சட்டசபையில் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

சட்டசபையில் இன்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது, மே தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் ஆலை முன்பு சங்கக் கொடியை ஏற்ற முயன்ற சிஐடியூ தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தொழிற்சங்கத்தினர் மீது போலீஸார் தடியடி நடத்துவது இது நான்காவது முறையாகும்.
தொழிற்சங்கத்தினர் ஏற்றிய கொடியை அகற்றிய போலீஸார், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தினரையும், கைது செய்துள்ளனர்.
இது உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை நசுக்கும் முயற்சியாகும். உழைக்கும் மக்களின் உரிமைகளை காக்க அரசு முன்வர வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.
மறைந்த முதல்வர் அண்ணா, உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆதரவாக திகழ்ந்தார். உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகள் குறித்து ஒரு நூலையும் எழுதியுள்ளார் என்றார்.
இதற்குப் பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திமுக அரசு எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளைக் காக்கத் தவறியதில்லை.
ஹூண்டாய் ஆலை அருகே நடந்த பிரச்சினை என்னவென்றால் அரசுக்குச் சொந்தமான சிப்காட் வளாகத்தில் கொடியேற்ற தொழிலாளர்கள் முயன்றுள்ளனர். எனவேதான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்ளை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார்.
ஆனால் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.