தை மாத ராசி பலன் 2022: மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?
சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் பிறந்து விட்டது. இந்த மாதத்தில் மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது. அதிர்ஷ்டம் தேடி வருமா? சுபகாரியங்கள் நடைபெறுமா? என்று தை மாத ராசி பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
தை மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சுக்கிரன், மகர ராசியில் சூரியன், சனி, புதன், கும்ப ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
கிரகப்பெயர்ச்சிகளைப் பார்த்தால் 1ஆம் தேதி மகர ராசியில் புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. 3ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்கிறார். 16ஆம் தனசு ராசியில் சுக்கிரன் வக்ரம் முடிகிறது. 22ஆம் புதன் வக்ர முடிவுக்கு வருகிறது. 30ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.

சுப விரைய செலவுகள்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு லாப ஸ்தானத்தில் கேது ராசிக்குள் சனி, சூரியன், புதன், இரண்டாம் வீட்டில் குரு ஐந்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சுப விரைய செலவுகள் ஏற்படும். அலைச்சல்களும் அதனால் சோர்வும் ஏற்படும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். தொழில் அபிவிருத்தி அடையும் பணப்புழக்கம் அதிகரிக்கும். தூக்கமின்மை பிரச்சினை வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் பண முதலீடு செய்யும் போது கவனம் தேவை. பண புழக்கம் நன்றாக இருக்கும் அதே நேரத்தில் பணம் விரையமாக வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.

ஆரோக்கியத்தில் அக்கறை
அலுவலகத்தில் உங்கள் வேலையில் கவனம் தேவை. அரசு வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். கடன் பிரச்சினை நீங்கும். அடகு வைத்த நகையை மீட்பீர்கள். மாத பிற்பகுதியில் நிறைய நன்மைகள் நடைபெறும் சொத்து பிரச்சினைகளில் சுமூக முடிவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் பண வரவு அதிகரிக்கும். திருமண சுப காரியம் நடைபெறுவதில் தடைகள் ஏற்படலாம் கவனம் தேவை. சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடவும். ரத சப்தமி நாளில் சூரிய வழிபாடு செய்வது நல்லது.

முதலீடுகளில் கவனம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதத்தில் கிரகங்களின் பயணத்தைப் பார்த்தால் ராசிக்குள் குரு, நான்காம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் சூரியன், சனி, புதன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் உங்களுக்கு மாற்றம் நிச்சயம் உண்டு. 12ஆம் இடத்தில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. வேலை தொழிலில் ரகசியங்களைக் காப்பது நல்லது. புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். வாக்குவாதம் தவிர்க்கவும்.

மருத்துவ செலவுகள் வரும்
சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வாங்குவது நல்லது. சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் சுப காரியங்கள் நடைபெறும். திருமண சுப காரியம் நடைபெறும் யோகம் கை கூடி வரும் . தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவியர்கள் படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் செலவு செய்வீர்கள். நன்மைகளும் மாற்றங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. கோதுமையில் செய்த உணவுகளை பசுவிற்கு சாப்பிட தர நன்மைகள் நடைபெறும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய நன்மைகள் நடைபெறும்.

வேலையில் புரமோசன்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதத்தில் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு, மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன், சனி, புதன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளதால் பதவிகள் தேடி வரும். வேலையில் புரமோசன் கிடைக்கும். வேலையில் சிறந்து விழங்குவீர்கள். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய பதவி கிடைக்கும். பண பரிவர்த்தனை நன்றாக இருக்கும். தகவல் தொடர்பு சிறப்படையும். அலுவலகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்மைகள் நடைபெறும்
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளிப்படையாக பேசுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. புது வீடு கட்ட வாய்ப்பு உள்ளது. சம்பள உயர்வு வரும். சம்பள உயர்வோடு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். முன்னேற்றம் அதிகரிக்கும். மூத்த சகோதர சகோதரிகளுக்கு உதவி கிடைக்கும். தொழில் அபிவிருத்தி அடையும். தாய்வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். ஆன்லைன் பண பரித்தனைகள் வெற்றியில் முடியும். பொருளாதார ஏற்றங்கள் நிறைந்த மாதம். பண வரவுக்கு பஞ்சமிருக்காது. ரத சப்தமி நாளில் திருப்பதி ஏழுமலையானை வணங்கவும். குல தெய்வ கோவிலுக்கு போய் வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.