For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பான் கி மூன் ரொம்ப பிசியாம்.. இலங்கை போக வாய்ப்பில்லை!

By Staff
Google Oneindia Tamil News

Ban Ki Moon
நியூயார்க்: இலங்கைக்கு நேரில் வந்து வன்னி நிலைமையைப் பாருங்கள் என ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதை ஏற்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கொழும்பு செல்ல மாட்டார் எனத் தெரிகிறது. கை நிறைய வேலைகள் இருப்பதால் அவர் போவதற்கான வாய்ப்புகள் இல்லையாம்.

நேற்று முன்தினம் பான் கி மூன் ராஜபக்சேவுக்குப் போன் செய்து உடனடியாக போரை நிறுத்துங்கள், போர் பாதித்த பகுதிகளுக்கு ஐ.நா. மனிதாபிமானக் குழுக்கள் செல்ல அனுமதியுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு ராஜபக்சே, நீங்களே நேரில் வந்து வன்னி நிலவரத்தைப் பாருங்கள், இடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களைப் பாருங்கள் என்று பதிலுக்குக் கூறினார்.

இதை ஏற்று பான் கி மூன் இலங்கை செல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், சமீபத்தில், இலங்கை சென்று திரும்பிய ஜப்பான் தூதர் யசுகி அகாஷியின் பயணம் குறித்து ஐ.நாவுக்கான ஜப்பான் தூதர் யூகியோ டகாசுவும், மூனை நேரில் பார்த்து விளக்கினார். அப்போது நீங்கள் இலங்கை செல்ல வேண்டும் என மூனை டகாசு வலியுறுத்தினாராம்.

அப்போது பான் கி மூன், எனது பயணத்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றால், நிச்சயம் அதுகுறித்து நான் பரிசீலிப்பேன் என்று உறுதி அளித்தாராம். இதனால் பான் கி மூன் கொழும்பு வருவார் என்ற நம்பிக்கை பிரகாசமானது.

ஆனால் பான் கி மூன் இப்போதைக்கு இலங்கை செல்ல வாய்ப்பில்லை என்று ஐ.நா. வட்டாரத்தில் கூறப்படுகிறது. காரணம், பான் கி மூனுக்கு நிறைய எங்கேஜ்மென்ட்கள் இருக்கிறதாம்.

மே 11ம் தேதி மத்திய கிழக்குப் பிரச்சினை குறித்து ரஷ்ய பிரதிநிதிகளுடன் பான் கி மூன் பேச வேண்டியுள்ளதாம். 15ம் தேதி சீன துணை வெளியுறவு அமைச்சர் பான் கி மூனை சந்திக்க வருகிறாராம்.

இதுகுறித்து பான் கி மூனின் உதவி செய்தித் தொடர்பாளரான பர்ஹான் ஹக் கூறுகையில், ஏற்கனவே திட்டமிட்டதை மாற்ற முடியாது. ஒரு வேளை அதில் மாற்றம் இருந்தால் பான் கி மூன் இலங்கை செல்லும் வாய்ப்பு உண்டு என்றார்.

இவர் கூறுவதைப் பார்க்கும்போது பான் கி மூன் இப்போதைக்கு இலங்கை செல்ல மாட்டார் என்றே தெரிகிறது.

இதற்கிடையே, மே 11ம் தேதி கூடும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை குறித்து விவாதிக்க வேண்டும் என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொச்னார் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இருவரும் சமீபத்தில் கொழும்பு சென்று வந்தவர்கள். இருவரிடமும், இலங்கை அரசுத் தரப்பு முகத்தில் அடித்தாற் போல பேசி அனுப்பி வைத்தது என்பது நினைவிருக்கலாம்.

கர்ப்பிணிகளை மீட்க ஐ.நா. திட்டம்

இதற்கிடையே, ஐ.நா. மக்கள் தொகை நிததியம், போர் முனையில் சிக்கியுள்ள கர்ப்பிணிப் பெண்கள், பெண்கள், சிறுமிகள் ஆகியோரை பத்திரமாக மீட்க களம் இறங்கியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலக பிரதிநிதி லேனே கிறிஸ்டியான்சன் கூறுகையில், போர் முனையிலிருந்து 1 லட்சத்து 96 ஆயிரம் பேர் தப்பி வ்நதுள்ளனர்.

தற்போது விடுதலைப் புலிகள் வசம் உள்ள மிகக் குறுகிய பகுதியில் 50 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். கடந்த நாட்களில் கிட்டத்தட்ட 3000 கர்ப்பிணிப் பெண்கள் தப்பி வந்துள்ளதாக கணக்கிட்டிருக்கிறோம். இவர்களில் 350 பேர் வரை அடுத்த மாதம் பிரசவிக்கலாம் என்ற நிலையில் உள்ளவர்கள்.

தற்போதைய பதட்டமான நிலையில் சுகாதாரமான நிலையில் பிரசவம் நடப்பது என்பது இயலாத ஒன்று. மேலும் ஊட்டச்சத்து கிடைப்பதும், மருந்துகள் கிடைப்பதும் மிகக் கடினமாக உள்ளது. இதனால் இந்த கர்ப்பிணிகளின் உயிர்களுக்கு ஆபத்து நேரிடலாம். எனவே இதுகுறித்து அக்கறை காட்ட வேண்டியுள்ளது.

எனவே இவர்கள் பத்திரமான, பாதுகாப்பான சூழலில் குழந்தை பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

495 நோயாளிகளை மீட்ட செஞ்சிலுவைச் சங்கம்...

இந்த நிலையில், கடும் சண்டை நடந்து வரும் பகுதியிலிருந்து 495 நோயாளிகள் மற்றும் காயமுற்றவர்களை படகுகள் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீட்டுள்ளது.

இவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியான ஜேக்கஸ் டி மெயோ கூறுகையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது. அங்குள்ள தற்காலிக மருத்துவமனை அருகேயும் சண்டை நடந்து வருகிறது. இதனால் நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.

தன்னார்வத் தொண்டாளர்களுக்கும் உயிருக்கு ஆபத்தான நிலைமை உள்ளது. இதனால் அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.

அங்குள்ள, காயமடைந்த அனைவரையும் உடனடியாக மீட்க முடியாது. இருப்பினும் படிப்படியாக அனைவரையும் மீட்க முயன்று வருகிறோம் என்றார்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் படகு மூலம் 25 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டன. கூடவே மருந்துகளையும் செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

போர்ப் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு இவை வழங்கப்படும்.

பிப்ரவரி 10ம் தேதியிலிருந்து இதுவரை போர்ப் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் 13 ஆயிரம் மக்களை மீட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X