For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாம போட்டுத் தள்ளிடுவோம்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (7)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

ஈஸ்வரின் உடம்பு ஒரு சிறிய அதிர்ச்சிக்கு உட்பட கையில் இருந்த கண்ணாடி டம்ளர் விஸ்கியை சிதறவிட்டது. செல்போனின் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

" தினகர்! நீங்க இப்ப என்ன சொன்னீங்க தலை போகிற விஷயமா ?"

" ஆமா ஸார்....... அதனால்தான் இந்த நேரத்துல நான் உங்களுக்கு போன் பண்ண வேண்டியதாயிச்சு "

" மொதல்ல விஷயம் என்னான்னு சொல்லுங்க "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 7

" ஸார்.... டில்லி சி.பி.ஐ.யிலிருந்து ஒரு பெண் புலி தமிழ்நாட்டுக்கு வரப்போகுது. தமிழ்நாட்டு போலீஸாரால கண்டுபிடிக்கவே முடியாத ஏழு கேஸ்களை மறுபடியும் ரீ ஒப்பன் பண்ணி குற்றவாளி யார்ன்னு மோப்பம் பிடிக்கப் போகுது. அந்த ஏழு கேஸ்ல உங்க கேஸூம் ஒண்ணு. நீங்க இலவசமாய் திருமணம் பண்ணி வெச்ச கல்யாண ஜோடிகளில் சில ஜோடிகள் மர்மமான முறையில் தற்கொலை பண்ணிகிட்டு இறந்து போனது சி.பி.ஐ.க்கு ஒரு நெருடலை உண்டாக்கியிருக்கு...... "

" அந்த பெண் புலியோட பேர் என்ன ? "

" சில்பா ...... தமிழ்நாட்டுப் பொண்ணு. சொந்த ஊரு வேலூர்க்குப் பக்கத்துல வெட்டுவானம் என்கிற கிராமம். அப்பா வீரவாக்கியன் ராணுவத்தில் வேலை பார்த்தவர். அம்மா சிவகாமி ஒரு லாயர். ரெண்டு பேரும் உழைப்பைக் கொட்டி பொண்ணை ஐ.பி.எஸ். படிக்க வெச்சதோட பலன் சில்பா இன்னிக்கு சி.பி.ஐ.யில் டேலன்ட்டட் ஆபீஸர். ஸ்க்ரூட்னைஸ் டிபார்ட்மெண்ட்டில் சீஃப் ஆபீஸர் போஸ்ட் "

" சில்பா என்கிற அந்தப் புலி தமிழ்நாட்டுக்குள்ளே எப்ப வருது ? "

" அடுத்த வாரம் "

" சரி.... தினகர்..... நான் பார்த்துக்கிறேன் "

" ஸார் " செல்போனின் மறுபக்கம் குரல் இழுபட்டது.

" என்ன ? "

" சி.பி.ஐ.யையும் நம்ம தமிழ்நாடு போலீஸ் மாதிரி நினைச்சுடாதீங்க. ஒரு சின்ன விஷயம் பார்வைக்குத் தட்டுப்பாட்டால் கூட போதும் அதை வெச்சுகிட்டே ஒரு கேஸோட ஓட்டு மொத்த உண்மைகளையும் தோண்டி எடுத்துடுவாங்க "

" எனக்கு அது தெரியாதா என்ன? சட்டத்துக்குப் பிடிக்காத ஒரு வேலையைப் பண்றதுக்கு முந்தி நாலு பக்கமும் சுவர் கட்டறவன் நான். தினகர் ..... நீங்க எனக்கு பண்ண வேண்டிய ஒரே ஒரு வேலை என்ன தெரியுமா ? "

" சொல்லுங்க ஸார் "

" அந்தப் பொண்ணு சில்பாவோட போட்டோ உங்ககிட்டே இருந்தா எனக்கு அதை "வாட்ஸ் அப்"ல அனுப்பி வையுங்க "

" போட்டோ இருக்கு ஸார்...! உடனே அனுப்பி வைக்கிறேன். பட் யூ ஷீட் பி காஷியஸ் ஸார் "

இரண்டு பக்கமும் செல்போன்கள் மெளனமாயின. ஈஸ்வர்க்கு எதிரில் உட்கார்ந்திருக்க அபுபக்கரின் முகம் வியர்வையில் மினுமினுத்தது.

" ஈஸ்வர்.... நான் என்ன சொன்னேனோ அதுதான் நடந்துட்டு வருது. தமிழ்நாடு போலீஸூக்கு ஒரு இன்ஃபார்மராய் வேலை பார்க்கிற வளர்மதி உன் வீட்டுக்கே வந்து வேவு பார்த்துட்டு போயிருக்கான்னு நான் சொன்னப்ப நீ நம்பலை. இப்ப டெல்லி சி.பி.ஐ.யிலிருந்து சில்பான்னு ஒருத்தி வரப் போறதா நமக்கு வேண்டிய உளவுத்துறை ஆளே சொல்லிட்டார். இப்பவாவது நம்பறியா? "

" நம்பறேன் " என்று சொன்ன ஈஸ்வரின் முகம் இப்போது வார்த்த இரும்பைப்போல் மாறியிருந்தது. ஒரே மூச்சில் விஸ்கி முழுவதையும் தொண்டைக்குக் கொடுத்துவிட்டு கையில் இருந்த சிக்கன் துண்டை கடைவாய்க்கு கொடுத்து அரைத்தபடியே பேசினார்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 7

" அபு ...! தினகர் பேசும்போது ஒரு விஷயத்தைச் சொன்னார். கவனிச்சியா ......? "

" என்ன ? "

" அந்த சி.பி.ஐ. ஸ்க்ரூட்னைஸ் ஆபீஸர் சில்பா நம்ம மேல மட்டும் சந்தேகப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரலை. மொத்தம் ஏழு கேஸ்களை டீல் பண்ணி உண்மைகளைக் கண்டு பிடிக்க வர்றா... இது எவ்வளவு பெரிய சாதகமான விஷயம் தெரியுமா ? "

" எப்படி சாதகம்ன்னு சொல்றே? "

" அந்த ஏழு கேஸ்கள் சம்பந்தப்பட்ட யாராவது ஒருத்தர் சில்பாவை போட்டுத் தள்ள வாய்ப்பு இருக்கு இல்லையா ? "

" இருக்கு...... ஆனா "

" என்ன ஆனா ? "

" ஒருவேளை யாருமே போட்டுத் தள்ளலைன்னா ? "

" நாம போட்டுத் தள்ளிடுவோம் "

அபுபக்கர் திடுக்கிட்டார். " ஈஸ்வர்.... ஒரு சி.பி.ஐ. ஆபீஸரைப் போட்டு தள்ளறது அவ்வளவு சுலபம் கிடையாது"

" இப்ப நான் ஒரு விஷயம் சொன்னா நீ தப்பாய் நினைச்சுடக்கூடாது அபு"

"என்ன ? "

" வர வர நீ ரொம்பவும் பயப்படறே.... ஒரு முக்கியமான பிரச்சினையில் முடிவு எடுக்கும் போது அளவுக்கு அதிகமா யோசிக்கிறே. தைரியமாய் இருக்கிற என்னையும் பலவீனப்படுத்தற மாதிரி உன் பேச்சு இருக்கு.. உலகளவில் சட்டத்துக்கு எதிராய் இருக்கிற ஒரு விபரீதமான விஷயத்தை யார்க்கும் எந்தவிதமான சந்தேகமும் வராத அளவுக்கு இது நாள் வரைக்கும் டீல் பண்ணிட்டிருக்கோம். ஆனா விஷயம் எப்படியோ கசிஞ்சு சி.பி.ஐ. வரைக்கும் போயிடுச்சு. அதுக்காக நாம பயப்படவோ கவலைப்படவேண்டிய அவசியமோ இல்லை. ஏன்னா சி.பி.ஐ.யின் மேஜை வரைக்கும் போன எத்தனையோ கேஸ்கள் இன்னமும் அந்த ஃபைல்களுக்குள்ளேயே குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருக்கு..... "

ஈஸ்வர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் அவருடைய போன் வெளிச்சமாய் ஒளிர்ந்தது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார். மறுபடியும் தினகர்தான் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். காதுக்கு ஒற்றிப் பேசினார்.

" என்ன தினகர் ? "

" ஸார் உங்க "வாட்ஸ் அப்"புக்கு சில்பாவோட போட்டோவை அனுப்பியிருக்கேன் "

" நான் இப்ப பார்த்துடறேன் "

" இன்னொரு விஷயம் ஸார் "

" என்ன? "

" சில்பா அடுத்த வாரம்தான் வரப்போறதாய் உங்ககிட்டே கொஞ்ச நேரத்துக்கு முந்தி சொன்னேன் "

" ஆமா ...... "

" அது அதிகாரபூர்வமான தகவல் இல்லை ஸார் "

" அப்புறம் ? "

" சில்பா இப்பவே தமிழ்நாட்ல ஏதோ ஒரு ஊர்ல இருக்கிறதாய் கேள்விப்பட்டேன். மே பி இன் சென்னை ஆர் கோவை "

" இதுவாவது சரியான தகவல்தானா ? "

" ஸார்..... சி.பி.ஐ.யும் உளவுத்துறையும் முன்னே மாதிரி அந்நியோன்யமாய் இல்லை. சி.பி.ஐ. இப்ப அரசோட கட்டுப்பாட்டில் இருக்கிறதால சரியான தகவல் பரிமாற்றம் கிடையாது. போன நிமிஷம் எனக்குக் கிடைச்ச தகவல்படி சில்பா தமிழ்நாட்ல எதோ ஒரு சிட்டியில் இருக்கிறதா உறுதியா தெரிய வந்திருக்கு. மேற்கொண்டு ஏதாவது தகவல் கிடைச்சா உடனடியாய் நான் உங்களுக்கு இன்ஃபார்மர் பண்றேன் ஸார் "

" தினகர் "

" ஸார் "

" உங்களுக்கு எதுமாதிரியான தகவல் கிடைச்சாலும் சரி, அது உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். உடனே எனக்கு இன்ஃபார்மர் பண்ணிடுங்க "

" கண்டிப்பா ஸார் "

" அப்புறம் உங்களுக்கு பேசினபடி பணம் வந்துட்டு இருக்கா ...! "

" கரெக்டா வந்துடுது ஸார். அதுல எந்த ஒரு பிரச்சினையும் இல்லை...... "

" சரி போனை கட் பண்றேன் " ஈஸ்வர் இணைப்பைத் துண்டித்துவிட்டு "வாட்ஸ் அப்" ஆப்ஷனுக்குப் போய் தினகர் அனுப்பியிருந்த சில்பாவின் போட்டோவைப் பார்த்தார். அபுபக்கருக்கும் காட்டினார். அபுபக்கர் சொன்னார்.

" வயசு முப்பதுக்குள்ளதான் இருக்கும் போலிருக்கு "

ஐ.பி.எஸ். படிச்சதுக்குப் பதிலாய் சினிமாவில் நடிக்கப் போயிருக்கலாம். அழகாயிருக்கா. முகத்துல ஒரு புத்திசாலித்தனமும் பார்க்கிற பார்வையில் ஒரு அதீதமான ஷார்ப்னஸூம் தெரியுது..... தமிழ்நாட்டுக்கு வந்துட்டாளாம். ஆனா எந்த சிட்டியில் இருக்கான்னு தெரியலைன்னு தினகர் சொன்னார். நம்ம பக்கம் பார்வையைத் திருப்பாமே இருந்தா அவ சர்வீஸ்ல இருக்கலாம். கல்யாணம் பண்ணிக்கலாம். குழந்தை பெத்துக்கலாம். ஒரு அழகான குடும்பமாய் வாழ்ந்துட்டு போலாம். அப்படி இல்லாத பட்சத்தில்...... " என்று சொல்லி ஈஸ்வர் பேச்சை நிறுத்த அபுபக்கர் போதை வழியும் கண்களோடு சிரித்துக் கொண்டே சொன்னார்.

" மலர்வளையம் வெச்சுடவேண்டியதுதான் ..! "

----

மறுநாள் மாலை ஐந்தரை மணி

அலுவலகப் பணியை முடித்துக் கொண்டு கீழே பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து தன்னுடைய ஸ்கூட்டியை நெருங்கினாள் வளர்மதி. லஞ்ச் பாக்ஸையும் கைப்பையையும் "கிட்"டில் வைக்கும்போதே செல்போன் பவுச்சில் இருந்து கூப்பிட்டது. எடுத்துப்பார்த்தாள்.

கணவன் ஹரி

" என்ன சொல்லுங்க ? "

" ஆபீஸ் முடிஞ்சுதா ? "

" ம்... இப்பத்தான் வெளியே வந்தேன் "

" நேரா வீடுதானே ? "

" இல்லை "

" பின்னே ? "

" இன்னிக்கு பிரதோஷம். கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குப் போகணும்ன்னு காலையிலேயே உங்ககிட்டேயும், உங்கம்மாகிட்டேயும் சொன்னேனே.... "

" ஸாரி மறந்துட்டேன் "

" சரி..... இப்ப எதுக்காக போன் பண்ணீங்க ? "

" எனக்கு இன்னிக்கு ஆபீஸ்ல ஒரு எக்ஸ்ட்ரா வேலை. ஏர்போர்ட்டுக்கு போய் கம்பெனி சேர்மனை ரீஸீவ் பண்ணி ஹோட்டல் ரெஸிடென்ஸியில் ட்ராப் பண்ணனும். வீட்டுக்கு வர எப்படியும் ஒன்பது மணிக்கு மேலாயிடும் "

" டின்னர் ? "

" எனக்கு வேண்டாம்.... சேர்மனோட சாப்பிட வேண்டியிருக்கும் "

" அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டீங்களா ? "

" ம்.... சொல்லிட்டேன் "

" சரி.... சேர்மனோடு ரெஸிடென்ஸி ஹோட்டல் டின்னரை என்ஜாய் பண்ணுங்க. ஆனா இன்னிக்கு பிரதோஷம். நோ நான்வெஜ். முட்டை கூட வேண்டாம் "

" சரி "

" குட் பாய் " சொல்லிச் சிரித்த வளர்மதி செல்போனை அணைத்து "பவுச்" சுக்குள் போட்டுக்கொண்டு ஸ்கூட்டியைக் கிளப்பினாள்.

போக்குவரத்து நிரம்பி வழிந்த காந்திபுரம க்ராஸ் கட் சாலையைக் கடந்து பாரதியார் ரோட்டில் பயணித்து ரேஸ்கோர்ஸ் சாலைக்கு வந்த போது நேரம் சரியாய் ஆறு மணி.

ரேஸ்கோர்ஸில் வாக்கிங் ட்ராக் அருகே காவிநிற டிஸ்டெம்பர் பூசப்பட்ட அந்தப் பழங்கால கட்டிடம் பார்வைக்குத் தட்டுப்பட, திறந்திருந்த காம்பெளண்ட் கேட்டுக்கு உள்ளே ஸ்கூட்டியை விரட்டினாள்.

கட்டிடத்தின் நெற்றியில் பெயிண்ட் நிறம் மங்கிப்போன பெயர்ப்பலகை மாலை நேர வெய்யிலின் மிச்சத்தால் பார்வைக்கு தட்டுப்பட்டது.

தன்னுடைய ஸ்கூட்டியை ஒரு மரத்திற்கு கீழே நிறுத்திவிட்டு கட்டிடத்தை நோக்கி நடந்தாள்.

" உத்தரவின்றி அந்நியர்கள் பிரவேசிக்கக்கூடாது பாதுகாக்கப்பட்ட இடம் மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்"

சிவப்பு பெயிண்ட் எழுத்துக்களில் எச்சரித்த ஒரு அறிவிப்புப் பலகையை அலட்சியப்படுத்திவிட்டு கட்டிடத்திற்குள் நுழைந்தாள் வளர்மதி. மொத்த கட்டிடமும் நிசப்தத்தில் உறைந்து போயிருந்தது.

(தொடரும்)

[ பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X