"இன்னும் 24 மணி நேரத்தில்"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (24)

Subscribe to Oneindia Tamil

- சுதா அறிவழகன்

துள்ளி எழுந்து பைக்கை நோக்கி ஓடினான் சுனில்.. சென்னையில்தான் இருக்கிறாள் என் ப்ரீத்தி.. என் ப்ரீத்தியை நான் இந்த முறை விட்டு விடக் கூடாது.. மீட்டே ஆக வேண்டும்.. மனம் படபடவென துடிக்க பைக்கை கிளப்பி வேகமாக ஸ்டேஷனுக்கு விரைந்தான்.

அந்தக் காலை நேரத்திலேயே ஸ்டேஷன் பரபரப்பாக இருந்தது. ஜெயசிங் ஏற்கனவே வந்திருந்தார். அவருடன் சில போலீஸார் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். வியர்க்க விறுவிறுக்க வந்த சுனில், ஜெயசிங்கின் டேபிளுக்குப் போனான்.

அவனைப் பார்த்த ஜெயசிங், அங்கிருந்த ஒரு இருக்கையில் அமருமாறு சைகை காட்டி விட்டு தனது ஆலோசனையைத் தொடர்ந்தார். சிறிது நேர ஆலோசனைக்குப் பின்னர் சுனிலை அழைத்தார் ஜெயசிங்.

"சுனில், ப்ரீத்தி சென்னையில்தான் அடைச்சு வைக்கப்பட்டிருக்காங்க. சில துப்பு கிடைச்சிருக்கு.. முக்கியமான துப்பு. அதை வைத்து சில ஸ்பெஷல் டீம் பார்ம் பண்ணி தேடுதலை முடுக்கி விட்டிருக்கோம். இன்னும் 24 மணி நேரத்தில் ப்ரீத்தியை மீட்டு விடலாம்"

"ஸார் 24 மணி நேரம் ரொம்ப ஜாஸ்தி சார். அந்தப் பைத்தியக்காரங்க ப்ரீத்தியை அடிச்சிருக்காங்க சார்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீட்கணும் சார். நானும் வர்றேன் சார். என்னையும் யூஸ் பண்ணிக்கங்க" என்று சீட்டின் நுனியில் இருந்து கொண்டு அழாத குறையாக கெஞ்சினான் சுனில்.

"டோன்ட் ஒர்ரி சுனில். இந்த முறை ஸ்கெட்ச் தப்பாது.. நிச்சயம் மீட்டு விடலாம்"

மேசையில் இருந்த போன் ஒலித்தது. எடுத்துக் காதில் வைத்தார் ஜெயசிங்.

"எஸ்.. சொல்லுங்க ராஜேஷ்.. ஓ.. அப்படியா.. எத்தனை மணிக்கு.. கரெக்டான இடம் என்ன.. சரி.. நீங்க அந்த நம்பரை பாலோ பண்ணுங்க.. நான் மத்ததைப் பாத்துக்கிறேன்"

"சுப்பு.. இங்க வாங்க"

"சார்!"

"விஷ்ராந்தி ஜவுளிக்கடைக்கு யார் போயிருக்கா"

"குமரேசன் போயிருக்கார் சார்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் விவரம் சேகரிச்சு கால் பண்ணிடுவார் சார்"

"ஓகே.. இன்னொரு வேலை பண்ணனும்.. குமரேசனுக்கு போன் பண்ணி.. பக்கத்துல இருக்கிற சிசிடிவி புட்டேஜ் என்னென்ன இருக்கோ அத்தனையும் கலெக்ட் பண்ணிட்டு வரச் சொல்லுங்க. முக்கியமாக கடைக்கு வெளியே இருக்கிற புட்டேஜும் வேணும்"

"எஸ். சார்"

"சுனில்.. நீங்க கிளம்புங்க.. நான் உங்களுக்கு கால் பண்றேன்.. தைரியமா போங்க. நிச்சயம் ப்ரீத்தி கிடைச்சுருவாங்க"

"ஓகே சார்"

கொஞ்சம் நம்பிக்கை துளிர்க்க வெளியே வந்தான் சுனில். செல்போனில் அம்மாவைத் தொடர்பு கொண்டான்.

"அம்மா.. ப்ரீத்தி இருக்கிற இடத்தை கிட்டத்தட்ட நெருங்கிட்டாங்கம்மா.. சீக்கிரமே கண்டுபிடிச்சுரலாம்னு இன்ஸ்பெக்டர் சொல்லிருக்கார். எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு.. நான் இப்ப ஸ்டேஷன்லதான் இருக்கேன். வீட்டுக்கு வந்து விபரமா சொல்றேன்" என்று கூறி விட்டு பைக்கை கிளப்பி வீட்டுக்கு புறப்பட்டான்.

 Nilavukku Neruppendru Peyar Tamil series episode 24

--

திருவொற்றியூர் நெடுஞ்சாலை.. கிராஸ் ரோட் ஜங்ஷன்.. விஷ்ராந்தி ஸ்டோர்ஸ்.. 5 மாடிகளில் பிரமாண்டமாக காட்சி அளித்தது அந்த ஜவுளிக்கடை.. கடை அல்ல.. கடல் என்று விளம்பரம் செய்கிறார்களே.. நிஜம்தான் போல என்று நினைக்க வைக்கும் அளவுக்கு பிரமாண்டமான கடைதான்.

கடைக்கு வெளியே இருந்த பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தினார் குமரேசன். கடைக்கு முன்புறம் சிசிடிவி கேமரா எங்கிருக்கிறது என்று பார்த்தார். பின்னர் அருகில் உள்ள கடைகளில் சிசிடிவி கேமராக்கள் எங்கிருக்கின்றன என்று ஒரு நோட்டம் விட்டார். பின்னர் கடைக்குள் நுழைந்தார்.

உள்ளே நுழைந்த குமரேசன்.. கடையின் வரவேற்பாளரிடம் "மேனேஜரை பார்க்க வேண்டும்.. நான் போலீஸ்" என்றார்.

வரவேற்பாளர், மேனேஜர் அறையை சுட்டிக் காட்டி அங்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். மேனேஜர் அறைக்குப் போன குமரேசன், கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தார். அங்கிருந்தவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அடையாள அட்டையைக் காட்டினார்.

மேனேஜர் பரமசிவன்.. எழுந்து குமரசேனை கை குலுக்கி அமரச் சொன்னார்.

"மிஸ்டர் பரமசிவன்.. ஒரு தகவலுக்காக இங்கே வந்துள்ளேன். ஒரு திருமணம் ஆகாத இளம் பெண் கடத்தப்பட்டுள்ளார். அவர் குறித்த ஒரு வீடியோ எங்களுக்குக் கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் உங்களது கடையின் பெயர் பொறித்த பை இருந்தது. அந்தப் பையை வைத்து ஏதாவது துப்பு கிடைக்குமா என்று அறிய இங்கு வந்துள்ளேன்"

"அப்படியா சார்.. .ஆனால் ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் இடம் சார் இது. எப்படி வெறும் பையை வைத்து அடையாளம் காண்பது என்று தெரியலையே சார்"

"உண்மைதான்.. ஆனால் ஏதாவது ஒரு நம்பிக்கை தரும் தகவல் கிடைக்காதா என்றுதான் இங்கு வந்துள்ளேன். முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள்"

மொபைலை ஆன் செய்து, அதை பரமசிவனிடம் நீட்டினார் குமரேசன். போனை வாங்கிய பரமசிவன் அந்த வீடியோவை பார்கக ஆரம்பித்தார். ப்ரீத்தி பேச ஆரம்பித்த விநாடி முதல் முழுமையாக பார்த்தார். கடையின் பை வரும் பகுதி வந்தபோது வீடியோவை நிறுத்தி விட்டு அதை ஜூம் செய்து உற்றுப் பார்த்தார். சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவரது முகத்தில் திடீரென ஒரு தெளிவு பிறந்தது.

"சார் இது ஜஸ்டின் பை சார்"

"ஜஸ்டினா.. அது யார்"

"சார் இந்தப் பையை நாங்க யூஸ் பண்றதில்லை. இந்தப் பை போன மாசம் நாங்க ஆர்டர் கொடுத்து வந்திருந்த பை. ஜின்ஸி பிரிண்டர்ஸிடமிருந்து வந்தது. மொத்தம் 10,000 பை ஆர்டர் கொடுத்திருந்தோம். அதற்கான சாம்பிளை எடுத்துக் கொண்டு அந்த பிரிண்டர்ஸின் நிர்வாகியான ஜஸ்டின் கடைக்கு வந்தார். ஆனால் பை திருப்திகரமாக இல்லாததால் முதலாளி வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதனால் அந்த ஆர்டரை கேன்சல் செய்து விட்டோம். அந்தப் பையில் ஒன்றுதான் இது"

"என்ன சொல்றீங்க.. நல்லா யோசிச்சு சொல்லுங்க"

"உண்மைதான் சார்.. இந்தப் பையை பிரிண்ட் செய்தது ஜஸ்டின் நிறுவனம்தான். அவரேதான் சாம்பிளையும் கொண்டு வந்து காட்டினார். இதே பைதான் சார்.. நல்லா நினைவிருக்கு.. நான்தான் பார்த்து முதலாளிக்குத் திருப்தி இல்லை என்று கூறினேன்"

அடித்துக் கூறிய பரமசிவனின் தகவலால் உற்சாகமடைந்தார் குமரேசன்.

"ஆமா இவர் யாரு.. எத்தனை வருஷமா இந்த தொழிலில் இருக்கார் பரமசிவன்"

"சார் அடிப்படையில் இவர் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். ஆனால் சைடில் பல தொழில் செய்து வருகிறார். 7 லாரி 3 டெம்போ என பிசியாக தொழில் செய்யும் நபர். ஜவுளிக் கடைகளுக்கான பை தயாரிப்பையும் செய்து வருகிறார். நாங்கள் வேறு ஒருவரிடம்தான் வழக்கமாக பை தயாரிப்போம். அந்த நிறுவனத்தை கடன் தொல்லையால் மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனத்திடம் இப்போதுதான் ஆர்டர் போட்டோம். ஆனால் முதல் ஆர்டரே சரிவரவில்லை."

"ஜஸ்டின் எப்படி"

"அவரைப் பத்தி அதிகமாக தெரியாது சார்.. இந்த அளவுக்குத்தான் தெரியும். அவரோட சொந்த ஊர் நாகர்கோவில்னு தெரியும்"

"இந்த பிரிண்டர்ஸோட அட்ரஸ், ஜஸ்டினின் செல்போன் நம்பர் வேண்டும் பரமசிவன்"

"விசிட்டிங் கார்டே இருக்கு சார்... தர்றேன்"

விசிட்டிங் கார்ட் பாக்ஸை எடுத்து அதில் இருந்த கார்டுகளைத் துளாவிய பரமசிவன், அதிலிருந்து ஒன்றை எடுத்து நீட்டினார். அதை வாங்கிக் கொண்ட குமரேசன் "ஜஸ்டின் கடைக்கு வந்தபோது பதிவான சிடிடிவி புட்டேஜை பார்க்கணுமே பரமசிவன்" என்று கூறினார். அதைக் கேட்ட பரமசிவன், "கண்டிப்பா காட்றேன் சார்" என்று கூறி கம்ப்யூட்டரை ஆன செய்தார்.

ஜூன் 12ம் தேதி ஜஸ்டின் கடைக்கு வந்தார் என்று கூறியபடி கம்ப்யூட்டரை ஆன் செய்த பரமசிவன் அந்த தினத்தில் பதிவான புட்டேஜின் பதிவுகளை ஓபன் செய்தார். கம்ப்யூட்டரை குமரேசன் பக்கம் திருப்பினார்.. கடைக்குள் பலரும் வருவதும் போவதுமாக இருந்த காட்சிகள் வந்தன.

"எத்தனை மணிக்கு ஜஸ்டின் வந்தார் பரமசிவன்"

"சாயந்திரம் 4 மணிக்கு மேல் சார்"

"ஓ. ஈவ்னிங்கா.. அப்ப அந்த டைமுக்கு பார்வர்ட் பண்ணுங்க"

" சரி சார்"

காட்சிகள் பார்வர்ட் ஆகி 4 மணிக்கு வந்ததும் நிறுத்தி ஓட விட்டார் பரமசிவன்.

கடைக்குள் ஒருவர் நுழைகிறார். அவரைப் பார்த்த பரமசிவன், "சார் இதுதான் ஜஸ்டின்"

அந்த இடத்தில் வீடியோவை ஃப்ரீஸ் செய்யச் சொன்னார் குமரசேன். அந்த நபரை ஜூம் செய்தார். கூலர் அணிந்திருந்த அந்த நபர் பார்க்க "சார்பட்டா பரம்பரை" கபிலன் போல காட்சி அளித்தார். நல்ல அடர்த்தியான மீசை , நல்ல நிறம், நல்ல உயரம். ஆனால் கூலரில் இருந்ததால் அவரது முகத்தை தெளிவாக காண முடியவில்லை.

"கூலர் இல்லாமல் இவர் இருக்கும் காட்சி இருக்கா பரமசிவன்"

"இருக்கு சார்.. ஆனால் அவர் எனது அறைக்குள் இருந்தபோதுதான் கூலரை கழற்றி என்னுடன் பேசினார். ஆனால் இந்த அறைக்குள் சிசிடிவி கிடையாது" என்றார் பரமசிவன்.

"ஓ.. .அப்படியா.. சரி பரவாயில்லை.. இந்த புட்டேஜ் எனக்கு வேண்டுமே. அப்படியே கடைக்கு வெளியே வச்சிருக்கும் சிசிடிவியின் புட்டேஜும் வேண்டும்" என்று கேட்டு அவற்றைப் பெற்றுக் கொண்டார் குமரசேன்.

பரமசிவனுக்கு நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து வெளியில் வந்த குமரேசன், தனது செல்போனை எடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயசிங்கைத் தொடர்பு கொண்டார்.

"சார்.. ஜஸ்டின் அப்படிங்கிறவர் பத்தி ஒரு தகவல் கிடைச்சிருக்கு. இந்த நபர்தான் பையை தயாரிச்சுக் கொடுத்தவர். மிகப் பெரிய தகவல் சார். இந்த ஜஸ்டின் குறித்த தகவல்கள் சிலது சந்தேகத்துக்கிடமா இருக்கு. அவரோட செல்போன் எண்ணையும், அவர் நடத்தி வரும் நிறுவனத்தின் அட்ரஸையும் வாங்கிட்டேன். ஒரு புட்டேஜும் கிடைச்சிருக்கு. நான் இப்போ நேரா அங்கே வரவா அல்லது ஜஸ்டினை பார்க்கவா சார்"

".................................."

"ஓகே சார்.. அப்படியே பண்றேன். முடிச்சுட்டு அப்டேட் பண்றேன் சார்"

கடைக்கு வெளியே நின்றிருந்த பைக்கை கிளப்பி மின்னல் வேகத்தில் பறந்தார் குமரேசன்.

கடையின் வாசலுக்கு அருகே இருந்த பெட்டிக் கடையில் சிகரெட் பிடித்தபடி நின்றிருந்த ப்ளூ ஜீன்ஸ், க்ரீன் டிசர்ட் போட்டிருந்த அந்த நபர் தனது செல்போனை ஆன் செய்து...

"மோப்பம் பிடிச்சுட்டாங்க.. காலி பண்ணிடுங்க"

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 ]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+