் தீரும்

சோழர்கள், பல்லவர்கள், விஜயநகரப் பேரரசர்கள் எனப் பலரும் இத்திருக்கோயிலுக்குத் தொண்டாற்றி உள்ளனர். திருக்கோயில் வழிபாட்டில் மிகவும் ஈடுபாடுகொண்ட கங்கைகொண்ட சோழன் எனப்படுகிற ராஜேந்திர சோழன். அடிக்கடி இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டுள்ளான். கடும்நோய் நீங்குதல் வேண்டி இத்தலம் வந்து மருந்தீஸ்வரரை வழிபட்டு உடல்நலம் பெற்றுள்ளான்.

சாபம் தீர்க்கும் தீர்த்தங்கள்

சாபம் தீர்க்கும் தீர்த்தங்கள்

இறைவன் சிரசில் பொழியும் கங்கையிலிருந்து விழுந்த ஐந்து துளிகள் ஜன்மநாசினி, காமநாசினி, பாபநாசினி, ஞானதாயினி, மோட்சதாயினி என பஞ்ச தீர்த்தங்களாய் இத்தலத்தில் தோன்றின. பஞ்ச தீர்த்தங்களில் சூரியன், பிரம்மன், யமன், இந்திரன், ராமர், சந்திரன் ஆகியோர் நீராடி சிவபூசை செய்து பாவம் நீங்கப் பெற்றதாய் தலவரலாறு கூறுகிறது. பஞ்ச தீர்த்தங்களில் பெரிய தெப்பக்குளமான பாபநாசினியும், சித்திரைக்குளமான ஜன்மநாசினியும் மட்டும் தற்போது இருக்கின்றன.

பால்வண்ணநாதர்

பால்வண்ணநாதர்

காசிபமுனிவரால் சாபம் பெற்ற காமதேனு, மருந்தீஸ்வரர் திருமேனியில் பால் தினம் சொரிந்து பாவம் நீங்கப் பெற்றது. காமதேனு கால்குளம்பு பட்டதால் உண்டான வடுவை லிங்க சிரசில் இன்றும் நாம் காணலாம். காமதேனு பால் சொரிந்ததால் வெண்மையாகக் காட்சியருளும் இந்த ஈசனை பால்வண்ணநாதர் என்கின்றனர். திருப்பாற்கடலில் தேவர்கள் கடைந்தெடுத்த அமுதத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் மூலவருக்கு அமுதீசர் எனவும் பெயர். நான்கு வேதங்களும் வணங்கித் துதித்துப் பூஜித்ததால் இவரை `வேதபுரீஸ்வரர்' என்று அழைக்கின்றனர். பஞ்சலிங்கங்கள் நிறுவப்பெற்றுள்ளன. இதில் பெரிய லிங்கம், கேதாரீஸ்வரர். இவரை கேதார கௌரி விரதம் இருக்கும் பெண்கள் வழிபடச் சிறப்பு.

சுக்கிரவார அம்மன்

சுக்கிரவார அம்மன்

அம்பாள் திரிபுர சுந்தரி, நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரவார அம்மன் உட்புறப்பாடு நடைபெறுகிறது. தியாகராசர் உலோகத் திருமேனி உற்சவராக விளங்குகிறார். பௌர்ணமி மற்றும் விசேஷ நாள்களில் இங்கு நடைபெறும் தியாகராஜர் திருவீதியுலாவும் அவரது 18 திருநடனக் காட்சிகளும் சிறப்பு வாய்ந்தது.

English summary
Thiruvanmiyur is located in Chennai and the temple is very close to the shores of the Bay of Bengal. This ancient temple is believed to be more than 1300 years old. Devotees believe that by worshiping the lord here, they will be cured from their prolonged illness. It is also believed that by circumambulating the Vanni tree devotees will be relieved off their sins and can obtain salvation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X