• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மல்டி லெவல் மார்க்கெட்டிங் மோசடி:ஆயிரக்கணக்கானோரிடம் ரூ. 20 கோடி சுருட்டல்!!

By Staff
|

சென்னை:மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரிடம் ரூ. 20 கோடி வரை பணத்தை சுருட்டிக் கொண்டு குடும்பத்தோடு தலைமறைவான மோசடி மன்னனை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருடைய கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ramanathan

ஒரு காலத்தில் தமிழகத்தைக் கலக்கிய பெரும் மோசடி, நிதி நிறுவனங்கள் போட்ட பட்டை நாமம். நிதி நிறுவனங்களிடம் பணத்தைக் கட்டி ஏமாந்தவர்கள் இன்னும் கூட தங்களது பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் தி.நகர் பார்க்கில் அவ்வப்போது கூடிப் பேசிக் கொண்டு சோகத்துடன் உலவிக் கொண்டுள்ளனர்.

அதன் பிறகும் கூட மக்கள் படிப்பினை பெறவில்லை. இன்றளவிலும் நிதி நிறுவன மோசடிகள், சீட்டுக் கட்டி பணத்தை விட்டவர்கள் என தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

இந்த நிலையில் தமிழக மக்களை மிகப் பெரிய அளவில் மோசடி செய்து ரூ. 20 கோடி வரை ஏப்பம் விட்ட பலே ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவரது பெயர் ராமநாதன். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். முதலில் சென்னை சூளைமேட்டில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார் ராமநாதன். ஆரம்பத்தில் டிரை சைக்கிள் மூலம் வீடு வீடாகச் சென்று மளிகைப் பொருட்களை விற்று வந்தார்.

பின்னர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திட்டத்தைத் தொடங்கினார். மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் தனது மோசடியை ஆரம்பித்தார். தனது நிறுவனத்துக்கு வெங்கி புரவிஷன் மார்க்கெட்டிங் லிமிட்டெட் என்ற பெயரையும் சூட்டினார்.

Sri Venkki Supermarket

இதில் ரூ. 5,700 கட்டி உறுப்பினராக வேண்டும். இதில், 5,000 ரூபாயை திட்ட முதலீடாகவும், ரூ. 200ஐ பதிவுக் கட்டணமாகவும் எடுத்துக் கொள்வார் ராமநாதன். மீதமுள்ள 500 ரூபாயில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் உறுப்பினராவோருக்கு மாதந்தோறும் 750 ரூபாய் திரும்பத் தரப்படும். எனவே உறுப்பினராக விரும்புபவர்கள் எவ்வளவு முதலீட்டுத் தொகையை செலுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுக்கு கூடுதல் கட்டணம் மாதாமாதம் தரப்படுமாம்.

அருமையான திட்டமாக இருக்கிறதே என்று நம்பிய பலர் மளமளவென்று ராமநாதனிடம் பணத்தைக் கொண்டு வந்து கொட்டினர். சென்னையில் இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைப் பார்த்த ராமநாதன், சேலம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் கிளை பரப்பினார்.

டிரை சைக்கிள் ஓட்டிய ஆசாமி ஹோண்டா சிட்டிக்கு மாறினார். கிழிந்த வேட்டியில் அலைந்த ராமநாதன் கோட், சூட்டில் வளைய வந்தார்.

இதில் கொடுமை என்னவென்றால் இவர் சென்னையில் நடத்திய தனது நிறுவனத் தொடக்க விழாவில், காவல்துறை அதிகாரிகள் பலரும் கூட கலந்து கொண்டனராம்.

இப்படியாக தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளார். இவரிடம் 14,000க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தில் பணத்தை கட்டியுள்ளனர்.

ஆரம்பத்தில் சொன்னபடி மாதம் தோறும் பணம் கொடுத்து வந்துள்ளார் ராமநாதன். மளிகைப் பொருட்களும் வழங்கி வந்துள்ளார்.

ஆனால் பிறகு மளியை சமானை நிறுத்தினார். சமீப காலமாக மாதத் தொகையையும் தரவில்லை.

இந் நிலையில் திடீரென தனது கடைகளை மூடி விட்ட ராமநாதன் குடும்பத்தோடும் தலைமறைவாகி விட்டார்.

ஏமாந்து போனதை படு லேட்டாக புரிந்து கொண்ட பொதுஜனங்கள், வழக்கம்போல அழுத முகங்களுடன் மஞ்சள் பைகளுடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தனர். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரும் அடக்கம்.

இதில் ஒரு பெண் ரூ. 5 லட்சத்தை கட்டியிருக்கிறார். இன்னொரு வாலிபர் தனது பணமாக ரூ. 3.5 லட்சத்தையும் உறவினர்கள் நண்பர்களை சேர்த்துவிட்ட வகையில் ரூ. 13 லட்சத்தையும் ராமநாதனிடம் கட்டியுள்ளார்.

இவர்கள் தந்த புகாரையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று இரவு குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் ராமநாதனும், அவரது கூட்டாளி முத்துராமன் என்பவரும் நின்று கொண்டிருப்பதை அவரிடம் பணம் கட்டி ஏமாந்த கல்யாணி என்பவர் பார்த்தார்.

உடனடியாக அவர் குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தந்தார். இதையடுத்து குரோம்பேட்டை போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ராமநாதனும், அவரது கூட்டாளியும் மின்சார ரயிலில் ஏறி தாம்பரம் போய் விட்டனர். கல்யாணியும் அவர்களைப் பின் தொடர்ந்து அதே ரயிலில் ஏறினார்.

கல்யாணி தொடர்ந்து தகவல் தரவே, போலீஸார் பின் தொடர்ந்து வந்தனர். தாம்பரத்தில் ரயிலை விட்டு இறங்கிய ராமநாதன் திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்தில் ஏறினார்.

இந்தக் தகவலை கல்யாணி போலீசாருக்குத் தெரிவிக்கவே போலீசார் சினிமாவில் கடைசி சீனில் வருவது மாதிரி ஜீப்பில் விரட்டிச் சென்று பஸ்ஸை மடக்கினர்.

பின்னர் இருவரையும் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்களிடம் விசாரணை நடத்தும்போதுதான் அவர்கள் செய்த மோசடியின் விஸ்வரூபம் தெரிய வரும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more