• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிராமணர்களை மதிக்கும் கட்சி திமுக-எஸ்.வி.சேகர்

By Staff
|

SV Sekar
சென்னை: திமுக கொள்கை ரீதியாகத்தான் பிராமணர்களுக்கு எதிராக உள்ளது. ஆனால் ஒருபோதும் அவர்கள் பிராமணர்களை வெறுத்ததில்லை. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரின் ஆலோசகர்கள் அனைவருமே பிராமணர்கள்தான். உண்மையில் பிராமணர்களை மதிக்கும் கட்சி திமுக என்று கூறியுள்ளார் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மைலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள அவர் ஒரு இணையத் தளத்திற்கு அளித்துள்ள பேட்டி...

நான் 1989ம் ஆண்டு அரசியலுக்கு வந்தேன். சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டேன். அத்தேர்தலில் அப்போதைய நிதியமைச்சர் நெடுஞ்செழியனை விட கூடுதலான வாக்குகளைப் பெற்றேன்.

ஜெ.வை ஒரே தலைவியாக ஏற்றேன்...

2004 வரை நான் பாஜக அனுதாபியாக இருந்தேன். 2004ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தேன். ஜெயலலிதாவிடம் நான் கட்சியில் சேருவது குறித்துப் பேசியபோது, உங்களது கட்சியையும், உங்களது திறமைகளையும் நான் மதிக்கிறேன், விரும்புகிறேன் என்றேன். அவரை எனது ஒரே தலைவியாக ஏற்றுக் கொண்டேன்.

ஆனால் கட்சி நிர்வாகத்தில் பலரும் தலையிடுகின்றனர். இதனால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். யாரைப் பின்பற்றி நாம் போவது என்பதில் எனக்கும் கூட குழப்பம்தான்.

நான் ஊழல் கறை படிந்தவன் கிடையாது. அப்படி இருந்திருந்தால் ஒரு வேளை இன்னும் கூட அக்கட்சியிலேயே இருந்திருப்பேன். பிரச்சனை அதுவல்ல. விசுவாசம் மற்றும் நேர்மை தான் பிரச்சனை. விசுவாசம் என்று வரும்போது ஒருவர் ஒருவரிடம்தான் அதைக் காட்ட முடியும்.

குறிப்பிட்ட ஜாதிக்கான கட்சி அதிமுக...

இது நிச்சயம் அவர்களுக்குத்தான் தோல்வி, நான் எதையும் இழக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே அங்கு எனக்குப் பிரச்சினைதான். ஆனால் 2006ம் ஆண்டு நான் எம்.எல்.ஏ ஆன பிறகு அது அதிகரித்து விட்டது. அதிமுக அனைத்து மக்களுக்குமான கட்சி அல்ல. ஒரு கட்சித் தலைவருக்கு நெருக்கமான ஒருவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மட்டுமான கட்சி. ஒரு குறிப்பிடட ஜாதிக்கு மட்டுமே உரித்தான கட்சி. அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு மட்டுமேயான கட்சி.

நான் கட்சியில் சேர்ந்தபோது அதை உணர்ந்தேன். மிகவும் வித்தியாசமான சூழ்நிலை அது. கட்சிக்குள் சேர்ந்த பிறகுதான் அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஜெ.வை வேறு ஒருவர் கட்டுப்படுத்துகிறார்...

வெளியுலகுக்கு ஜெயலலிதா ஒரு தலைவராக காட்சி அளிக்கிறார். ஆனால் உண்மையில், வேறு ஒருவர்தான் கட்சி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வருகிறார்.

அந்த நபரால் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாது. அந்த நபர் 'அம்மா'வின் புகழைப் பயன்படுத்தி கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவரது புகழைக் கெடுத்து வருகிறார். உண்மையில் தனக்கு விரோதமாக யார் செயல்படுகிறார் என்பதை அறிய முடியாத நிலையில் இருப்பது 'அம்மா'வின் தவறாகும்.

ஜெயலலிதா ஒரு புத்திசாலிதான், சந்தேகமே இல்லை. ஆனால் ஜெயலலிதாவின் புத்திசாலித்தனம், உணர்ச்சிகளால் சூழப்பட்டது.

ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்...

தமிழ்நாட்டில் ஆடி மாதத்தில் ஷாப்பிங் சுறுசுறுப்பாக இருக்கும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் தருவார்கள். அதேபோலத்தான் என்னை கட்சியிலிருந்து நீக்கினார்கள். கூடவே அனிதா ராதாகிருஷ்ணனை இலவசமாக நீக்கி விட்டார்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து நீக்கப்படவில்லை. ஆனால் சமயம் ஒன்றுதான்.

நான் இந்த நடவடிக்கையை 18 மாதங்களாக எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அனிதா ராதாகிருஷ்ணன் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இதில் வேடிக்கையான இன்னொரு விஷயமும் உண்டு. நான் நீக்கப்பட்டு விட்டேன் என்பதை அனைவருக்கும் சொல்லி விட்டார்கள். ஆனால் இது தெரிந்தாக வேண்டிய ஒருவருக்கு மட்டும் இதுவரை தெரிவிக்கவில்லை. அவர்தான் சட்டசபை சபாநாயகர். எனது நீக்கத்தை அவர்கள் இதுவரை சபாநாயகருக்குத் தெரிவிக்கவே இல்லை.

தொடர்பு எல்லைக்கு அப்பால் ஜெ...

நான் ஒருமுறை நரேந்திர மோடியைச் சந்தித்தேன். அதன் பின்னர் ஒரு மாதத்திற்குப் பின்னர் குஜராத் முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல விரும்புவதாக தெரிவித்தேன். அப்போது மாலை 3 மணி. மோடி கூட்டம் ஒன்றில் இருப்பதாகத் தெரிவித்தனர். இருந்தாலும் எனது வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்து விடுங்கள் என்று கூறினேன்.

இரவு 7 மணி இருக்கும். எனக்குப் போன் வந்தது. சேகர்ஜி நான் நரேந்திர மோடி. உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி என்றார்.

அப்போது நான் அவரிடம் சொன்னேன், எல்லா முதல்வர்களுமே உங்களைப் போல எளிதில் அணுகக் கூடியவர்களாக இருந்தால், 2020ல் என்ன, 2010ம் ஆண்டிலேயே இந்தியா வல்லரசாகி விடும் என்றேன்.

அப்துல் கலாம் கூட, தனக்கு வரும் ஒவ்வொரு இ-மெயிலுக்கும் தவறாமல் பதில் அனுப்புகிறார். ஆனால் கொடநாட்டில் மட்டும்தான், ''நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்'' என்று பதில் வருகிறது. அதிமுகவில் தலைவர்களை அணுகுவது என்பது நடக்காத செயல்.

மாயாவதி போல் கருணாநிதி செயல்பட வேண்டும்...

திமுகவில் சேருவது குறித்து நான் சிந்திக்கவே இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை முற்பட்ட வகுப்பினருக்கு நியாயம் கிடைக்கவே கிடைக்காது. அந்தவகையில் மாயாவதி, சமூக மாற்றத்தை புதிய அணுகுமுறையில் தொடங்கி வைத்துள்ளார். பிராமணர்களின் வாக்குகளை அவர் கவர்ந்துள்ளார்.

அதேபோல முதல்வர் கருணாநிதியும் செய்ய வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். குறைந்தது ஒரு நீதிபதியை நியமித்து முற்பட்ட வகுப்பினரின் துயரங்களை ஆராய வேண்டும். உண்மையில் முற்பட்ட வகுப்பினர்தான் இன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.

கொள்கைரீதியாக திமுக பிராமணர்களுக்கு எதிரான கட்சிதான். ஆனால் அவர்கள் ஒருபோதும் பிராமணர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைக் காட்டியதில்லை. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரின் பெரும்பாலான உதவியாளர்கள் பிராமணர்கள்தான். பிராமணர்களை மதிக்கும் கட்சி திமுக.

பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கோருகிறேன். இதைக் கருணாநிதி செய்தால், அடுத்த தேர்தலில் அவருக்காக 5 லட்சம் ஓட்டுக்களை நான் சேகரித்துத் தருவேன். அதன் பிறகு திமுகவில் சேருவதா அல்லது அவர்கள் என்னை சேர்க்க விரும்புகிறார்களா என்பதை முடிவெடுப்பேன்.

திமுகவை புரிந்து கொண்டு சேருவேன்...

திமுகவில் சேருவதற்கு முன்பு அவர்களின் கொள்கைகளை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சேர்ந்த பின்னர் அவர்களது கொள்கைகளை விமர்சிக்க என்னால் முடியாது. நான் தீவிர கடவுள் பற்றாளன். ஆனால் திமுக தீவிர கடவுள் எதிர்ப்புக் கட்சி.

ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் கூட பிராமணர்களுக்காக எதையும் செய்யவில்லை- என்னைக் கட்சியை விட்டு தூக்கி எறிந்ததைத் தவிர.

காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது நான் கடவுளிடம் இறைஞ்சினேன். பலரும் என்னை அப்போது அதிமுகவிலிருந்து விலகுமாறு வலியுறுத்தினர். நான் செய்யவில்லை. நானும் விலகி விட்டால், சங்கராச்சாரியாருக்காக குரல் கொடுக்க அதிமுகவில் யாரும் இல்லாமல் போய் விடுவார்கள் என்று தெரிவித்தேன்.

ஜெ.க்கு மன்னிப்பு கிடையாது..

ஒரு குருவுக்கு அவமரியாதை செய்தால் அதற்கு மன்னிப்போ, பரிகாரமோ கிடையாது. அதனால்தான், 2004ம் ஆண்டுக்குப் பின்னர் ஜெயலலிதாவால் ஒரு தேர்தலில் கூட ஜெயிக்க முடியாமல் போய் விட்டது. கடவுள் மிகப் பெரியவர். நிச்சயம் சங்கராச்சாரியார் வழக்கிலிருந்து விடுவார். காத்திருந்து பாருங்கள்.

உலகத்திலேயே மிகப் பெரிய மதத் தலைவர் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டது இதுதான் முதல் முறை. இது திட்டமிட்ட பொய் வழக்கு. நிச்சயம் அதிலிருந்து சங்கராச்சாரியார் வெளியே வருவார்.

இதேபோன்ற செயலை நிச்சயம் கருணாநிதி செய்ய மாட்டார். ராமாயாணத்திற்கு எதிராக அவர் அவதூறாகப் பேசலாம். ராமர் பாலம் குறித்துப் பேசலாம். ஆனால் நிச்சயம் இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபடவே மாட்டார்.

ராஜ்யசபா பதவி வேண்டும்...

மரியாதை என்பது துணிச்சலானது. நான் மரியாதை உள்ளவன். எனது நாடகங்களுக்காக நான் பத்மஸ்ரீ விருதை எதிர்பார்க்கிறேன். இதுவரை 5007 நாடகங்களை நான் போட்டுள்ளேன். அதேபோல, என்னை திரைத் துறை சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறேன். அப்படிச் செய்தால் சாதாரண ஜனங்களின் பிரதிநிதியாகவும், திரைத் துறையின் பிரதிநிதியாகவும் என்னால் செயல்பட முடியும். அனைவரும் அணுகக் கூடிய எளிமையான மனிதன் நான் என்று கூறியுள்ளார் சேகர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X