For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகை ஏமாற்றுவதில் இலங்கை வெற்றி: புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

Vanni
வன்னி: சர்வதேச சமுதாயத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் இலங்கை அரசு வெற்றி பெற்றுள்ளது என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழர்களுக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் இனப்படுகொலை போர் தொடர்பான எந்தவொரு உண்மையும் வெளியே தெரியவருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை இங்கிலாந்தின் 'சானல் - 4' தொலைக்காட்சிக் குழுவினரைக் கைது செய்திருப்பதன் மூலமாக இலங்கை அரசு அனைத்துலக சமூகத்துக்கு உணர்த்தியிருக்கின்றது.

ஊடக சுதந்திரத்தை மீறும் வகையிலான இலங்கை அரசின் இந்த செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 'சானல் - 4' தொலைக்காட்சிக் குழுவினருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக என அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் என்ன நடைபெறுகின்றது என்பதை வெளிக்கொணர முயன்ற அவர்களுடைய மனிதாபிமானப் பணிக்காக ஈழத் தமிழர்கள் அவர்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் இலங்கை அரசு வெற்றி பெற்றிருக்கின்றது. தன்னுடைய இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவலத்தையும் இலங்கை அரசு வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்திருக்கின்றது.

வடக்கு - கிழக்குப் பகுதியில் இருந்து வரும் செய்திகளைப் படிக்கும் போது, கேட்கும் போது பார்க்கும்போது வெட்கப்பட வேண்டியிருக்கின்றது.

இலங்கை அரசு தன்னுடைய இனப்படுகொலை போரை தற்போது முழு அளவில் பல முனைகளில் நடத்தி வருகிறது. தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து அந்த தாயகத்தை இல்லாமல் செய்வதில் இருந்து, தமிழ் மக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் பல்குழல் எறிகணை மற்றும் கனரக எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதன் மூலம், கல்வி மற்றும் வாழ்வாதாரங்களின்றி தமிழர்களைப் பலவீனப்படுத்துவது மற்றும் தடுப்புக்காவல் முகாம்களில் உள்ளவர்களை பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், அனைத்துலக சமூகம் மெளனமாகவே இருக்கின்றது.

தேர்வு செய்யப்பட்ட சில முகாம்கள் மட்டுமே அனைத்துலக சமூகங்களின் அதிகாரிகளுக்கும் ஊடகங்களுக்கும் காண்பிக்கப்படுகின்றது. மிகவும் மோசமான நிலையில் உள்ள ஏனைய முகாம்கள் உலகத்தின் கண்களில் இருந்தும் காதுகளில் இருந்தும் மறைக்கப்படுகின்றன.

மேலும், இடம்பெயர்ந்தவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் தடுத்துவைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியாவை விட இந்தப் பகுதிகளில் தடுத்து வைக்கப்படுபவர்களை பார்வையிடுவது பத்திரிக்கையாளர்களுக்கு மிகவும் சிரமமானதாகும்.

பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், பட்டினி போடுதல், ஊட்டச்சத்தின்மை, சுகாதாரம் போன்றன தமிழர்களுக்கு எதிரான போரில் சாட்சிகள் இல்லாத ஆயுதங்களாக இங்கைப் படையினரால் பயன்படுத்தப்படுகின்றது.

ராஜதந்திர வழிமுறைகளுக்கு அப்பால் சென்று, 'போரற்ற பாதுகாப்பு வலய' பகுதியில் உள்ள மக்களுக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருட்களைப் போடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு உலகின் மனிதாபிமான சமூகத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், இலங்கைப் படைகளின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களை நடத்துமாறும், அவற்றைக் கண்காணிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X