For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் பள்ளி வேன்கள் திடீர் ஸ்டிரைக்-போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பாம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வேதாரண்யத்தில் 10 பேரின் உயிரைப் பறித்த தனியார் பள்ளி வேனின் செயலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் லைசன்ஸ் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளி வேன்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தனியார் பள்ளிக்கூட வேன்கள் 3 நாள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.

முன்பெல்லாம் ஆட்டோக்கள்தான் நடமாடும் எமன்கள் என்று அச்சத்துடன் கூறுவார்கள். ஆனால் இன்று அந்தப் பொறுப்பை பள்ளிக் குழந்தைகளை புளி மூட்டை போல அடைத்து ஏற்றிச் செல்லும் தனியார் வேன்கள் பறித்துக் கொண்டு விட்டன.

உள்ளே குழந்தைகள் இருக்கிறார்களே, வெளியே மக்கள் நடமாடுகிறார்களே என்ற சொரணையே இல்லாமல் படு வேகமாக ஓட்டிச் செல்லப்படுகின்றன பெரும்பாலான தனியார் பள்ளி வேன்கள்.

வேன்கள் என்றில்லாமல் இப்போது ஆம்னி கார்கள், குட்டி யாணை எனப்படும் லோடு ஏற்றிச் செல்லும் மினிவேன்களை அப்படியே கார் போல மாற்றி குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள் இந்த தனியார்கள்.

இவர்களின் படு வேகத்தால் சாலைகள் படும் பாடு சொல்லி மாள முடியாது. வேகமாக பள்ளி சவாரியை முடித்து விட்டு வேறு சவாரிக்குச் செல்வதற்காக இவர்கள் படு வேகமாகப் போவதால் பலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

வேதாரண்யம் சம்பவத்தில் செல்போன் ஓட்டிக் கொண்டே வேனை ஓட்டியதால்தான் அந்த விபத்தே நடந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகின்றன.

அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்லும் வேன்கள், டிரைவர் லைசென்சு, அனுமதி சீட்டு, தகுதி சீட்டு இல்லாத வாகனங்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தகுதி இல்லாத பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி குழந்தைகள் ஏற்றி செல்லும் வேன்கள் இன்று முதல் 3 நாட்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.

9, 10, 11 ஆகிய 3 நாட்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாணவர்கள் பாதிப்படைந்தனர்.

தாம்பரம், புழல், செங்குன்றம், படப்பை, நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேன்கள் ஓடாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

ஆட்டோக்கள், கார்களில் பெற்றோர்கள் அழைத்து சென்றனர். சிலர் இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றனர். இதனால் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் தாமதமாக சென்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2500 மேக்ஸி கேப் வேன்கள் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த வாகனங்கள் முழுவதும் இன்று ஓடவில்லை.

இது குறித்து சென்னை மாநகர மற்றும் புறநகர் மேக்ஸிகேப் பள்ளி வாகன நலச்சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் பெஞ்சமின், செயலாளர் பிரபு ஆகியோர் கூறுகையில்,

ஆவணங்கள் சரியாக இல்லாத பெர்மிட் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்வதையோ நடவடிக்கை எடுப்பதையோ நாங்கள் தடுக்கவில்லை. முறையாக உள்ள வாகனங்களையும் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுவரை 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 200 வேன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

'தொழில்' செய்ய முடியாது...

12 குழந்தைகளை மட்டும் வாகனத்தில் ஏற்றினால் நாங்கள் தொழில் செய்ய முடியாது. அதைவிட கூடுதலாக ஏற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒரு முறை ரூ. 3300 வரி அரசுக்கு கட்ட வேண்டும். இதை வைத்து எப்படி தொழில் செய்து பிழைப்பு நடத்துவது?

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள் முதலாளிகள் அல்ல. சொந்தமாக வேனை வைத்து நாங்களே ஓட்டி பிழைப்பு நடத்துகிறோம்.

அதிகாரிகள் எங்களை கடுமையாக தண்டிக்கிறார்கள். குழந்தைகளை ஏற்றி செல்லும் வகையில் இந்த வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி தர வேண்டும்.

பறிமுதல், வழக்குப்பதிவு செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகிறோம். போக்குவரத்து ஆணையர் அமைச்சருக்கு கோரிக்கை மனு கொடுக்கிறோம் என்றனர்.

வட சென்னையில் 10 வேன்கள் பறிமுதல்...

இதற்கிடையே, வட சென்னையில் மாதவரம் ரவுண்டானா, கொளத்தூர், திரு.வி.க.நகர் பஸ் நிலையம், மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் வியாசர்பாடி ஆகிய இடங்களில் 302 பள்ளி வேன்- பஸ் சோதனையிடப்பட்டது.

இதில் 68 வாகனங்களில் போதிய தஸ்தாவேஜூக்கள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

எப்.சி. புதுப்பிக்காத 3 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எப்.சி. என்பதே வாகனத்தின் தரம் குறித்ததாகும். அதுவே இல்லாமல் வாகனத்தை செலுத்துவது என்பது தற்கொலை செய்யும் நோக்கத்திற்குச் சமம்.

10 வேன்-பஸ்களை லைசென்ஸ் இல்லாத டிரைவர்கள் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் டிரைவர்களை இறக்கி விட்டு விட்டு அந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் காஞ்சீபுரத்தில் 2 பஸ் 4 வேன், 5 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X