For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களவை தொகுதி அறிமுகம்-32: மதுரை

By Sridhar L
Google Oneindia Tamil News

Madurai
மதுரை: தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் கொண்ட மாநகர், கலாச்சாரத் தலைநகர் என அழைக்கப்படும் தமிழகத்தின் 2வது பெரிய நகரமான மதுரை, லோக்சபா தொகுதிகள் வரிசையில் 32வதாக வருகிறது.

கக்கன், கே.டி.கே.தங்கமணி, பி.ராமமூர்த்தி, ஆர்.வி.சுவாமிநாதன் போன்ற பெரிய தலைவர்கள் நின்று வென்ற தொகுதி.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே மாறி மாறி போய் வந்த மதுரையை, 1998ம் ஆண்டு மீட்ட 'சுந்தரபாண்டியன்' ஜனதாக் கட்சியின் சுப்ரமணிய சாமி.

தொகுதி மறு சீரமைப்பின் கீழ் மதுரை தொகுதியும் மாற்றத்திற்குள்ளாகியுள்ளது.

முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியுள்ளது. திருப்பரங்குன்றத்தை விருதுநகர் தொகுதிக்குக் கொடுத்து விட்டார்கள்.

தற்போது மதுரை லோக்சபா தொகுதியின் கீழ் வரும் புதிய சட்டசபைத் தொகுதிகள் - மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு.

மதுரை சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில், மதுரை மேற்கில் அதிமுகவின் எஸ்.வி.சண்முகம் உறுப்பினராக இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸின் கே.எஸ்.கே.ராஜேந்திரன் வென்றார்.

மதுரை மத்தியில் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் உறுப்பினராக இருந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் இடைத் தேர்தலில் திமுகவின் கெளஸ் பாஷா வெற்றி பெற்றார்.

மதுரை கிழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்மாறன், திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ், சமயநல்லூரில் திமுகவின் தமிழரசி, மேலூரில் அதிமுகவின் சாமி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மதுரை தொகுதியை வழக்கமாக திமுக, அதிமுக நிற்காமல் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு விடுவது வழக்கம். கடந்த 57ம் ஆண்டு முதல் இதுவே வழக்கமாக உள்ளது.

இங்கு இதுவரை காங்கிரஸ் கட்சி எட்டு முறை வென்றுள்ளது. காங்கிரஸின் கோட்டையாக திகழ்கிறது மதுரை. சிபிஎம் 3 முறையும், சிபிஐ ஒரு முறையும் வென்றுள்ளன.

இந்தத் தொகுதியில் இதுவரை திமுக, அதிமுக வென்றதில்லை. தமிழகத்தின் மிக முக்கிய தொகுதிகளி்ல ஒன்றான மதுரையில் இதுவரை திமுக, அதிமுக வெல்லாதது வினோதம்தான்.

1980ம் ஆண்டு முதல் 98 வரை 18 ஆண்டுகள் ஏ.ஜி.சுப்பராமன் குடும்பத்தின் கையில்தான் மதுரை தொகுதி இருந்தது. ஏ.ஜிசுப்பராமன் 9 ஆண்டுகள் இத்தொகுதியின் உறுப்பினராக இருந்தார். 89 முதல் 98 வரை அவரது மகன் ஏ.ஜி.எஸ். ராம்பாபு எம்.பி.யாக இருந்தார்.

மதுரையில் எது நடந்தாலும் திருவிழாதான். அந்த வகையில் வருகிற லோக்சபா தேர்தலும் மாபெரும் விழாவாக மாறக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

காரணம், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியோ அல்லது அவரது மகள் கயல்விழியோ நிற்கலாம் என பேச்சு அடிபடுகிறது.

கடந்த முறை வென்ற சிபிஎம் இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடக் கூடும். ஆனால் அதிமுகவே இம்முறை நிற்கலாம் என்றும் கூறப்படுகிறது. வலுவான சிலரின் பெயர்களும் வேட்பாளர்களாகக் கூடிய வாய்ப்புகளாக கூறப்படுகின்றன.

ஒருமுறை வென்ற, சுப்ரமணிய சாமியும் கூட நிற்கக் கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது. எனவே வருகிற லோக்சபா தேர்தல் மதுரை மக்களுக்கு மறக்க முடியாத தேர்தலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த தேர்தல் நிலவரம்

பி.மோகன் (சிபிஎம்) - 4,14,433.
ஏ.கே.போஸ் (அதிமுக) - 2,81,593.
வெற்றி வித்தியாசம் - 1,32,840 வாக்குகள்.

இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்

1952 - கக்கன் - காங்.
1957 - கே.டி.கே.தங்கமணி - சிபிஐ
1962 - எம்.எம்.ஆர். சுப்பராமன் - காங்.
1967 - பி.ராமமூர்த்தி - சிபிஎம்
1971 - ஆர்.வி.சுவாமிநாதன் - காங்.
1977 - ஆர்.வி.சுவாமிநாதன் - காங்.
1980 - ஏ.ஜி.சுப்பராமன் - காங்.
1984 - ஏ.ஜி.சுப்பராமன் - காங்.
1989 - ஏ.ஜி.எஸ். ராம்பாபு - காங்.
1991 - ஏ.ஜி.எஸ்.ராம்பாபு - காங்.
1996 - ஏ.ஜி.எஸ். ராம்பாபு - தமாகா.
1998 - சுப்ரமணிய சாமி - ஜனதா.
1999 - பி.மோகன் - சிபிஎம்.
2004 - பி.மோகன் - சிபிஎம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X