For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடை மழையால் ஸ்தம்பித்த சென்னை-பல பகுதிகள் வெள்ளக்காடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நகரில் பெய்து வரும் அடை மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. பெருங்குடி உள்ளிட்ட தாழ்வான பல பகுதிகளில் வீடுகளை மழை நீர் வெள்ளமென சூழ்ந்துள்ளது.

சென்னை நகரில் கடந்த சில நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன மழை பெய்து வருகிறது. விடாமல் பெய்து வரும் மழை, நேற்று மிக பலத்த மழையாக மாறி மக்களை அச்சுறுத்தி விட்டது.

விடிய விடிய நிற்காமல் கொட்டிய கன மழையால் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளக்காடாகியுள்ளன.

அனைத்து சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து வெகுவாக பாதித்தது. வாகனங்கள் செல்ல முடியாமல் முடங்கிப் போயின.

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவதிக்குள்ளானார்கள். வடசென்னை பகுதியில் புளியந்தோப்பு, ஆட்டுத் தொட்டி, வியாசர்பாடி, புரசைவாக்கம், தண் டையார்பேட்டை, வண் ணாரப்பேட்டை கொருக்குப்பேட்டை பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

நேரு நகரில் மின்கம்பம் முறிந்தது. வியாசர்பாடி கன்னிகா புரம், ரெயில்வேபாலத்தில் வெள்ளம் தேங்கியது. இதனால் நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. கொளஞ்சிபுரம், பக்கிங்காம் கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதால் பின்னிமில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கால்வாயில் அடைப்பு-நந்தனத்தில் வெள்ளம்:

தென்சென்னையில் மாம்பலம் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நந்தனம் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்தது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் சென்று அடைப்பை சரி செய்தனர்.

வடபழனி ஆவிச்சிபள்ளி அருகே ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தண்டையார்பேட்டை மீனாம்பாள் நகரில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு பெருமளவில் தண்ணீர் தேங்கி குடியிருப்பு பகு திக்குள்ளும் புகுந்தது. மேயர் உத்தரவுப்படி இங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

வெள்ள நிலைமை குறித்து மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன் கூறுகையில், சென்னை நகரில் மழை நீர் தேங்காமல் தடுக்க உடனுக்குடன் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன.

இதனால் பெரும்பாலான இடங்களில் பெரிய அளவில் வெள்ளம் தேங்கவில்லை. தேங்கிய சில இடங்களிலும் உடனடியாக வெள்ளத்தை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழை நீரை உடனடியாக அகற்றுவதற்காக மாநகராட்சி ஊழியர்கள் 24மணி நேரமும் பணியில் உள்ளனர். 86 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. புகார் தெரிவித்தால் உடனடியாக மழைநீர் அகற்றப்படும்.

வடசென்னையில் கேப்டன் காட்டன் கால்வாய் ரூ.26 லட்சம் செலவிலும் கொடுங்கையூர் கால்வாய் ரூ.19லட்சம் செலவிலும் தூர்வாரப்படுகிறது. இது தவிர நகரில் உள்ள 16 நீர்வழி தடங்களை அமைக்க வும், மழைநீர் கால்வாய் அமைக்கவும் ரூ.1500 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஒப்புதல் பெற்று இந்த திட்டம் நிறை வேறினால் நகரின் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்காது. வெள்ளத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உணவு வழங்க 4 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

மின்சாரம் தாக்கி ஊனமுற்றவர் பலி:

நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக சூளை, தட்டான் குளம் அய்யாவு தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்ற ஊனமுற்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

நேற்று இரவு அவர் கொட்டும் மழையில் டீ குடிக்க சென்றார்.அப்போது மின்சார கம்பம் அருகே மழை காரணமாக மின் கசிவு ஏற்பட்டு இருந்தது. அந்த வழியாக சென்ற சீனிவாசன் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலியானார்.

அவருக்கு முன்னால் சென்ற பாஸ்கர் என்ற வாலிபர் மின்சாரம் தாக்கியதும் குதித்து ஓடி தப்பி விட்டார். சீனிவாசன் ஊனமுற்றவர் என்பதால் ஓட முடியாமல் பலியாகி விட்டார்.

இது பற்றி புகார் செய்தும் அவரது பிணம் 3 மணி நேரம் அகற்றப்படாமல் அங்கேயே கிடந்தது. மின்சாரம் துண்டிக்கப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், உறவினர்களும் ஆத்திரம் அடைந்து மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்தனர். அவர்களையும், பொது மக்கள் ஆவேசத்துடன் முற்றுகையிட்டனர்.

உதவிப் பொறியாளர் சஸ்பெண்ட்:

மழை கொட்டி வரும் நிலையில், பணிக்கு லேட்டாக வந்ததால், உதவிப் பொறியாளரை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்ைக எடுத்தார் சென்னை மேயர் மா.சுப்ரமணியன்

பருவமழை தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து மழை பாதிப்புகளை தடுக்க மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்பட ஊழியர்கள் அனைவரும் காலை 6மணிக்கே பணிக்கு வர வேண்டும். இன்னும் 2மாதத்துக்கு விடுமுறை கிடையாது என்று கடந்த வாரம் மேயர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை கொட்டியது. கைமுறிந்ததால் ஓய்வு எடுத்து வரும் மேயர் மா.சுப்பிரமணியன் அதை பொருட்படுத்தாமல் கையில் கட்டுடன் இன்று அதிகாலை 5 மணிக்கே வெள்ளம்தேங்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

திருவான்மியூர் பகுதிக்கு சென்ற போது அங்குள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் பெரியசாமி 7.30 மணி வரை பணிக்கு வரவில்லை. இதனால் அவரை சஸ்பெண்டு செய்து மேயர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

பெருங்குடியில் வெள்ளம்:

பெருங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சீவரம், கந்தன்சாவடி எம்.ஜி.ஆர்.சாலை, கே.பி.கே.நகர், சந்தியா நகர், கல்லுக் குட்டை திருவள்ளுவர் நகர், செந்தில் நகர், மாருதி நகர், பெத்தேல் நகர் ஆகிய இடங்களில் மழைநீர் சூழ்ந்தது.

கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகரில் அதிக அளவு தண்ணீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் தெர்மாகோலை படகாகப் பயன்படுத்தி வெளியேறினார்கள்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பெருங்குடி பேரூராட்சித் தலைவர் கே.பி.கந்தன் தலைமையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. தண்ணீரை அகற்றும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

வெள்ளத்தில் சிக்கிய லாரி:

வியாசர்பாடி கன்னிகா புரம் ரெயில்வே பாலத்தில் கீழ் மார்பளவுக்கு தண்ணீர் தேங்கியது. அதன் வழியே வாகனங்கள் செல்ல முடிய வில்லை. இரு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் பாலத்தின் கீழ் இன்று காலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ்கள் செல்லாததால் பயணிகள் அவதிப்பட்டனர். மீன்பாடி வண்டிகளில் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் களையும், பொருட்களையும் தூக்கி வைத்துக் கொண்டு பாலத்தை கடந்து சென்றனர்.

இதற்காக மீன்பாடி வண்டிகளில் ரூ.10, ரூ.15 என கட்டணம் வசூலிக்கப்பட்டது. மீன்பாடி வண்டி வைத்திருப்போருக்கும், டிரை சைக்கிள் ஓட்டிகளுக்கும் அங்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

முன்னதாக இந்தப்பாலத்தின் கீழ் சென்ற லாரி ஒன்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. லாரி தொடர்ந்து செல்ல முடியாமல் பழுதாகி தண்ணீரில் நின்றது. பின்னர் போலீசாரும் அந்தப் பகுதி மக்களுக்கும் சேர்ந்து வெள்ளத்தில் சிக்கிக் கிடந்த லாரியை தள்ளி அப்புறப்படுத்தினர்.

காய்கறி விலை கிடுகிடு உயர்வு:

கன மழை காரணமாக காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது.

காய்கறி சாகுபடி குறைந்த விட்டதால், வெளியூர்களிலிருந்து சென்னைக்கு காய்கறி வரத்து குறைந்து போனதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கோயம்பேடு மார்க் கெட்டில் தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படு கிறது. ஆனால் மற்ற கடைக் காரர்கள் வாங்கி விற்கும் போது 50 ரூபாய்க்கு விற் கிறார்கள். இதே போல் கத்தரிக்காய் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது.

வெண்டைக்காய் கிலோ ரூ. 15க்கும், கேரட் ரூ. 35க்கும் விற்பனையாகிறது. இதேபோல அவரைக் காய் ரூ. 40, பீன்ஸ் ரூ. 40, இஞ்சி ரூ. 35, பட்டாணி ரூ. 80, முருங்கைக்காய் ரூ. 20 என விற்கிறது.

குடை மிளகாய் ரூ. 35க்கும், சிறிய வெங்காயம் ரூ. 20க்கும் விற்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X