For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பிரபாகரனை மகனாகக் கருதி உதவிய எம்ஜிஆர்!'

By Staff
Google Oneindia Tamil News

MGR with Prabakaran
சென்னை: பிரபாகரனை எம்ஜிஆர் தனது மகனைப் போலவே கருதி உதவி செய்தார். அதோடு தமிழர்களுக்கென்று பிரபாகரன் தலைமையில் தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இருந்த பிணைப்பு மற்றும் ஈழப் போராட்டத்துக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற வெளிப்படையான ஆதரவு போன்றவை உலகமறிந்தது.

புலிகளின் போராட்டம் வெல்ல தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை எந்த நெருக்குதல் பற்றியும் கவலைப்படாமல் உலகறியத் தந்தவர் எம்ஜிஆர்.

உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். இத்தனைக்கும் அந்த சமயத்தில் இந்திய அமைதி காப்புப் படை வட இலங்கையில் நிலை கொண்டிருந்தது.

தனது கடைசி மூச்சு நிற்பதற்கு ஒருநாள் முன்பு கூட விடுதலைப் புலிகளுக்கு பல கோடி ரூபாய் தனது சொந்தப் பணத்தைத் தரத் தயாராக இருந்தாராம் எம்ஜிஆர்.

மரணத்தின் விளிம்பில் நின்ற நேரத்திலும் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளுடன் வைத்திருந்த இடைவிடாத தொடர்பு, அளித்து வந்த ஆதரவு, எம்ஜிஆர் மறைவுக்கு புலிகள் செலுத்திய அஞ்சலி போன்றவை குறித்து, இன்றைய தினமணி இதழில் எழுத்தாளர் பாவை சந்திரன் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

"தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்து 31-10-1987 அன்று சென்னை திரும்பியதும், அரசுப் பணிகளுக்காகச் சில நாட்களை ஒதுக்கியதுபோக, 4-11-1987 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கினார். அதன்படி கிட்டு, பேபி சுப்ரமணியம், ரகீம் உள்ளிட்டோர் அவரைச் சந்தித்து தமிழீழத்தில் நடப்பது குறித்து விளக்கினார்கள் (விடுதலை 5-11-1987).

9-11-1987 அன்று தமிழக சட்டமன்றம் கூட இருந்த நேரத்தில், தமிழக சட்டமன்றத்தில் இந்திய அமைதிப்படை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பழ.நெடுமாறனும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியும் அறிக்கை வெளியிட்டார்கள். கட்சித் தலைவர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசினார்கள். இதே கோரிக்கையை பல்வேறு கட்சித் தலைவர்களும் அறிக்கை மூலம் அரசை வலியுறுத்தினார்கள்.

இப்படியொரு தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் வந்துவிடக்கூடும் என்ற ஐயத்திலும் அப்படியொரு தீர்மானம் வந்துவிடக்கூடாது என்கிற பதற்றத்துடனும் மத்திய அரசு, வெளியுறவு இணையமைச்சர் நட்வர் சிங்கை சென்னைக்கு அனுப்பி வைத்தது. அவரின் இந்த வருகை, சமீபத்தில் நடந்த ராஜீவ்-ஜெயவர்த்தனா சந்திப்பையொட்டிய தகவல்களை முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கவே என்று பின்னர் கூறப்பட்டது.

ஆனால் பழ.நெடுமாறன் தனது நூலில், "சட்டமன்றத்தில் இந்திய அரசுக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் தீர்மானம் எதுவும் நிறைவேற்றிட வேண்டாம் என முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வேண்டிக் கொள்வதற்காகவே நட்வர் சிங் வந்தார். பிரதமரின் விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழக மக்களின் கொதிப்புணர்வை அவரிடம் எம்.ஜி.ஆர். சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சட்டமன்றத்தில் தீர்மானம் எதையும் எம்.ஜி.ஆர். நிறைவேற்றாவிட்டாலும் தமிழ் மக்களின் மனநிலையைத் டெல்லி உணரும்படி செய்தார். பிரபாகரனுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். மேற்கொண்டுள்ள நிலையில் இருந்து அவரை மாற்ற நட்வர் சிங் மூலம் ராஜீவ் மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பழ.நெடுமாறன் குறிப்பிடுவதாவது: "இதன் பின் அதிக காலம் எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கவில்லை. பிரபாகரனின் பிரதிநிதிகள் அவ்வப்போது அவரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி வந்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் அவர் செய்து வந்தார். அவர் காலமாவதற்கு முதல்நாள் கூட ஒரு பெருந்தொகையைப் புலிகளுக்கு அளிக்க விரும்பி அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்.

வழக்கமாகப் பிரபாகரன் சார்பில் அவரைச் சந்திப்பவர் சென்னையில் இல்லாத காரணத்தினால் வேறொருவர் சென்றார். குறிப்பிட்டவரையே அனுப்பும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டார். வெளியூரில் இருந்த அந்த குறிப்பிட்ட தோழர் சென்னைக்கு விரைந்து வந்து எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்குள் காலதேவன் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டான்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மார்பில் மூட்டிய தீ-பிரபாகரன்:

உலகெங்கும் வாழும் தமிழர்களை உலுக்கிய எம்.ஜி.ஆரின் மறைவு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் உலுக்கியது.

பிரபாகரன் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்:

"ஈழத்தில் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணைநின்ற புரட்சித் தலைவரே, தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே, தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது.

என்மீது கொண்டிருந்த அன்பையும் ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்..." (விடுதலை 25/26-12-1987/ எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும்-வே.தங்கநேயன்).

எம்.ஜி.ஆர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் செய்த உதவிகள் குறித்து சிங்கள எழுத்தாளர் ரோகண குணரத்னவும் தான் எழுதிய "இந்தியன் இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா' (பக்கம்-182-இல்) என்னும் நூலில்,

"தமிழ்நாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த 'ரா' அதிகாரி சந்திரசேகரன், ராஜீவ் காந்தி சார்பில் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர். உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ராஜீவ் சொல்லியனுப்பியவற்றை அவர் வெளியிட்டார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர்., 'விடுதலைப் புலிகளை யாழ்ப்பாணத்தில் வீழ்ந்துவிட விட்டுவிடாதீர்கள். விடுதலைப் புலிகள் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டும்' என்று கதறினாரென குறிப்பிடுள்ளார்.

"பிள்ளையில்லாத எம்.ஜி.ஆர். பிரபாகரனைத் தன்னுடைய மகனாகவே கருதி வாஞ்சை செலுத்தினார் எனக் கூறுவதில் தவறில்லை" என பழ.நெடுமாறன் குறிப்பிடுகிறார்.

-இவ்வாறு பாவை சந்திரன் எழுதியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X