For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சினிமாவுக்குள் சிறைப்படலாமா?

By Shankar
Google Oneindia Tamil News

- சுப. வீரபாண்டியன்

இன்று (18.10.2015) காலை 7 மணியிலிருந்து, நடிகர் சங்கத் தேர்தலைச் சில தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டுள்ளன. இது தேவையற்றது என்று சொல்வதை விட இப்படி ஒரு அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்வதே சரியானது.

3159 வாக்காளர்களைக் கொண்ட ஒரு சங்கத் தேர்தலை, தமிழ்நாட்டில் வாழும் ஏழரைக் கோடித் தமிழர்களின் தலையாய பிரச்சனை போலக் காட்டுவது எவ்விதத்திலும் அறம் ஆகாது!

திரைப்படக் கலைஞர்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களுக்குரிய இடம் அளிக்கப்படுவதில் நமக்கு ஒன்றும் வெறுப்போ வேதனையோ இல்லை. ஆனால், நாட்டில் நடக்கும் எதனையும் பற்றிக் கவலைப்படாமல், காலையிலிருந்து இரவு வரை, ஒரு சங்கத் தேர்தலை மக்கள் ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?

Cinemavukkul Siraipadalama?- Subavee

அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம், துப்புரவுத் தொழிலாளார்கள் சங்கம் என்று நாட்டில் ஆயிரம் சங்கங்கள் இருக்கின்றன. அங்கும் தேர்தல்கள் நடக்கின்றன. அது பல்வேறு செய்திகளுள் ஒன்றாக மக்களுக்குச் சொல்லப்படுகிறது. அதனைப் போல் இல்லாமல் சற்றுக் கூடுதலாக வேண்டுமானாலும் நேரம் ஒதுக்கி இத்தேர்தல் குறித்துக் கூறலாம். ஆனால் இதுதான் இன்றைய மக்களின் ஒரே கவலை போலவும், இத்தேர்தல் முடிவை ஒட்டித்தான் தமிழகத்தின் எதிர்காலமே அமையப் போகிறது என்பது போலவும் மிகைப் படுத்துவது, மக்களை அவமதிப்பதாகவே ஆகும்.

இந்தத் தேர்தல் பரபரப்பில் சில உண்மைகளும் வெளிப்பட்டுள்ளன. இயக்குனர் சேரன் பேசும்போது, சங்கத்திற்கு இருந்த கடனும் வட்டியும் 5 கோடி என்றும், நடிகர் சரத்குமார் முயற்சியால், வங்கிக் கடன் மூன்றைக் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார். நடிகர் விஜயகாந்த் தலைவராக இருந்தபோது, 15 ஆண்டுகளுக்கு முன்னால், 45000 ரூபாய் மின் கட்டணத்தைச் சங்கத்திற்குத் தள்ளுபடி செய்யக் கேட்டுக் கொண்டதாகவும், அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்றும் இன்னொரு செய்தி முக நூலில் காணக் கிடக்கிறது.

நமக்கு ஒன்றுமே புரியவில்லை. கோடிக் கணக்கில் ஊதியம் பெறும் நம் நடிகர்களால், இந்தப் பணத்தைக் கட்ட முடியாதா? இவர்களுக்குக் கடனை ரத்து செய்யும் நம் வங்கிகள், ஏழை விவசாயிகள் வாங்கியிருக்கும் 2000 ரூபாய்க் கடனைக் கூட ரத்து செய்வதில்லையே! எல்லா நடிகர்களும் பணக்கார்கள் இல்லை என்பது உண்மைதான். அங்கு பாரதூரமான ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. ஒருபக்கம் கோடிக்கணக்கில் பணம் ஈட்டும் நடிகர்கள், இன்னொரு பக்கம் அன்றாட உணவுக்கே வழியில்லாத நடிகர்கள் . அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவே நடிகர் சங்கம்.

அந்த வகையில் அங்கு நடைமுறை இல்லை, தவறுகள் நடக்கின்றன என்று கூறி ஓர் அணியை இன்னொரு அணி எதிர்த்துத் தேர்தலில் நிற்கிறது. அவர்களில் யார் உண்மையானவர்களோ, அவர்களைக் கண்டறிந்து வாக்களிப்பது அந்தச் சங்க உறுப்பினர்களின் கடமையும், உரிமையும் ஆகும்.அதற்கு மேல் பேச நம் போன்றவர்களுக்கு ஒன்றுமில்லை.

ஆனால் திடீரென்று, தமிழர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று ஒரு குரல் கேட்கிறது. ரஜினிகாந்த் உள்பட நடிகர்கள் பலரின் தமிழ்ப் பற்று நம்மை மயிர்சிலிர்க்க வைக்கிறது. தென்னிந்திய என்பதை இனியேனும் விட்டொழித்து, தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்பது நூற்றுக்கு நூறு சரியானதே. ஆனால் இன்றையத் தேர்தல் அதற்காக நடக்கவில்லை. நடிகர் நாசர் தலைமயிலான அணி முன்வைக்கும் கோரிக்கையைத் திசை திருப்புவதற்காகவே இப்போது இந்தச் சிக்கல் கிளப்பபடுகிறது என்று தோன்றுகிறது.

அதிலும் தமிழ்நாடு நடிகர் சங்கமா, தமிழர் நடிகர் சங்கமா என்றும் ஒரு கேள்வி இருக்கிறது. பெயரை உடனடியாக மாற்ற வேண்டும் என்கிறார் ரஜினிகாந்த். உயிரே போனாலும் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்கிறார் (இந்தச் சாதாரண உறுதிமொழிகளை நிறைவேற்ற, உயிர் ஏன் போகும் என்று நமக்குப் புரியவில்லை). அப்படி மாற்றினால், அந்த சங்கத்தில் ரஜினியே இடம் பெற முடியுமா என்று தெரியவில்லை. 'யார் தமிழர்கள்?' என்னும் கேள்விக்கு ஆயிரம் விடைகள் உள்ளன. நம் 'தமிழ்த் தேசிய நண்பர்களின்' ரத்த பரிசோதனை நிலையம் யார் யாரையெல்லாம் தமிழர் என்று ஒப்புக் கொள்ளும் என்றும் தெரியவில்லை.

பிற மொழியாளர்கள் தலைமைப் பதவிக்கு வரக்கூடாது என்று இயக்குனர்கள் பாரதிராஜாவும், சீமானும் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் படங்களின் கதாநாயகிகள் பலர் பிற மொழியாளர்களாகத்தான் உள்ளனர். இந்த இயக்குனர்கள்தான் பிற மொழி நடிகைகளை நமக்கு அறிமுகப்படுத்தினர்.

இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, இன்றையத் தேர்தலுக்கு அளிக்கப்படும் அளவுக்கு மீறிய விளம்பரம், மீண்டும் மீண்டும் மக்களைச் சினிமாச் சிறைக்குள் தள்ளுகிறது என்பதுதான் ஆகக் கூடுதலான கவலை.

English summary
Columnist Suba Veerapandian criticised media for the unnecessary importance givben to Nadigar Sangam Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X