For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாதிகள் ஒழியவே சமத்துவபுரங்கள் -ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சேலம்: யாரைக் கேட்டாலும் தமிழன் அல்லது மனிதன் என்று சொல்ல வேண்டும். ஜாதிகள் ஒழிய வேண்டும். அதற்காகவே சமத்துவபுரங்கள் திறக்கப்படுகின்றன என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம் தீவட்டிப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் மற்றும் பெரியார் சிலையை ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

இந்த சமத்துவபுரம் திறப்பு விழாவின் மூலம் ரூ.64 கோடியே 39 லட்சத்துக்கு 694 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. ரூ.6கோடி மதிப்பில் சமத்துவபுரமும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த விழாவின் போது ரூ.92 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் திட்டங்கள் எழுச்சியோடு தொடங்கப்பட்டு இருக்கிறது.

சாதி, மதங்களை தாண்டி அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று பெரியார், அண்ணா, கண்ட கனவை தலைவர் கலைஞர் நிறைவேற்றி வருகிறார். அத்தி மரத்தில் எங்கு காய்கள் காய்த்தாலும் அது அத்திகாய்தான் என்கிறோம். அது போல ஒருவரைப் பார்த்து யார் என்று கேட்டால் தமிழன் அல்லது மனிதன் என்று சொல்லும் நிலை வரவேண்டும். இதற்காக தான் சமத்துவபுரங்கள் உருவாகி வருகிறது.

98-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்ததிட்டம் ஒவ்வொரு மாவட்டமாக திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அன்று 145 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டது. பிறகு ஆட்சி மாற்றம் வந்தது. ஆனால் அவர்கள் சமத்துவபுரத்தை தொடர்ந்து நடத்தாமல் கிடப்பில் போட்டார்கள். வீடுகளை பராமரிக்கவில்லை. பிறகு ஆட்சிக்கு நாங்கள் வந்ததும் சமத்துவபுரங்கள் பராமரிக்க நிதி ஒதுக்கப்பட்டது.

தற்போது மீண்டும் சமத்துவபுரங்கள் உருவாக்கி திறக்கப்பட்டு வருகிறது. 2008-09ல் தமிழகத்தில் 21 சமத்துவபுரங்கள் திறக்க அறிவிக்கப்பட்டது. இதில் 9 சமத்துவபுரங்கள் நாம் திறந்து வைத்து இருக்கிறோம். மீதி டிசம்பருக்குள் முழுமையாக திறந்து வைக்கப்படும்.

2009-2010ல் 30 சமத்துவ புரங்கள் உருவாக்கப்படும். 2010-2011ல் மீதி 30 சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும். சாதி ஒழிக என்று கூறினால் ஒழிந்து விடாது. இது வெற்றி பெற சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. என்பதை சமத்துவபுரங்களில் வாழ்பவர்கள் உணர்ந்து கொண்டு வாழவேண்டும்.

மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கட்சி பாகுபாடுபார்க்காமல் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் காலத்தில் இவர்களை பயன்படுத்தி கொள்ள அல்ல, மகளிர் சொந்த காலில் யார் தயவியும் எதிர்பார்க்காமல் சிறு சிறு தொழில் தொடங்கி வாழ்க்கையை வளமாக்கி கொள்ள வேண்டும்.

தற்போது மகளிர் சுய உதவிக் குழுவினர் படிப்படியாக வளர்ந்து பெருமைப்படும் வகையில் செயல்படுகிறார்கள். இதன்மூலம் தமிழகத்துக்கு பெருமையையும் சேர்த்து இருக்கிறார்கள்.

மகளிர் சுய உதவிகுழுவினர் கம்பீரமாக வளர்ந்துள்ள காட்சியை பார்த்து பெருமைப்படுகிறோம். இந்த நிதியாண்டில் 2009-2010ல் 12 ஆயிரத்து 504 குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கி இருக்கிறோம்.

2006க்கு முன்பு நடந்த ஆட்சியின் போது ரூ. 1,644 கோடி சுழல்நிதி வழங்கப்பட்டது. நம் ஆட்சி பொறுப்பேற்ற இந்த மூன்றரை ரூ. 4,188 கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியன் வங்கி மூலம் தேசிய அளவில் 1864 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ. 1,159 கோடி கடன் தரப்பட்டுள்ளது. இது 62 சதவீதமாகும். ஐ.ஓ.பி. வங்கி மூலம் 48 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் போட்டிபோட்டு கொண்டு மகளிர் சுய உதவிகுழுவினருக்கு கடன் வழங்கி வருகிறது. இதற்கு காரணம் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் உடனுக்குடன் கடனை கட்டி வருவதுதான்.

99 சதவீதம் கடனை செலுத்தி விடுகிறார்கள். இதனால் தான் வங்கிகள் மகளிர்களுக்கு கடன் வழங்க முன்வருகிறது.

கலைஞர் காப்பீட்டு திட்டத்தால் குடிசையில் பிறந்தவர்களும், நடுத்தரத்தில் பிறந்தவர்களும், பயனடைகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாதவர்கள் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள். இந்த திட்டத்தை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டம் கலைஞர் காப்பீடு திட்டம் உள்பட அனைத்து திட்டங்களையும், செயல்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X