For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் இந்தி ஆதிக்கம் வேண்டாம்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மற்ற மாநில ஆட்சி மொழிகளை புறக்கணித்துவிட்டு இந்தி மொழியை மட்டுமே உயர் நீதிமன்ற மொழியாக ஏற்பது இந்தியாவில் உள்ள பிறமொழி பேசும் மக்களுக்குத் தீங்கிழைக்கும் செயலாகும் என மத்திய அரசுக்கு திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று நடந்த திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விவரம்:

இந்தி ஆதிக்கம் வேண்டாம்:

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348(2) இந்தி உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகளையும் உயர் நீதிமன்றங்களில் வழக்கு நடத்தப் பயன்படுத்தலாம் என்றும், ஆனால், தீர்ப்புகள் ஆணைகள் உள்ளிட்டவை ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

ஆனால், சமீபத்தில் மத்திய அரசின் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் கூட்டுக்குழு தனது பரிந்துரையில், இந்தி மொழியை நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும், ஆணைகளுக்கும் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்து, அப்பரிந்துரையை சட்ட அமைச்சகம் இந்திய சட்ட ஆணையத்துக்கு அனுப்பிக் கருத்து கோரியுள்ளது.

மற்ற மாநில ஆட்சி மொழிகளை புறக்கணித்துவிட்டு இந்தி மொழியை மட்டுமே உயர் நீதிமன்ற மொழியாக ஏற்பது இந்தியாவில் உள்ள பிறமொழி பேசும் மக்களுக்குத் தீங்கிழைப்பதாகும்.

தமிழிலும் வேண்டும்:

கல்வியறிவற்ற கோடிக்கணக்கான பாமர மக்களும் நீதி கோரி உயர் நீதிமன்றங்களை அணுகும் நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வழங்குவதை அந்தந்த மாநில நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மத்திய ஆட்சிமொழி தமிழ்:

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமும் நீடிக்கும் என்றும், பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் பண்டித நேரு வழங்கிய வாக்குறுதி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் திமுக- இந்தி பேசாத மாநில மக்கள் உரிமை நிரந்தரமாகக் காப்பாற்றப்பட வேண்டுமெனில், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்து மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது ஒன்று தான் வழி என்று உறுதியாக நம்புகிறது.

அதன் அடிப்படையில் தொடக்க முயற்சியாக 77 திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான இலக்கியப் பண்பாட்டு வளம் நிறைந்த செம்மொழியான தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

ஓகேனக்கல் திட்டம்:

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓகேனக்கல் கூட்டுக் குடி நீர்த் திட்டத்திற்கான ரூ. 1,340 கோடி நிதி உதவிக்காகவும், தமிழக அரசு சென்னை மாநகரில் ரூ. 9,700 கோடி செலவில் அமைக்க எண்ணியுள்ள மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி உதவிக்காகவும், தமிழக அரசு சார்பில் ஜப்பான் நாடு சென்று வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி திரும்பியுள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த பொதுக் குழு தனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தத் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கிட முன் வந்துள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிர்வாகத்திற்கு இந்த பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், திட்டமிட்டபடி ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கும் என திட்டவட்டமாக அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கு பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்:

கடந்த அதிமுக ஆட்சியில் அரசுப் பணிகளில் புதிய நியமனங்களைச் செய்வதற்கு தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆட்சியில் அந்த தடையாணை ரத்து செய்யப்பட்டு 2006ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை அரசின் பல்வேறு துறைகளில் 2.81 லட்சம் பேர் புதிதாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள 6 பெரிய தொழிற்சாலைகள் மூலமாக 20,519 நேரடி வேலை வாய்ப்புகளும், 26,117 மறைமுக வேலை வாய்ப்புக்களும், கழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள 8 தொழிற்சாலைகள் மூலம் எதிர்பார்க்கப்படும் 46,300 நேரடி வேலை வாய்ப்புக்களும், 63,150 மறைமுக வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் புதிய தொழிற் கொள்கை மூலம் வரும் நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் மொத்தம் சுமார் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை பெற வழி வகுக்கப்பட்டுள்ளது.

1997ம் ஆண்டில் புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கையை (IT policy) அறிமுகம் செய்த கழக அரசு, தற்போதைய வளர்ந்து வரும் சூழ்நிலைக்கேற்ப புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கையை விரைவில் வெளியிடவுள்ளது.

கல்வி, வேலையை அடிப்படை உரிமையாக்க..

நாட்டில் படித்து பட்டம் பெற்று வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் இளைஞர்கள் பெருகி வருகின்றனர். இவர்கள் வேலை கிடைக்காத காரணத்தால் திசைமாறிச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் போக்குகளும், மனச்சோர்வடையும் சூழல்களும் தென்படுகின்றன.
இத்தகையச் சூழல்களை மாற்ற, இளைஞர்கட்கு கல்வியையும், வேலை வாய்ப்பினையும் குறிப்பிட்ட கால அளவிற்கு உறுதியாக அளிக்கக்கூடிய வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு கல்வி, வேலை வாய்ப்பினை அளிப்பதை அவர்களின் அடிப்படை உரிமையாக்கிட வேண்டும் என நடுவண் அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அர்ஜூன் சிங்குக்கு நன்றி:

சென்னையில் 17 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரூ. 76.32 கோடி செலவில் எழுப்பப்படும் கட்டிடத்தில் "செம்மொழி தமிழ் ஆய்வு மையம்'' அமைக்க முன் வந்த பிரதமருக்கும், மத்திய அமைச்சரவைக்கும், உறுதுணையாக இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டித் தலைவர் சோனியா காந்திக்கும், மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்குக்கும், இந்த பொதுக் குழு தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதி்ல் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X