மதுரை, கோவை விமான நிலையம் நவீனமயம் - பிரபுல் படேல்
திருச்சி: சென்னை விமான நிலையம், 2, 500 கோடி ரூபாயில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இதேபோல மதுரை, கோவை விமான நிலையங்களும் நவீனப்படுத்தப்படும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில், புதிதாக புதுப்பிக்கப்பட்ட டெர்மினல் கட்டடம் உட்பட பல்வேறு பகுதிகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் பார்வையிட்டார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
நமது நாட்டில் உள்ள 35 சிறு விமான நிலையங்கள் மேம்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப் பணிகள், இரண்டு ஆண்டில் முடிவு பெறும்.
இது தவிர, மற்ற விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை விமான நிலையம் 2, 500 கோடி ரூபாயில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மதுரை, கோவை விமான நிலையங்களும் நவீனமயக்கப்படும்.
பொருளாதார மந்த நிலை காரணமாக, கடந்தாண்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை, 30 சதவீதம் குறைந்து விட்டது. தற்போது, இந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது என்றார்.