Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சொல்லுங்க மிஸ்டர் ஜஸ்டின்"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (25)

Subscribe to Oneindia Tamil

- சுதா அறிவழகன்

தண்டையார்பேட்டை இஎஸ்ஐ ஆஸ்பத்திரி.. அதையொட்டி நீண்டு கிடந்த தெருவில் குமரேசனின் பைக் விரைந்தது.. தெருவின் இடதுபுறமாக திரும்பியது இன்னொரு பக்கவாட்டுத் தெரு.. அகலமாக இருந்த அந்தத் தெருவின் இரு மருங்கிலும் பெரிய பெரிய வீடுகள்.. அதில் இடது புறம் இருந்த நான்காவது வீட்டின் முன்பு குமரேசனின் பைக் நின்றது.

வீட்டுக்கு வெளியே வண்டியை நிறுத்திய அடுத்த சில விநாடிகளில் இன்ஸ்பெக்டர் ஜெயசிங்கின் ஜீப்பும் அங்கு வந்து நின்றது. ஜெயசிங்குக்கு சல்யூட் வைத்த குமரேசன், அவரிடம் சென்று சிலவற்றை காதில் சொன்னார். பின்னர் இருவரும் வீட்டு கேட்டைத் திறந்து உள்ளே வராண்டாவுக்குள் வந்தனர்.

காலிங் பெல்லை குமரேசன் அழுத்தினார். சிறிது நேர அமைதிக்குப் பிறகு கதவு திறந்தது. கதவைத் திறந்தது ஒரு பெண்.

"யாரானு"

"இது ஜஸ்டின் வீடுதானே"

"அதானு.. நிங்கள்?"

"என் பெயர் குமரேசன், அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர். இது இன்ஸ்பெக்டர் ஜெயசிங். மிஸ்டர் ஜஸ்டினை பார்க்கணும்.. இருக்காரா"

"உவ்வு.."

முகம் நிறைய குழப்பத்துடன் கதவைத் திறந்து உள்ளே வருமாறு அந்தப் பெண் அழைக்க, ஜெயசிங்கும், குமரேசனும் ஹாலுக்குள் வந்தனர். அங்கிருந்த சோபாவில் அவர்களை அமரச் சொன்ன அப்பெண் வேகமாக உள்ளே விரைந்தார்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் அங்கு வந்தார் ஜஸ்டின்.

"வணக்கம் சாரே.."

அவர் வைத்த மலையாளம் கலந்த வணக்கத்தை கண் அசைப்பில் ஏற்றுக் கொண்ட ஜெயசிங், உட்காருங்கள் என்றார்.

ஜஸ்டின், ஜெயசிங்குக்கு எதிரே அமர்ந்தார்.

"மிஸ்டர் ஜஸ்டின்.. நீங்க மலையாளியா"

"இல்லை சாரே.. நான் தமிழ்தான்.. நாகர்கோவில். மனைவிதான் மலையாளி"

"ஓ.. நான் கூட மார்த்தாண்டம்தான்.. ஓகே.. நேரடியா விஷயத்துக்கு வர்றேன். என்ன தொழில் பண்றீங்க"

"தொழில்னா... நிறைய பண்றேன்.. என்ன விஷயம் சாரே"

"ஒரு குற்ற சம்பவத்துல உங்களோட பிரிண்டர்ஸ்ல தயாரான ஒரு பை சம்பந்தப்பட்டிருக்கு. அது தொடர்பாக உங்க கிட்ட விசாரிக்கணும்"

"என்னோட பிரண்டர்ஸ்ல தயாரான பை, குற்ற சம்பவத்துல சம்பந்தப்பட்டிருக்கா.. .புரியலையே சார்"

"இதைப் பாருங்க"

செல்போனில் வீடியோவை ஆன் செய்து அதை ஜஸ்டினிடம் நீட்டினார் குமரேசன்.

அதை வாங்கிப் பார்த்த ஜஸ்டினின் நெற்றி சுருங்கியது.

"ஆமா.. இது நம்ம பிரிண்டர்ஸில் தயாரான பைதான். ஆனால் இப்போது இது யூஸில் இல்லையே. அவங்க ரிஜக்ட் பண்ணிட்டாங்க"

"அது தெரியும்.. இந்தப் பை எப்படி இந்த கும்பல் கிட்ட போச்சுன்னு தெரியணும்"

"எப்படி போச்சுன்னு தெரியலை.. ஆனால், இந்தப் பை இருக்கும் இந்த இடம் எனக்குத் தெரிஞ்ச இடம்தான்"

"என்ன சொல்றீங்க" நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜெயசிங்.

"ஆமா சார்.. இது என்னோட தம்பியோட கொடவுன்.. இந்த டேபிளைப் பார்த்ததும் எனக்கு ஞாபகத்துக்கு வந்துருச்சு. ஆனால் இது இப்ப பயன்பாட்டில் இல்லை. ஆனால் இங்கு பெண்ணை யார் கடத்தி வைத்துள்ளார்கள் என்று எனக்குப் புரியலையே"

"இந்த கொடவுன் எங்கே இருக்கு.."

"அமிஞ்சிக்கரைல (அமைந்தகரை) இருக்கு சார்"

"ஓ.. உங்க தம்பி எங்க இருக்கார்"

"அவன் இந்த கொடவுனை மூடி ரொம்ப நாளாச்சு. அவனும் கூட இப்ப சென்னைல இல்லை. திருவனந்தபுரம் போயிட்டான். அங்கு புது பிசினஸ் பண்ணிட்டிருக்கான்."

"அவரோட நம்பர் கிடைக்குமா"

"கண்டிப்பா சார்.. 974......."

"ஓகே இப்ப எங்க கூட இந்த கொடவுனுக்கு நீங்களும் வரணும். கிளம்புங்க"

அந்த இடமே சற்று நேரத்தில் பரபரப்பானது. ஜெயசிங், குமரேசனுடன், ஜஸ்டினும் கிளம்ப ஜீப் அமைந்தகரைக்கு பறந்தது.

ஜஸ்டின் தம்பியின் கொடவுனை நெருங்கிய ஜீப் அங்கு போய் சரக்கென நின்றது.

நின்ற வேகத்தில் வேகமாக இறங்கிய ஜெயசிங் அந்த இடத்தைப் பார்வையாலேயே அளந்தார். ஆள் அரவம் அதிகம் அற்ற ஒதுக்குப்புறமான இடம்.. தொலைவில் சாலை.. சாலையிலிருந்து உள்ளுக்குள் இந்த கொடவுன் அமைந்திருந்தது. கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட கொடவுன் அது. முன்பு பிசினஸ் செய்து வந்ததால் அந்த இடமே பிசியாக இருந்திருக்கும் போல. இப்போது முற்றிலும் கிடப்பில் போடப்பட்டு விட்டதால் அந்த இடமே அமைதியாக பேய் மாளிகை போல காணப்பட்டது.

"மிஸ்டர் ஜஸ்டின்.. கொடவுனுக்கு வாட்ச்மேன் கிடையாதா.. .இப்படி அநாதரவா விட்டு வச்சிருக்கீங்க"

"இல்லை சார், இங்கு எந்தப் பொருளும் கிடையாது. எல்லாத்தையும் காலி பண்ணிட்டோம். வெறும் இடமும், கட்டடமும்தான். அதனால்தான் எதுக்கு வீண் செலவு என்று தம்பி வாட்ச்மேன் வைக்க வேண்டாம்னு சொல்லிட்டான்"

கொடவுன் கதவை திறந்து உள்ளே போனார்கள் அனைவரும்.. உள்ளே யாருமே இல்லை.

ஆனால் கொடவுனுக்குள்ளே சென்ற கொஞ்ச நேரத்திலேயே எதிர்ப்பட்ட இன்னொரு பகுதியில் கதவு திறந்து கிடந்தது.

"சார் இந்தக் கதவை உடைச்சுட்டு யார் உள்ளே வந்திருக்காங்க சார்" பதட்டத்துடன் கூறினார் ஜஸ்டின்.

அந்தக் கதவுக்கு அருகே சென்று பார்த்தார் ஜெயசிங். இரும்புக் கம்பியால் உடைத்து கதவைத் திறந்து உள்ளே புகுந்துள்ளனர் என்று முதல் பார்வையிலேயே தெரிய வந்தது. தாழ்ப்பாள் உடைந்து கிடந்தது.

விடுவிடுவென உள்ளே நுழைந்த ஜெயசிங் அங்குலம் அங்குலமாக அந்த இடத்தை ஆய்வு செய்தார். ப்ரீத்தி அனுப்பியிருந்த வீடியோவில் காணப்பட்ட டேபிள் அங்கு கிடந்தது. அந்த டேபிளின் மீது அதே கட்டப் பை.

"ப்ரீத்தியை இங்குதான் அடைத்து வைத்துள்ளனர் குமரேசன்.. உறுதியாகிருச்சு... ஆனால் நாம வருவதை மோப்பம் பிடிச்சுட்டு தப்பிச்சுப் போயிட்டாங்க.. ராஸ்கல்ஸ்" என்றார் கோபமாக ஜெயசிங்.

அதே வேகத்தில் ஜஸ்டின் பக்கம் திரும்பி, "மிஸ்டர் ஜஸ்டின்.. நாம இங்கே வர்றதைப் பத்தி யார் கிட்டயாவது நீங்க சொன்னீங்களா" என்று வேகமாக கேட்டார்.

"அய்யோ சாரே.. நான் உங்க கூடத்தானே இருந்தேன்.. நான் யார் கிட்டயும் சொல்லலியே" என்றார் ஜஸ்டின் பதட்டமாக.

ஜெயசிங்கின் முகத்தில் ஏமாற்றமும், கோபமும் மாறி மாறித் தாண்டவமாடியது.

"சார் இங்க வாங்க"

குமரேசனிடமிருந்து வந்த குரலைக் கேட்ட ஜெயசிங் அவரிடம் விரைந்தார்.

"சார் இதைப் பாருங்க"

அவர் கையில் கொடுத்த பொருளை வாங்கிப் பார்த்தார் ஜெயசிங். அது ஒரு லாட்ஜின் முகவரி அடங்கிய வில்லை போன்று இருந்தது. முன்பக்கம் லாட்ஜின் முகவரி இருந்தது. பின்னர் 11 என்ற எண் இருந்தது. இது லாட்ஜில் தரப்படும் கீ செயின் போல இருக்கே என்று யோசித்த ஜெயசிங், முகவரியை மீண்டும் பார்த்தார்.

"ரம்யா ஹோட்டல்
பழைய எண் 11, புதிய எண் 33, முதலாவது தெரு
கென்னட் லேன், எழும்பூர், சென்னை 600008"

கண்டிப்பாக இது கீ செயினாகத்தான் இருக்க வேண்டும். சாவியிலிருந்து தனியாக பிய்த்துக் கொண்டு கீழே விழுந்திருக்க வேண்டும் என்று யூகித்த ஜெயசிங், அதை செல்போனில் படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் பரந்தாமனுக்கு அனுப்பினார்.

பின்னர் அவரை கால் செய்து, உடனே இந்த ஹோட்டலுக்குப் போய் இதுகுறித்து விசாரிங்க.. 11வது எண் அறையில் தங்கியிருப்பது யார் என்ற டீட்டெய்ல் வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பிறகு குமரேசனிடம் திரும்பி, "குமரேசன் உடனே இந்த ஏரியா ஸ்டேஷனை தொடர்பு கொண்டு இந்த கொடவுனுக்கு சீல் வைக்கச் சொல்லுங்க. ஏதாவது தடயம் கிடைக்க வாய்ப்புண்டு. அதுவரை இதை பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டு, ஜஸ்டினிடம் திரும்பினார்.

"மிஸ்டர் ஜஸ்டின். உங்க ஒத்துழைப்புக்கு நன்றி. மறுபடியும் விசாரணைக்கு தேவைப்பட்டால் கூப்பிடுவோம்.. இப்போது நீங்க கிளம்பலாம்" என்றார்.

"ரொம்ப நன்றி சார். என்னோட தம்பிக்கும் நான் தகவல் சொல்லிடுறேன்" என்று கூறி விட்டு கிளம்பினார்.

ஒரு நொடியைக் கூட தாமதிக்க விரும்பாத ஜெயசிங், குமரேசனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து எழும்பூர் நோக்கி பைக்கைத் திருப்பினார்.

போகும் வழியிலேயே பரந்தாமனிடமிருந்து போன் வந்தது. அந்த ஹோட்டலில்தான் தான் இருப்பதாகவும், விரைந்து வரும்படியும் அவர் கூறவே, பைக்கை மேலும் வேகமாக முடுக்கினார் ஜெயசிங்.

அடுத்த பத்து நிமிடத்தில் ஹோட்டல் ரம்யாவில் லேன்ட் ஆகியிருந்தனர் ஜெயசிங்கும், குமரேசனும்.

ரிசப்ஷனில் காத்திருந்த பரந்தாமன், ஜெயசிங்கை எதிர்கொண்டு விஷ் செய்தார். பின்னர் 3 பேரும் 11ம் எண் அறைக்குப் போனார்கள்.

"சார்.. இந்த ரூமில் 3 பேர் தங்கியிருந்துள்ளனர். நேற்று காலைதான் ரூமை வெகேட் செய்துள்ளனர். 3 பேருமே தமிழில்தான் பேசியுள்ளனர். சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு முகவரியைக் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த போனில் தொடர்பு கொண்டால் யாரோ இந்திக்காரர்கள் பேசுகிறார்கள். எனவே தவறான எண் என்று தெரிகிறது. முகவரியும் கூட போலியாகத்தான் இருக்க முடியும். விசாரிக்கச் சொல்லிருக்கேன் சார்"

மூச்சு விடாமல் பேசி நிறுத்தினார் பரந்தாமன். அறைக்குள் தனது பார்வையை ஆழமாக ஊடுறுவ விட்டு அங்குலம் அங்குலமாக அந்த அறையை அலசினார் ஜெயசிங்.

"ஹோட்டல் மேனேஜரை வரச் சொல்லுங்க பரந்தாமன்"

மேனேஜர் விரைந்து வந்தார்.

"சார் வணக்கம் நான் குமார், மேனேஜர்"

"மிஸ்டர் குமார், இந்த 3 பேருமே பார்க்க எப்படி இருந்தாங்க"

 Nilavukku Neruppendru Peyar Tamil series episode 25

"சார் ரொம்ப டீசன்ட்டா இருந்தாங்க சார். தமிழ் நல்லா பேசுனாங்க.. அப்பப்ப ஆங்கிலத்திலும் பேசிக்கிட்டாங்க. சிதம்பரத்துக்குப் பக்கம் ஏதோ ஒரு ஊர் சொன்னாங்க.. அங்கிருந்து வந்ததாக சொன்னாங்க. 3 நாள் தங்கியிருந்தாங்க சார். நேத்துதான் வெகேட் பண்ணாங்க. மூன்று பேரில் ஒருவர் நல்ல கலர் சார். மத்த ரெண்டு பேரும் மாநிறத்துல இருந்தாங்க.. ஒருத்தர் கண்ணாடி போட்டிருந்தார். 2 பேருக்கு தலை நரைச்சிருந்தது சார். இன்னொருத்தர் கொஞ்சம் இளவட்டமா இருந்தார்"

" ஓ.. பரவாயில்லையே.. நல்லா டீட்டெய்ல் பார்த்து வச்சிருக்கீங்களே.. குட்.. பரந்தாமன் இவர் சொன்ன அடையாளங்களை வச்சு டிராயிங் ரெடி பண்ணுங்க"

குமாரைப் பாராட்டி விட்டு அறைக்குள் மீண்டும் நோட்டம் விட்ட ஜெயசிங் அந்த அறையை சீல் வைக்கச் சொல்லி விட்டுக் கிளம்பினார்.

வெளியில் வந்த ஜெயசிங்கும், குமரேசனும், பரந்தாமனும், இன்னும் தெளிவான துப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் முகத்தில் காட்டினர். ஜெயசிங்தான் ரொம்ப ஏமாற்றமாக காணப்பட்டார்.

"குமரேசன்.. கிட்டத்தட்ட குற்றவாளிக்கு அருகில்தான் இருக்கோம். ஆனால் அவங்க என்ன நோக்கத்துக்காக ப்ரீத்தியைக் கடத்தி வச்சிருக்காங்கன்னு சுத்தமா புரியலையே. வழக்கமாக இதுபோன்ற கடத்தல்களில், சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கோ அல்லது போலீஸுக்கு போன் வரும். டிமாண்ட்ஸ் என்னன்னு சொல்வாங்க.. ஆனால் இந்த கேஸில் அப்படி ஒரு சம்பவம் இதுவரை நடக்கலியே.. ரொம்பக் குழப்பமா இருக்கே"

"அதுதான் சார் எனக்கும் குழப்பமாயிருக்கு.. கடத்தல்காரர்கள் தரப்பில் பலத்த அமைதி காணப்படுது. என்ன நோக்கத்துக்காக கடத்தியிருக்காங்கன்னு தெரியலை சார்.. இதுதான் குழப்புது"

"ம்ம்.. இது என்னோட சர்வீஸிலேயே சேலஞ்சிங்கான கேஸா இருக்கும்னு நினைக்கிறேன்.. ஓகே. இப்போது வரை கிடைத்த தகவல்களை வைத்து நாம நம்மோட திட்டத்துல ஏதாவது மாற்றம் கொண்டு வர முடியுமான்னு பார்க்கலாம். டூட்டி முடிஞ்சதும் நைட் 10 மணிக்கு என்னோட வீட்டுக்கு நீங்க 2 பேரும் வந்துருங்க.. கூடவே சைபர் கிரைம் பிரகலாதனையும் வரச் சொல்லுங்க.. ஸ்டிராட்டஜி குறித்து டிஸ்கஸ் பண்ணலாம்"

பேசிக் கொண்டே போன ஜெயசிங், ஓங்கி ஒலித்த தனது செல்போன் மணியைக் கேட்டு பேச்சை நிறுத்தினார்.

"ஹலோ"

"இங்க பார்.. எங்க நோக்கம்.. அந்தப் பொண்ணு கிடையாது.. நாங்க வேற நோக்கத்தில்தான் இருக்கோம்.. தேவையில்லாம எங்க பின்னாடி வந்து அந்தப் பொண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்திடாதே.. பேசாம போய்ரு.. அந்தப் பொண்ணு பத்திரமா வேணும்னா.. போய்ரு.. இல்லை.. சிதைச்சுருவோம் உருத் தெரியாம.."

மறுமுனையிலிருந்து வந்த திடீர் குரலைக் கேட்டு அப்படியே ஷாக்காகி விட்டார் ஜெயசிங்.. அடுத்த நொடியே அவருக்குள் கோபம் கொப்பளிக்க, " யூ ராஸ்கல்.. யார்டா நீ.. என்னையவே மிரட்டுறியா.. கையில கிடைச்சா.. செத்தடா" என்று ஆவேசம் காட்ட மறு முனையில் கால் கட்டானது.

"என்னாச்சு சார்" குமரேசன், பரந்தாமன் பதறினர்.

"கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருத்தன் போலத் தெரியுது.. நாம பின் தொடரக் கூடாதுன்னு மிரட்டுறான்.. இந்த எண்ணை வைத்து டிரேஸ் அவுட் பண்ண முடியுமா பாருங்க.. அந்தப் பொண்ணுக்கு ஆபத்து வந்துரும் போல இருக்குது. நாம ஸ்பீட் அப் பண்ணும்"

பதட்டம் சூழ்ந்து கொள்ள அந்த இடத்திலிருந்து மூன்று பேரும் புறப்பட்டனர். வெளியில் வெயில் வழக்கத்தை விட அதிக உஷ்ணத்துடன் சுட்டெரித்தது.

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22,23, 24 ]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+