
தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை-ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் புதிது புதிதாக கட்சிகள் உருவாகி அவை எல்லாம திமுகவை விமர்சிக்கின்றன. ஆனால் நாங்கள் பதிலுக்கு அவர்களை விமர்சித்து எங்களை தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை தி.நகரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,
தேர்தல் வாக்குறுதியில் சொன்ன அனைத்தையும் திமுக நிறைவேற்றி வருகிறது. கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சிறப்பான பட்ஜெட்டை பேராசிரியர் அன்பழகன் தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் கல்விக்காக ரூ.4,110 கோடிதான் ஒதுக்கினார்கள். ஆனால் இன்று ரூ.8,000 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளோம்.
இப்போது புதிது புதிதாக கட்சிகள் உருவாகி வருகின்றன. அவை எல்லாம திமுகவை விமர்சிக்கின்றன. ஆனால் நாங்கள் பதிலுக்கு அவர்களை விமர்சித்து எங்களை தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை. சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம். அதுதான் திமுக.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலங்களை கட்சியது திமுக அரசு தான். ஜெயலலிதா ஆட்சியில் எங்காவது பாலம் கட்ட முயற்சியாவது நடந்துண்டா?
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வரப் போகிறோம். சென்னையில் ஓடும் பல கால்வாய்கள் வழியாக பாலம் கட்டி போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண மாபெரும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.