For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு கிடைக்கும் எல்லாம் மக்களுக்கே: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:எனக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்களையும், பணத்தையும் மக்களுக்கே கொடுக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் முதல்வர் கருணாநிதியின் பொன்விழாவை முன்னிட்டு, தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் நலிந்த திமுகவினருக்கு நிதியுதவி வழங்கும் விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மூத்த உறுப்பினர்கள் 1000 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.1 கோடி நிதியுதவியை பொற்கிழியாக வழங்கினார்.

அப்போது கருணாநிதி பேசுகையில்,

திமுவுக்கு எப்படி தியாகமும், அடக்குமுறையை ஏற்கிற வீரமும் தொடர்கதையோ அதுபோல அந்த தியாகங்களை காப்பாற்றுகின்ற பொறுப்பை, கடமையை திமுக ஏற்றுக் கொள்வதும் தொடர்கதை தான்.

இன்றைக்கு விளம்பரத்திற்காக யார் யாரோ ரூ.1000 கொடுத்துவிட்டு ஏழை பங்காளர் என்று ஆகி விடுகிறார்கள். பத்திரிக்கையிலே கொடுப்பவரை பொறுத்து பக்கம் பக்கமாக செய்தி வெளியிடபப்படுகிறது. அந்த பணம் கொடுக்கப்பட்டதா என அறிவிக்கப்பட்டவருக்கும் தெரியாமல், அறிவித்தவருக்கும் தெரியாமல் அறிவிக்கப்பட்ட பல தொகைகள் இப்படி விளம்பரத்தோடு நின்று போன காட்சி எல்லாம் எனக்கு தெரியும்.

இன்று நேற்றல்ல 50 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் தலைவர்களில் சில பேர் எங்கேயாவது வெள்ளம் வந்தால், புயல் அடித்தால், உடனடியாக அவர்களுடைய பெயரால் பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் ரூ.1 லட்சம் நிதி என அறிவிப்பு வரும். ஆனால் கொடுத்தாரா என்றால் கிடையாது.

ஒரு முறை சென்னை சட்டமன்றத்தில் பெரியவர் பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது புயல் நிவாரண நிதிக்கு- ஏதோ திமுகவிலிருந்து கொஞ்சம் நிதி திரட்டிக் கொடுத்தார்கள். சேலை வேட்டி எல்லாம் சேகரித்து கொடுத்தார்கள். அதை தவிர இன்னும் பொதுமக்களுடைய பிரதிநிதிகள், பொதுஅமைப்புகளில் உள்ளவர்கள் இன்னும் கொடுத்திருக்கலாம், பல பேர் கொடுக்கவில்லை என ஆதங்கப்பட்டார்.

சட்டமன்றத்திலிருந்த ஒரு நண்பர் எழுந்து ஒருவருடைய பெயரை கூறி, அவர் உங்களிடம் ரூ.1 லட்சம் கொடுத்ததாக பத்திரிக்கையில் செய்தி வந்தது. அவர் கொடுக்கவில்லையா அல்லது நீங்கள் வாங்கவில்லையா என கோபமாக கேட்டார்.

பெரியவர் பக்தவத்சலமோ ரொம்ப கிண்டல்காரர், தலையசைத்துக் கொண்டே, பத்திரிக்கையில் வந்தது உண்மைதான், அறிவிப்பு வந்ததும் உண்மைதான் அதை நீங்கள், நான், நாம் எல்லோரும் பார்த்தோம். ஆனால் பணம் தான் வரவில்லை என்றார்.

என்னை பொறுத்த வரையில் நான் சுய விளம்பரம் செய்து கொள்வதாக நீங்கள் கருத மாட்டீர்கள், நான் எப்படி பிறந்தேனோ, எப்படி வளர்க்கப்பட்டேனோ, எப்படி வாழ்ந்தேனோ அதைப்போல இறுதிவரை உங்களோடு இருந்து மறைய விரும்புகிறேன்.

அதனால்தான் எனக்கென்று வருகின்ற எந்த தொகையானாலும், எந்த பொருளானாலும் அது உங்களுக்கு என நான் கொடுத்துவிடுகிறேன். எனக்கு நாடெல்லாம் போகின்ற இடமெல்லாம் எத்தனையோ பரிசுப் பொருட்கள், தங்கம் வெள்ளி பொருட்கள் வருகின்றன.

அவைகளையெல்லாம் பார்க்கலாம் என என் வீட்டிற்கு நீங்கள் வந்தால் ஏமாந்து விடுவீர்கள். அண்ணா அறிவாலயத்திற்கு வந்தால் தான் பார்க்க முடியும். எனக்கு பிறகு காண வேண்டும் என்பதால் அவை எல்லாம் அங்கு கலைஞர் கருவூலத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கும் என்றைக்கும் அதை நீங்கள் பார்க்கலாம். கழகத்தை காப்பாற்றுகின்ற உங்களுக்காக என்றுதான் ஒப்படைத்திருக்கிறேன்.

தம்பி ஸ்டாலின் மற்றும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சன் தொலைக்காட்சியிலிருந்து பங்கு கொடுக்கப்பட்டது. என் மனைவியின் பெயருக்கு கிடைத்த அந்த பங்குத்தொகையைப் பிரித்து பார்த்த போது எனக்கும் ஓரளவிற்கு தொகை கிடைத்தது. அந்த தொகையில் எனக்கு கிடைத்த ரூ.5 கோடியை அறக்கட்டளை பெயரால் வங்கியில் போடப்பட்டு அதற்கு ஒரு பெருந்தொகை வட்டியாக மாதந்தோறும் கிடைக்கிறது.

அதை மாதந்தோறும் 50, 60 பேருக்கு ரூ.10,000 வீதம் தபாலில் அவர்களுக்கு அனுப்பி கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் அது நடந்து வருகிறது.

மாதந்தோறும் ரூ.3 லட்சம் வீதம் இதுவரை ரூ.44 லட்சத்திற்கு மேற்பட்ட தொகை அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் ரூ.1 கோடி புத்தக கண்காட்சிக்கு கொடுத்து வங்கியிலே டெபாசிட் செய்து அந்த தொகை ஆண்டுதோறும் கிடைக்கின்ற வட்டி தொகை நல்ல புத்தகங்களை தேர்வு செய்து,

அதை எழுதிய 5 ஆசிரியர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் தருவதற்காக பெரியார் வழியில் அண்ணா வழியில் அறிவை வளர்ப்பதற்கு புத்தகங்கள் பயன்படும் என்ற வகையில் என்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடி கொடுத்தது உங்களுக்கு தெரியும்.

நாம் உழைத்து இந்த இயக்கத்தை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளோம் என்றால் அதற்கு பரிசாக, இந்த நிதி வழங்கப்படிருக்கிறதே அல்லாமல் ஊதியமாக தரப்பட்டதல்ல என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X