ரேசன் கடை மறியல்-மக்கள் மீது தடியடி
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே இன்று காலை ரேசன் கடை முன் மறியல் செய்ய முயன்ற பொது மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் சிவசேனா மாநில நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் அடித்து இழுத்து சென்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ளது அருணாசலபுரம் கிராமம். இங்குள்ள ரேசன் கடையில் அத்தியவாசிய பொருட்கள் ஓழுங்காக வழங்குவதில்லை.
இன்று காலை சிவசேனா மாநில இளைஞரணி பொது செயலாளர் சக்திதரன் தலைமையில் ஊர் பிரமுகர்கள் மணிகண்டன், ராமசந்திரன், கதிர்வேல், பொன்வேல், செல்லத்தாய், ஆவுடையம்மாள் மற்றும் ஏராளமான பெண்கள் உள்பட 300 பேர் மறியல் செய்வதற்காக திரண்டு வந்தனர்.
அவர்கள் அனைவரும் கையில் ரேசன் கார்டுகளை ஏந்தியபடி கடை முன் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் கலைமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுபதி, ரோஸ்மேரி மற்றும் போலீஸ் படை விரைந்து வந்தது. அவர்கள் மறியல் செய்தவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் மறியலுக்கு திரண்டிருந்த பெண்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
ஆனால் சிவசேனா பொது செயலாளர் சக்திதரன் உள்பட ஆண்கள் பலர் அந்த இடத்தை விட்டு அசையாமல் நின்று தொடர்ந்து கோஷம் போட்டபடி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சக்திதரன் உள்பட 4 பேரை அடித்து இழுத்து சென்றனர்.
இநத் சம்பவத்தை அடுத்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.