For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திக் சிதம்பரம் கார் மீது அதிமுகவினர் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

மானாமதுரை: உள்துறை அமைச்சரும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் கார் மானாமதுரை அருகே அடித்து நொறுக்கப்பட்டது.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார்.

இவர், மானாமதுரையில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, கட்சியினருடன் திருபுவனம் நோக்கி காரில் சென்று, கொண்டிருந்தார். அப்போது, மானாமதுரையிலிருந்து 5 கிமீ., தொலைவிலுள்ள ராஜகம்பீரம் அருகே இவரது காரை அதிமுகவினர் திடீரென சிலர் வழிமறித்தனர்.

அவர்கள் கார்த்தி சிதம்பரம் காரில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பணம் எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறி, அவரைக் காரை விட்டு இறங்க வலியுறுத்தினர். ஆனால், கார்த்தி சிதம்பரம் காரை விட்டு இறங்க மறுத்துவிட்டார். இதையடுத்து அதிமுகவினர் அவரது கார் மீது கற்கள் வீசினர். இதில், டிரைவர் சரவணன் காயமடைந்தார்.

தகவல் அறிந்த மானாமதுரை டி.எஸ்.பி. நாகஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், திருபுவனம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், போலீஸார் அதிமுகவினரிடம் பேசி சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.

ஆனால், அவர்கள் கார்த்தி சிதம்பரத்தின் காரைச் சோதனையிட போலீசாரை வற்புறுத்தியுள்ளனர். மீண்டும் அவரது காரை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி, அதிமுகவினரை கலைத்தனர்.

இச் சம்பவம் குறித்து மானாமதுரை அதிமுக எம்எல்ஏ குணசேகரன், அதிமுக முன்னாள் எம்.பி. அன்பழகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 25 பேர் மீது கார்த்தி சிதம்பரம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் மானாமதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ப.சிதம்பரம், மானாமதுரை காவல் நிலையத்துக்கு விரைந்து வந்து, கார்த்தி சிதம்பரம் மற்றும் கட்சியினரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

இரும்புகரம் கொண்டு ஒடுக்குங்கள்...

இது குறித்து தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறுகையில்,

அதிமுகவினர் தோல்வி பயத்தில் வன்முறை கலாசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மானாமதுரை பகுதியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கார் டிரைவரின் மண்டை உடைந்துள்ளது. கார்த்திக் சிதம்பரத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக போலீசார் யார் கலவரத்தில் ஈடுபட்டாலும் அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த ஆவன செய்ய வேண்டும்.

இயக்குனர்கள் பிரச்சாரம் தோல்வியடைந்துவிட்டது...

தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்கள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சிலர் காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் மலிவான பிரசாரத்தை செய்தனர். ஆனால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த பிரச்சாரத்துக்கு யார் காரணம் என்று தெரியாமல் இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் புதுச்சேரியில் நேற்று இயக்குநர் சீமானுக்கு அதிமுக மாநில பொறுப்பாளர் அன்பழகன் மாலை அணிவித்து வரவேற்றுள்ளார். அவரும் அதிமுகவுக்கு வாக்கு அளிக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை பிரச்சினை ஒன்றுதான் திமுக, காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்கமுடியும் என்ற தப்பான கணக்கின்படி திடீர் என்று கலைதுறையினரை தூண்டிவிட்டும், அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட கலைத்துறையினரின் பிரசாரம் தோல்வி அடைந்துவிட்டது.

இன்று ஓட்டுபதிவு நடைபெறும் போது வன்முறையில் ஈடுபடுவதற்கு தீவிரமான முயற்சியிலே ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வன்முறை கும்பலை தூண்டிவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

தேர்தல் அமைதிகாக நடைபெற வேண்டும் என்பது திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினரின் எண்ணம் ஆகும். தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து காங்கிரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தியாவை காங். காப்பாற்றும்...

23 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிற அதிமுக எப்படி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும்? தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் நிச்சயமாக 5 ஆண்டு காலம் நிலையான நேர்மையான ஆட்சி அமைப்போம்.

உலகம் முழுவதும் பொருளாதார சிக்கல் இருந்தபோது இந்தியாவில் மட்டும் பொருளாதார சிக்கல் இல்லாத நிலையை பிரதமர் மன்மோகன்சிங் உருவாக்கினார்.

இது தொடர்ந்து இருக்கவேண்டும் என்றால் மன்மோகன் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னால், இந்தியா ஒரே நாடாக இருக்கவேண்டும் என்று சொன்னால் அது காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் முடியும்.

பாஜகவோ அல்லது மூன்றாவது அணியோ நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லமுடியாது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் 60 இடங்கள் கிடைத்தது. இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது.

மூன்றாவது அணி ஒரு மாயை...

மூன்றாவது அணி என்பது ஒரு மாயைதான். மூன்றாவது அணியால் இந்த நாட்டுக்கு மிகப்பெரிய கேடுவிளைவிக்கும் நிலை ஏற்படும். எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இலங்கையில் தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுகிறது.

கருத்து கணிப்பு என்ற பெயரில் அதிமுகவினர் தங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறார்கள். பல்வேறு கருத்து கணிப்புகள் பொய்யாக்கப்பட்டு இருக்கிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெறும் என்றார் சுதர்சனம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X