For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மசூதி வழியாக விநாயகருடன் செல்ல முயன்று ராமகோபாலன் கைதாகி விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மசூதி வழியாக விநாயகர் சிலையுடன் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலனை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

நேற்று சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி 2வது நாளாக நடந்தது. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் ஊர்வலங்கள் நடந்தன.

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தலைமையில் திருவல்லிக்கேணியில் உள்ள திருவொட்டீஸ்வரர் விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. அந்த ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக சென்றது.

அப்போது மசூதிகள் அதிகம் இருக்கும் வழியாக ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனை தொடர்ந்து போலீசாருக்கும் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து அனுமதி மறுக்கவே, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தலைமையில் ஊர்வலத்தில் வந்தவர்கள் அனைவரும் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ரோட்டில் மறியலில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

போலீஸ் தடியடி - கல்பாக்கத்தில் பரபரப்பு

இதற்கிடையே, சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில், தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினார்கள்.

சென்னையை அடுத்த கல்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை, கல்பாக்கம் கடலில் கரைக்க, பக்தர்களுக்கு போலீசார் ஒரு பாதையை வகுத்து கொடுத்து இருந்தனர்.

நேற்று மாலை, இந்து அமைப்பினர், போலீசார் வகுத்து கொடுத்த பாதையை தவிர்த்து, இ.சி.ஆர். சாலையில் புதுப்பட்டினம் மசூதி வழியாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து, அனுமதிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

ஆனால், இந்து அமைப்பினர், போலீசார் வகுத்த பாதையில் செல்ல மறுத்தனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினார்கள். விநாயகர் சிலைகளை அங்கேயே போட்டு விட்டு, ஊர்வலத்தினர் கலைந்து ஓடி விட்டனர்.

பின்னர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் விநாயகர் சிலைகளை, போலீசார் சேகரித்து, கல்பாக்கம் கொண்டு சென்று, அங்கு கடலில் கரைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, புதுப்பட்டினத்தில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் மூடப்பட்டன. பதட்டமான நிலை காணப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், புதுப்பட்டினம் பஸ் நிலையம் அருகே சிலர், ஒரு விநாயகர் சிலையை கொண்டு வந்து வைத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்களை விரட்டி அடித்தனர். பின்னர் அந்த சிலையை கடலுக்கு கொண்டு சென்று கரைத்தனர்.

விநாயகர் வாகனங்கள் கவிழ்ந்தன...

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் சென்ற வாகனங்கள் கவிழ்ந்து போலீஸ்காரர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.

பட்டாமிராமில் இருந்து சிறிய வேன் ஒன்றில் விநாயகர் சிலை ஒன்றை ஊர்வலமாக எடுத்து வந்தார்கள். சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே வரும்போது இந்த வேன் திடீரென்று கவிழ்ந்து விட்டது. அதில் இருந்த சிலையும் சரிந்து விட்டது. பின்னர் சிலையை தூக்கி வேறு வாகனத்தில் வைத்து எடுத்து சென்று கடலில் கரைத்தனர்.

இந்த சம்பவத்தில் சிலை கொண்டு வந்த வேனில் பயணம் செய்த 5 பேர் காயம் அடைந்தனர்.

அயனாவரத்தில் இருந்து வந்த மினி வேன் ஒன்று முத்துசாமி பாலம் அருகே கவிழ்ந்தது. வேனில் இருந்த சிலை லேசாக சேதம் அடைந்தது. சேதம் அடைந்த சிலையை வேறு வாகனத்தில் எடுத்து சென்று கடலில் கரைத்தனர்.

வேனில் பயணம் செய்த போலீஸ் ஏட்டு ராஜரத்தினம் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

கொருக்குப்பேட்டையிலிருந்து ஷேர் ஆட்டோ ஒன்றில் விநாயகர் சிலை ஒன்றை 3 பேர் எடுத்து வந்தனர். மெரினா கண்ணகி சிலை அருகே வரும் போது டெம்போ வேன் ஒன்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த முருகன், சரவணன், சிவகுமார் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். சிலைக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. காயம் அடைந்த 3 பேரும் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X