For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்களின் திருமண வயதை குறைக்க மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: ஆண்களின் திருமண வயதை 21லிருந்து 18 ஆக குறைக்க மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்து திருமணம் மற்றும் சொத்துரிமைச் சட்டம், இந்திய குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையிலான மத்திய சட்ட கமிஷன் தீவிரமாக ஆய்வு செய்து இரண்டு அறிக்கைகளாக பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டது.

அந்த அறிக்கைகளை மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜிடம் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நேற்று வழங்கினார்.

பின்னர் அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் குறித்து நீதிபதி லட்சுமணன் மற்றும் கீர்த்தி சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த போது,

ஆண்களுக்கான திருமண வயதை 21 வயதில் இருந்து 18 வயதாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் குழந்தை திருமணங்களை தடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு 18 வயதில் திருமணம் செய்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் என்பதற்கான மருத்துவ ஆய்வு எதுவும் இல்லை.

ஓட்டு போடவும், பல்வேறு முடிவுகளை எடுக்கவும் ஆண்களுக்கு குறைந்த பட்ச வயதாக 18 ஆக நிர்ணயித்திருக்கும் போது திருமணத்துக்கான வயதையும் 18ஆக ஏன் நிர்ணயிக்க கூடாது.

ஆண்களுக்கு 21 வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை.

தற்போதைய இந்திய தண்டனை சட்டப்படி, மனைவியாக இருந்தாலும் கூட 15 வயதுக்கு குறைவான பெண்ணுடன் உடலுறவு கொண்டால் கற்பழிப்பு குற்றம் ஆகும். இந்த வயது வரம்பை 16 வயதாக உயர்த்துமாறு கமிஷன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 16 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் அவரது சம்மதத்தின் பேரில் உடலுறவு கொண்டால் கூட (அவரது கணவர் அல்லது காதலராக இருந்தாலும்) கற்பழிப்பு குற்றமாக கருதி தண்டனை வழங்க வேண்டும் என்று கமிஷன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த சட்ட குழப்பமும் இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கமிஷனின் உறுப்பு செயலாளர் சர்மா கூறுகையில், குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட 11 வயது சிறுமி புல்மோனி உடன் அவளது கணவர் கட்டாய உடலுறவு கொண்டதால் அவர் இறந்தார்.

இந்த வழக்கை தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் எழுந்த கருத்தை அடிப்படையாக கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

திருமணப் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்ணுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தாலும் அதை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்களால் வளர்ச்சி மற்றும் மேம்பாடு பாதிக்கப்படுகிறது. முக்கியமாக குடும்ப வன்முறை மற்றும் பாலியல் தொந்தரவு போன்றவைகளுக்கு பெண் குழந்தைகள் ஆளாகின்றனர். எனவே, பெண்களுக்கு கல்வி உரிமை மற்றும் வாழ்வதற்கான சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

50 ஆண்டு கால இந்து சொத்துரிமை சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சட்டப்படி, வாரிசுகளை இரண்டு பிரிவாக பிரித்துள்ளது. ஒருவர் இறந்து விட்டால் அவருடைய சொத்துகளை பெறுவதில் மனைவி, தாய் மற்றும் மகன்களுக்கு முன்னுரிமையும் அதற்கு அடுத்ததாக தந்தைக்கும் உரிமை அளிக்கப்படுகிறது.

இதை மாற்றி பிள்ளைகளின் சொத்துகளை அனுபவிப்பதில் தாயை போலவே தந்தைக்கும் சம உரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. உயிரிழந்த பிள்ளைகளின் தாய், தந்தை உயிருடன் இருந்தால் சொத்தில் ஒரு பகுதியை அவர்கள் பெறலாம் என்று சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது என்றார்.

நீதிபதி லட்சுமணன் கூறுகையில், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பெற்றோர்களின் நலன் பாதுகாக்கப்படும். பிள்ளைகள் மறைந்த பிறகு அவர்களுடைய சொத்தில் முதலில் தந்தை, தாய், மனைவி மற்றும் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X