ரயிலில் 1 லி. மினரல் வாட்டர் ரூ.2க்கு விற்க திட்டம்
மதுரை: ஓடும் ரயில்களில் பயணிகளுக்கு 1 லிட்டர் மினரல் வாட்டரை ரூ.2க்கு விற்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதே போல அனைத்துப் பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியையும் ஏற்படுத்தவுள்ளது. இப்போது இந்த வசதி முதல் வகுப்பு மற்றும் ஏசி பெட்டிகளில் மட்டும் உள்ளது. இந்த வசதியை 2ம் வகுப்புக்கும் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஹேமந்த்குமார் கூறுகையில்,
ரயில் பயணிகளுக்கு வசதியாக மதுரை ரயில் நிலையத்தில் மினரல் வாட்டர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குடிநீரை லிட்டருக்கு ரூ.2க்கு வழங்கவும் ஆலோசித்து வருகிறோம்.
தேவைக்கு ஏற்ப கூடுதல் மினரல் வாட்டர் உற்பத்தி செய்யப்படும். பயணிகளின் வரவேற்பை பொறுத்து மற்ற முக்கிய ரயில் நிலையங்களிலும் மினரல் வாட்டர் தயார் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
மதுரை ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம் முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்படுகிறது என்றார்.