For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை இடைத் தேர்தல் வாக்குப் பதிவு-வெளி மாநில போலீஸ் பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

Naresh Gupta
சென்னை: தமிழகத்தில் 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்புக்கு வெளி மாநில அதிரடிப்படை போலீஸார் நிறுத்தப்படுகின்றனர்.

பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலை அதிமுக கூட்டணி புறக்கணித்துள்ளது. ஆனால், அக் கூட்டணியைச் சேர்ந்த இடதுசாரிகள் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.

தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அண்மையில் நடந்து முடிந்த திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, வாக்காளர்கள் ஓட்டுப்போட விரும்பாததை பதிவு செய்யும் வசதி (49-ஓ) சரியாக செய்து கொடுக்கப்படவில்லை என்று ஏராளமான புகார்கள் வந்தன. அந்த வசதி பற்றி சில வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கே கூட தெரியவில்லை என்றும் 49 ஓ தொடர்பான எந்த விண்ணப்பமும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் சில அதிகாரிகள் சொன்னதாகவும் குற்றச்சாட்டுகள் வந்தன.

இதைத் தொடர்ந்து, வாக்களிக்க விரும்பாததை பதிவு செய்ய வகை செய்யும் 49-ஓ வசதி குறித்து அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் வாக்காளர்களை தவிர வெளியூரைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டும்.

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்தலில் கள்ள ஓட்டுகள் போடப்படுவதைத் தடுக்கும் வகையிலும் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் வெளியூர்காரர்கள் தங்கியிருக்கிறார்களா என்பதை சோதனை நடத்தி அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

கர்நாடக-கேரள போலீஸார்...

இடைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வெளிமாநில அதிரடிப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி ஆகிய தொகுதிகளில் கர்நாடக மாநில போலீசாரும், கம்பம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கேரள மாநில போலீசாரும் பணியில் இருப்பார்கள். இவர்கள் தவிர, கூடுதலாக தமிழ்நாடு சிறப்புகாவல் படை போலீசாரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடிகளில் பூத் ஸ்லிப்புடன் வந்த வாக்காளர்கள் அவசர அவசரமாக ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டதாகவும், ஸ்லிப் கொண்டு வராதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதைக்கூட சரிபார்க்காமல் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதாகவும் பல புகார்கள் வந்தன. இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் வாக்குச்சாவடி அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்

மின்னணு வாக்கு எந்திரத்தில், கடைசி வாக்காளர் ஓட்டுப்போட்டு முடித்தவுடன் அதன்பின்னர் ஓட்டுப்போட முடியாத வகையில் பூத்து ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குச்சாவடி அதிகாரி அந்த எந்திரத்தின் கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள குளோஸ்' பட்டனை அழுத்திவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், வாக்குச்சாவடி அதிகாரிகளோ அல்லது தலைமை வாக்குச்சாவடி அதிகாரியோ கள்ள ஓட்டுபோட்டு விடுவார்களோ என்று வேட்பாளர்கள் மனதில் தவறான எண்ணம் வரும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சில தொகுதிகளில், வாக்காளர் அடையாளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் காண்பிக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் என்னவென்று சரியாக பதிவுசெய்யப்படவில்லை என்று புகார்கள் வந்தன. வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த எந்த ஆவணத்தை காண்பித்து ஓட்டுப்போட்டார்கள் என்ற விவரம் இல்லாததால் எவ்வித ஆவணமும் இல்லாமல் பலர் ஓட்டு போட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் வரக்கூடும்.

தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை...

அவ்வாறு ஏதேனும் தவறு நடந்தால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரி மற்றும் தலைமை வாக்குச்சாவடி அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் காண்பிக்கப்பட்ட ஆவணம் பற்றிய விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை வாக்குச்சாவடிகளை பார்வையிடச் செல்லும் மண்டல அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் நரேஷ் குப்தா.

வாக்குப் பதிவையொட்டி இந்தத் தொகுதிகளி்ல் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை வீடியோ எடுக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் வெப் காமிரா மூலமும் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் படம் பிடிக்கப்படும். அது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள சர்வருக்கு அனுப்பப்படும்.

வாக்குப்பதிவு தொடங்கியதும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான வாக்குகள் குறித்த விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் தலைமை தேர்தல் அதிகாரிக்குத் தெரிவிக்க தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடைத் தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர் விவரம்..

பர்கூர்:

திமுக-கே.ஆர்.கே.நரசிம்மன்
தேமுதிக-வி.சந்திரன்
இந்திய கம்யூனிஸ்ட்-எஸ்.கண்ணு
பாஜக-கி.அசோகன்
மற்றும் ஐந்து சுயேச்சைகள்.

தொண்டாமுத்தூர்:

காங்கிரஸ்-என்.கந்தசாமி
தேமுதிக-தங்கவேலு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- வே.பெருமாள்
பாஜக-சின்னராசு
மற்றும் 18 சுயேச்சைகள்.

கம்பம்:

திமுக-ராமகிருஷ்ணன்
தேமுதிக-அருண்குமார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-ராஜப்பன்
மற்றும் 12 சுயேச்சைகள்.

இளையான்குடி:

திமுக-சுப.மதியரசன்
தேமுதிக-அழகு பாலகிருஷ்ணன்
பாஜக-ராஜேந்திரன்
மற்றும் 6 சுயேச்சைகள்.

ஸ்ரீவைகுண்டம்:

காங்கிரஸ்-எம்.பி.சுடலையாண்டி
தேமுதிக-எம்.சவுந்தரபாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட்-ஞா.தனலட்சுமி
பாஜக-அ.சந்தனகுமார்
மற்றும் 8 சுயேச்சைகள்.

நாளைய வாக்குப் பதிவுக்குப் பின்னர் 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு பிற்பகலுக்குள் முடிவு தெரிந்து விடும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X