உத்தபுரம் போராட்டம் வாபஸ்: முதல்வரிடம் முறையிட முடிவு
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தபுரம் மக்கள் மலையில் இருந்து கொண்டு நடத்தி வந்த போராட்டம் திடீர் என வாபஸ் வாங்கப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் நேரில் சந்தித்து முறையிடப் போகின்றனர்.
உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் தலித்துகள் ஊருக்குள் வருவதைத் தடுக்கும்வகையில் கடந்த 1989ம் ஆண்டில் உயரமான தீண்டாண்மை சுவர் கட்டப்பட்டது. பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை அடுத்து இரு வாரங்களுக்கு முன்பு அரசு உத்தரவின்பேரில் அந்த சுவர் இடிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு மக்கள் வீடுகளை புறக்கணித்து அருகில் உள்ள மலையில் சென்று தங்கினர். சமாதான பேச்சுக்கு வந்த கலெக்டர் ஜவஹரிடம் 300க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகளை வேண்டாம் என்றுகூறி திருப்பிக் கொடுத்தனர்.
தீண்டாமை சுவர் எழுப்புதற்கு காரணமாக இருந்த முத்தாலம்மன் கோவில் நிலத்தை கிராமத்தினர் பெயரில் பட்டா தர வேண்டும். ஊருக்குள் புற காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதை உடனடியாக நிறைவேற்றாதவரை ஊருக்குள் திரும்புவதில்லை என்று கடந்த 8 தினங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை பல அரசு உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் பேச்சுவார்ததை நடத்தினர். ஆனால் முடிவு எதும் எட்டவில்லை. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக சுற்றுவட்டார பகுதிகளிலும் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டங்களும் நடந்தன.
இந்த நிலையில் நேற்று சேடப்பட்டி முன்னாள் திமுக எம்எல்ஏ தளபதி தலைமையில் சென்ற திமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து உத்தபுரம் மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் சந்தித்து பேசுவது ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு ஊருக்கு திரும்பினர்.
இதனால் கடந்த 8 தினங்களாக தொடர்ந்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.