தீவிரவாத மிரட்டல்: தினமலர் அலுவலகத்திற்குப் பாதுகாப்பு
சென்னை: தினமலர் அலுவலகத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தக் கோவில்களுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய முன்னணி நாளிதழான தினமலர் அலுவலகமும் தாக்கப்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தினமலர் அலுவலகத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.