For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெவுக்கு சுவிட்சர்லாந்து தமிழர் பேரவை நன்றி

By Staff
Google Oneindia Tamil News

பெர்ன்: இலங்கையில் தமிழ் ஈழம் அமைக்க உதவுவேன் என கூறி இருக்கும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொள்வதாக சுவிட்சர்லாந்து தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த பேரவையின் உப தலைவர் தவராஜா மற்றும் செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம், ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

ஈழத் தமிழனம் அனைத்தையும் இழந்து அலைகடலில் தத்தளித்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தங்களின் வாயில் இருந்து வெளிவந்துள்ள வார்த்தைகள் நம்பிக்கை நட்சத்திரமாய் எம்மை புளகாங்கிதம் அடைய செய்துள்ளன.

தந்தையர் நாடு என நினைத்து நம்பிக்கையோடு, நீதியை எதிர்பார்த்து இருந்த எமக்கு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என தம்பட்டம் அடித்து கொண்டிருக்கும் பாரத தேசம் செய்த- தொடர்ந்தும் செய்து வருகின்ற-துரோகம், தாங்கொணாத் துயரை தருகின்றது.

அந்த வேளையில் ஈழத் தமிழனத்தின் துயர்துடைக்க தமிழ் ஈழம் அமைவது தான் ஒரே தீர்வு எனில் அதை பெற்று தர தயார் என நீங்கள் விடுத்துள்ள அறிவிப்பு பாரத தேசம் எமக்கு எதிரி அல்ல மாறாக அங்குள்ள தற்போதைய ஆளும் குழுமமே எமக்கு எதிரி என்ற புரிதலை ஏற்படுத்தியுள்ளது.

இடர்மிகுந்த ஒரு சூழ்நிலையில் மிகுந்த அவமானங்களை சந்தித்து அரசியலில் முன்னணிக்கு வந்தவர் நீங்கள். அதனால், சொந்த மண்ணிலே தமிழ் மக்கள் அவமானப்படுத்தப்பட்ட போது, பாரபட்சங்களுக்கு இலக்கான போது, கொடுமைப்படுத்தப்பட்ட போது எத்தகைய உணர்வோடு இருந்திருப்பார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

உரிமையுடன் எதிர்பார்க்கின்றோம்...

ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, அவர்களின் சுதந்திரத்துக்காக தனது சக்திக்கும் அதிகமாக பங்களிப்பு வழங்கிய அமரர் பொன்மனச் செம்மல், புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் கட்டி வளர்க்கப்பட்ட கட்சியின் பொறுப்பாளராக பதவி வகிப்பவர் நீங்கள்.

அவர் வழங்கிய ஆதரவை போன்று நீங்களும் எமக்கு, எமது மக்களின் சுதந்திர வாழ்வுக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என நாம் உரிமையுடன் எதிர்பார்க்கின்றோம்.

தாயின் விமர்சனமாக நினைக்கின்றோம்...

கடந்த காலங்களில் எமது போராட்டம் தொடர்பிலும் அதன் செல்நெறி தொடர்பிலும் நீங்கள் முன்வைத்த ஒரு சில விமர்சனங்கள் எமக்கு மனக்கசப்பை தந்திருந்தமையை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஒரு பிள்ளையின் செயல்பாட்டை விமர்சிப்பதற்கு ஒப்பாக அதை கருதி மறந்துவிட சித்தமாக இருக்கின்றோம்.

ஆபத்தில் இருக்கும் போது நேசக்கரம் நீட்டுவதே ஆழமான நட்பின் அடையாளம் என்பதற்கு அமைய இன்று நீங்கள் நீட்டியுள்ள நேசக்கரத்தை வாஞ்சையுடன் பற்றி கொள்கிறோம்.

தாய்மையுள்ளம் கொண்ட நீங்கள், கொண்ட கொள்கையில் இருந்து கிஞ்சித்தும் விலகாத உறுதியான குணம் உடையவர் என அறிவிக்கப்பட்டவர். நீங்கள் கூறிய வார்த்தைகள் தங்கள் உதட்டில் இருந்து அல்லாமல் அடிமனதில் இருந்து வந்தவை என நாங்கள் முழுமனதாக நம்புகின்றோம்.

தங்களின் வார்த்தைகள் மூலம் எங்களுக்கு கிட்டியுள்ள ஆன்ம பலம் முன்னரை விட எமது போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுக்க உதவும் என நம்புகின்றோம். அதற்காக தங்களுக்கு சுவீஸ் நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களின் சார்பாகவும், தமிழ் பேரவையை பிரதிநிதித்துவம்படுத்தும் அனைத்து தமிழ் அமைப்புகளின் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

எங்கள் மத்தியிலே உருவாகியுள்ள இந்த பாச பிணைப்பு ஈழத் தமிழனம் விடுதலை பெற்ற பின்பும் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X