சேலத்தில் பாஜக தலைவர் கார் எரிப்பு
சேலம்: தமிழக பாஜக பொதுச் செயலாளர் ரமேஷின் காரை சிலர் தீவைத்து எரித்ததால், சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் சமீபத்தில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தின்போது அதைத் தடுக்க முயன்ற பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. அப்போது பெரியார் திராவிடர் கழகத்தினரின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாநில பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் காரை சிலர் தீவைத்து எரித்துள்ளனர்.
ரமேஷின் வீடு சேலம் மரவனேரியில் உள்ளது. வீட்டின் முன்புறத்தில் காரை நிறுத்தி வைத்திருப்பார் ரமேஷ். நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர், உங்களது காரை பெட்ரோல் குண்டு வீசித் தகர்க்கப் போகிறோம். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று யாரோ கூறியுள்ளனர்.
இதையடுத்து ரமேஷ் வேகமாக வெளியே வந்தார். அப்போது காரின் கீழ்ப் பகுதியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்து வீடுகளின் வாட்ச்மேன்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
வேகமாக தீயை அணைத்து விட்டதால் கார் முழுமையாக எரியாமல் தடுக்கப்பட்டது. பின் பகுதி மட்டும் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தால் பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர். ரமேஷ் வீட்டிற்கு அவர்கள் பெரும் திரளாக திரண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், சேலம் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை தடுக்க பெரியார் திராவிடர் கழகத்தினர் முயன்றனர். விழா நடந்த இடத்திற்கு வந்து வெடிகுண்டுகளுடன் மிரட்டினர். இதைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த நிலையில்தான் எனது வீட்டுக்கு நள்ளிரவில் ஒரு பெண் உள்பட ஐந்து பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கார் மீது பெட்ரோல் கலந்த துணியை வீசி தீவைத்துள்ளனர்.
குற்றவாளிகளை போலீஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார். இச்சம்பவத்தைக் கண்டித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.