தூங்கப் போன விமானி: சென்னை-டெல்லி விமானம் ரத்து
சென்னை: சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல இருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி, தனக்கு பணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி தூங்கப் போய்விட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதில் பயணிக்க இருந்த 116 பேர் அவதிக்குள்ளாயினர்.
நேற்று முன் தினம் இரவு இச் சம்பவம் நடந்தது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு டெல்லி கிளம்ப வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காலதாமதமாக இரவு 9.50 மணிக்கு தான் சென்னை வந்து சேர்ந்தது.
இதையடுத்து அந்த விமானம் இரவு 10.40 மணிக்கு டெல்லி புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் பயணிக்க 116 பேர் காத்திருந்தனர்.
இந் நிலையில் விமானி 'எனக்கு பணி நேரம் முடிந்து விட்டது. இனி நான் விமானத்தை இயக்க மாட்டேன்' என்று கூறிவிட்டு ஓய்வறைக்கு போய் படுத்துவிட்டார்.
விமானத்தை இயக்க வேறு விமானி இல்லாததால் டெல்லி விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஆத்திரம் அடைந்து கோஷமிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளை சமாதானம் செய்தனர்.
விமானம் ரத்து செய்யப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் வீடுகளுக்குத் திரும்பினர். சில பயணிகளை மட்டும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் ஹோட்டலில் தங்க வைத்தது.
பின்னர் நேற்று காலை 6.40 மணிக்குத்தான் அந்த விமானம் வேறு ஒரு விமானி மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.