For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் வழிகாட்டலில் தொடர்ந்து போராடி தமீழழ அரசை அமைப்போம் - விடுதலைப் புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எங்களது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மாவீரர் நாளையொட்டி இன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகத்தின் பெயரில் வெளியான உரையின் விவரம்...

இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள்.

'நான்", 'எனது" என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள்.

ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.

அர்ப்பணிப்பின் உச்சத்தைத் தொட்டு தாயகப் பற்றுறுதிக்கு உதாரணமாக விளங்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம். கடல்போல திரண்டுவந்த எதிரிகளை மனவுறுதியோடு எதிர்கொண்டு மோதிய எமது மாவீரர்கள் தாயக மண்ணின் மேன்மைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள். எத்தனையோ வல்லாதிக்கச் சக்திகள் எல்லாம் எதிரியோடு கைகோர்த்து வந்தபோதும் தாயக விடுதலைக் கொள்கைக்காகவே இறுதிவரை போராடி மடிந்தார்கள். தமது உயிருக்கும் மேலாக தாம் பிறந்த மண்ணையும் தம்மின மக்களையும் நேசித்த இம்மாவீரர்கள் தியாகத்தின் சிகரமாய் தனித்துவம் பெறுகிறார்கள்.

வரலாற்று ரீதியாக எம்மினத்துக்கென இருந்த தனித்துவமான அரச கட்டமைப்புக்கள் படிப்படியாக அன்னியப் படைகளால் வெற்றிகொள்ளப்பட்டன. பிரித்தானியர் இலங்கைத் தீவிலிருந்து வெளியேறியபோது இலங்கைத்தீவை ஒரே நாடாக்கி சிங்களவரிடம் கையளித்துவிட்டுச் சென்றார்கள். அன்று தொடக்கம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களது உரிமைகளைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்திவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிச்சிங்களச் சட்டமென்றும் கல்வித் தரப்படுத்தலென்றும் தொடர்ந்த அடக்குமுறைகள் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் நிலையைத் தோற்றுவித்தன. வன்முறையற்ற வழியில் போராடிய எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட வன்முறை வழியிலான அடக்குமுறைகளும், தமிழ் அரசியல் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் தமது உரிமைகளைப் பெற ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச் சென்றது.

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத அடக்குமுறை காலத்துக்குக் காலம் அதிகரித்து இன்றைய நிலையில் அதியுச்சநிலையை அடைந்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. எமக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடக்கத்திலிருந்தே படிப்படியாக மீறிவந்த அரசதரப்பு, மகிந்த ராஜபக்ஷ அரசதலைவர் ஆனதும் இன்னும் மோசமான முறையில் செயற்படத் தொடங்கியது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட தாயகப் பகுதிகளுடன் மீண்டும் புதிய நிலங்களுக்கான ஆக்கிரமிப்புப் போரை சிறிலங்கா அரசபடை தீவிரப்படுத்தியது.

தென்தமிழீழத்தில் மாவிலாறில் தொடங்கிய நில ஆக்கிரமிப்பு யுத்தம் மென்மேலும் விரிவடைந்து தமிழர்களைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது. முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச்சமர் மட்டும் நடாத்திக் கொண்டிருக்க, சிங்கள இராணுவம் மிகமோசமான முறையில் தனது படை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சிறிலங்கா இராணுவத் தரப்பின் வலிந்த தாக்குதல்களையும் யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களையும் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு கொண்ட சர்வதேச சமூகமோ பெயரளவில் சில அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு மெளனமாயிருந்தது.

இந்த ஆக்கிரமிப்புப் போரினால் எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கத் தொடங்கினார்கள். சம்பூர், கதிரவெளி, வாகரை தொடங்கி தமிழரின் பூர்வீக நிலங்கள் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மூலம் எமது மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டு அரசபடைகளின் தாக்குதல்கள் மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகள், மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது குண்டுவீச்சுக்கள் நடாத்தப்பட்டன. எமது தரப்பு தற்காப்புப் போரை மட்டுமே நடத்திக் கொண்டிருந்ததையும், சிறிலங்காவின் ஒருதலைப்பட்சமான யுத்தநடவடிக்கையை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட சிறிலங்கா அரசதரப்பு, அநீதியான போரொன்றின் மூலம் நிலங்களைத் தொடர்ச்சியாக ஆக்கிரமித்தது.

தென்தமிழீழ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வடதமிழீழத்திலும் தனது நில ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிறிலங்கா அரசாங்கம். வன்னியின் மேற்குப்பகுதியில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக வன்னிமுழுவதும் விரிவாக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கினர். 2002 ஆம் ஆண்டு சர்வதேச அனுசரணையோடு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக சிறிலங்கா அரசதரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டு தனது ஆக்கிரமிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையிற்கூட யுத்த நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்வதற்கும் எமது விடுதலை இயக்கம் தொடர்ந்தும் முயற்சித்தது. இதற்கான எமது அறிவிப்புக்களையும் முயற்சிகளையும் முற்றாகப் புறந்தள்ளி தனது போர் நடவடிக்கைகளிலேயே குறியாக இருந்தது சிறிலங்கா அரசதரப்பு.

ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அழிவிலிருந்து படிப்படியாக மீண்டுவந்துகொண்டிருந்த எமது மக்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைப் போரொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. மக்கள்மேல் விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. வன்னிப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதனூடாக தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் சாட்சிகளில்லாமல் நடாத்தும் தனது திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தியது. இந்நிலைமையிலும் தற்காப்புப் போரைச் செய்தபடி யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப்பேச்சுக்களை மீளத் தொடங்கும்படியும் எமது இயக்கம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் நிகழப்போகும் பாரிய மனித அவலங்கள், ஆபத்துகள் குறித்து நாம் சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் தெரிவித்த வண்ணமிருந்தோம்.

வன்னியில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மோசமான நிலையை எட்டின. நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் காயமடையும் அளவுக்கும் அரசபடைகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள். தம்மிடம் சரணாகதி அடைவது ஒன்றே தமிழ்மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென சிறிலங்கா அரசு கூறிநின்றது. காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளும் அடுத்தடுத்துத் தாக்குதலுக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கையிட்ட ஒரே நாடாக சிங்கள தேசம் இடம்பெறுகிறது.

இன அழிப்பின் இன்னொரு கொடூரமான அங்கமாக பாதுகாப்பு வலயம் என்று அரசு வானொலி மூலம் பிரகடனம் செய்த பின் அதே வலயத்திற்குள் பாதுகாப்புத் தேடிய அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடாத்தியது. பாதுகாப்பு வலயம் கொலைக்களமாக மாற்றப்பட்டது. உயிரிழந்த உறவுகளைப் புதைக்கக்கூட அவகாசம் இல்லாமல் மக்கள் அடுத்த பாதுகாப்பு வலயத்திற்கு விரட்டப்பட்டனர். தொடர்ச்சியாகப் பல பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய அரசு கொலைவெறித் தாக்குதல்கள் மூலம் எமது மக்களை இராணுவத்தின் பிடியில் சிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது.

மருத்துவமனைகள், பாடசாலைகள், மக்கள் கூடுமிடங்கள், மக்கள் வாழ்விடங்கள் என்று தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களை நடாத்தி ஆயிரணக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசபடை. எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள்நின்று எம்மைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபட்ட எமது மக்கள் கோரமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பன்னாட்டு உதவிகளோடு நவீன ஆயுதங்களையும் யுத்த நெறிகளுக்கு மாறான கொடூர ஆயுதங்களையும் கொண்டு எமது மக்கள் மேல் சிறிலங்கா அரசு தாக்குதலை நடாத்தியது. கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்களான வெள்ளை பொஸ்பரஸ் எரிகுண்டுகள், தேர்மோபாரிக் குண்டுகள் என்பன வான், தரை, கடல் மார்க்கமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது ஏவப்பட்டன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் மக்கள் நெருக்கமாக அடைபட்டிருந்த நேரத்தில், தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியையும் மீறி எமது மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அகோரத் தாக்குதலை நடத்தியது சிறிலங்கா அரசு.

2ஆம் பக்கம் >>

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X