Fact check: கொரோனா நிதியில் துர்கா ஸ்டாலின் ரூ.1 கோடி தங்க புடவை வாங்கியதாக பரவும் தகவல் போலி
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கூடுதல் படுக்கைகள் அமைக்கவும் தமிழ்நாடு அரசுக்கு பலர் நிவாரண உதவி வழங்கிய நிலையில், அந்த நிதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ரூ.1 கோடி மதிப்பில் தங்க புடவை வாங்கியதாக சமூக வலைதளங்களில் அதிமுக, பாஜகவினர் தெரிவித்து வரும் தகவலின் உண்மை தன்மை பற்றி அலசுவோம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்த தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்சம் அடைய தொடங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பிலும், மத்திய அரசு சார்பிலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நிவாரண நிதி
அதேபோல் மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளின் வாயிலாக நாட்டு மக்களுக்கு இலவசமாக செலுத்தியது. இதற்காக மத்திய மாநில அரசுகள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் ஏராளமானோர் ஆர்வத்துடன் மத்திய மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கினர்.

வாரி கொடுத்த மக்கள்
அந்த வகையில் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிஎம் கேர்ஸ் கணக்கிற்கும், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பட்ட நிவாரண நிதியின் கணக்கிற்கும் ஏராளமான மக்கள் கோடிக்கணக்கில் நிதி உதவியை வழங்கி கொரோனா தடுப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி தடையின்றி கிடைத்தது.

ரூ.1 கோடி புடவையா
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் வழங்கிய நிவாரண நிதியை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ரூ.1 கோடி மதிப்பில் தங்க ஜரிகை கொண்ட பட்டுப்புடவையை வாங்கிதாக ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அம்பானியுடன் சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிதா அம்பானி சந்தித்த புகைப்படத்தில் இந்த தகவலை எழுதி பலர் பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்களின் ட்விட்டர், பேஸ்புக் கணக்குகளில் இந்த புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தை முதலில் பகிர்ந்தவர் அதிமுகவை சேர்ந்த பிரபாகரன்.

அதிமுக, பாஜக
அவர் கடந்த 2020 ஆம் ஆண்டே இந்த படத்தை பகிர்ந்து இருக்கிறார். ஆனால், அப்போது திமுக ஆட்சிக்கே வரவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிதான் நடந்துகொண்டு இருந்தது. இதனை பிஜேபி, பாஜக என்ற பெயர் கொண்ட ட்விட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளும் அதிகளவில் பகிர்ந்து உள்ளன.

சந்திப்பு நடந்தது எப்போது?
துர்கா ஸ்டாலினின் இந்த புடவை தங்க நிறத்தில் இருக்கிறதே தவிர அது தங்க ஜரிகை என்பதும், அதன் மதிப்பு ரூ.1 கோடி என்பதற்கும் ஆதாரப்பூர்வமாக தகவல் இல்லை. அதேபோல், அம்பானி தம்பதியுடன் அவர் இருக்கும் புகைப்படம் உலகில் கோவிட் 19 என்ற ஒன்று நோய் வருவதற்கு முன் எடுக்கப்பட்டதாகும்.

உண்மை என்ன?
அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கள் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணத்திற்கு நேரில் அழைத்தபோது எடுக்கப்பட்டதாகும். இருவரும் தங்களுக்கு அழைப்பு விடுத்த தகவலை புகைப்படத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். எனவே இந்த செய்தி தவறானது என்ற முடிவுக்கு வர முடிகிறது.

Fact Check
வெளியான செய்தி
கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கப்பட்ட தொகையில் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ரூ.1 கோடி மதிப்பில் தங்க புடவை கட்டி உள்ளார்.
முடிவு
2019 ஆம் ஆண்டு கொரோனா பரவுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications