For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நானும், கார்த்திக்கும் இருப்பதால் பாஜகவிடம் மதவாதம் இருக்காது-சரத்குமார்

By Staff
Google Oneindia Tamil News

கோவை: நானும், கார்த்திக்கும் கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் பாஜக மதவாதத்துடன் நடந்து கொள்ளாது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

அதிமுக தலைவர் ஜெயலலிதாவை போல் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமக தலைவர் சரத்குமாரும் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார்.

நெல்லையில் பிரசாரத்தை முடித்து கொண்டு நேற்று மதுரை வந்த அவர் அங்கிருந்து விமானம் மூலம் பொள்ளாச்சியில் பிரசாரம் செய்ய கிளம்பினார்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டில் பல இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இலவச கலர் டிவி, கியாஸ் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு பதிலாக ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும். கல்வி, மருத்துவம், என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் கல்வி போன்றவற்றையும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

இதுபோல திட்டங்களை செயல்படுத்தினால் மக்கள் வாழ்வில் வளம் ஏற்படும். அவர்களது வாழ்க்கைத்தரமும் உயரும். அதன் மூலம் நமது தேசமும் வளர்ச்சி அடையும். கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சுகாதார வசதி, ஆம்புலன்ஸ் வசதி ஆகியவற்றை இலவசமாக செய்து தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

தேர்தல் ஆணையத்திடம் புகார்...

தமிழகத்தில் திடீரென்று அரசு டவுன் பஸ்களின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். இதுகுறித்து நான் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய இருக்கிறேன் என்றார் அவர்.

பின்னர் பொள்ளாச்சியில் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம கோவை வந்தார். அங்கு பாஜக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசும், மாநில அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்த்துவைப்போம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது.

அதனால் பாஜக தலைமையிலான மக்கள் நலன் காக்கும் அரசு மத்தியில் அமையவேண்டும். சிந்தித்து செயல்படும் வலிமையான அரசு நமக்கு தேவை. எதிர்கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி. எங்கள் கூட்டணியின் நோக்கம் மக்கள் சிறப்பாக வாழவேண்டும் என்பதுதான். பாஜக இதுவரை நம்நாடு வளமான நாடாக இருக்க செயல்பட்டு வந்து உள்ளது.

காங். வளர்ச்சிக்கு பணியாற்றவில்லை...

நான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோது, என்னிடம் எதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்தீர்கள்? என்று கேட்கிறார்கள். திமுகவும், அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பதவி சுகத்தை அனுபவித்தன. அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோது நானும், கார்த்திக்கும் கூட்டணி வைக்கக்கூடாதா? நானும், கார்த்திக்கும் இருக்கும்போது மதவாதம் இருக்காது.

சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகிவிட்டது. பல ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த காங்கிரஸ் நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றவில்லை. பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அதை முற்றிலும் தவிர்க்கவும், விலைவாசியை உயராமல் கட்டுப்படுத்துவதிலும் பாஜக மட்டுமே சிறப்பாக பணியாற்றி உள்ளது.

அதனால் திறமையுள்ள பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருப்பதை பெருமையாக கருதுகிறோம். இன்றைய சூழ்நிலையில் நாட்டில் பொருளாதார நெருக்கடி, தொழிற்சாலைகள் மூடல், வேலையிழப்பு என்று மக்கள் அவதிப்படுகிறார்கள்.

படித்த இளைஞர்கள் 28 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 60 லட்சம்பேர் பெயர் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். எங்கள் கூட்டணி மக்களுக்காக பாடுபடும் கூட்டணி. அதனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைய ஆதரவு தாருங்கள் என்றார் சரத்குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X