For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்கூட்டர்களை ஏறக்கட்டி விட்டு பைக் பக்கம் திரும்பும் பஜாஜ்

By Staff
Google Oneindia Tamil News

Bajaj to stop scooter production
டெல்லி: இந்திய மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்த வாகனங்களில் ஒன்றான ஸ்கூட்டர்களுக்கு விடை கொடுக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இனிமேல் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபடப் போவதில்லை என்று அது அறிவித்துள்ளது.

பஜாஜ் ஸ்கூட்டர்கள் இந்திய மக்களின் இல்லங்களுக்குப் பெருமை சேர்த்த வாகனங்களில் ஒன்று. ஸ்கூட்டர் என்றாலே பஜாஜ் என்று கூறும் அளவுக்கு மிகச் சிறந்த இடத்தில் இருந்தது பஜாஜ் ஸ்கூட்டர்.

ஆனால் தற்போது ஸ்கூட்டர் தயாரிப்பையே ஒட்டுமொத்தமாக நிறுத்து விட்டது பஜாஜ். இதுகுறித்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் வெளியிட்டுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு தனது பஜாஜ் சேடக் பிராண்ட் ஸ்கூட்டர் தயாரிப்பை நிறுத்தியது பஜாஜ் நிறுவனம். இது ஒரு காலத்தில் உலகிலேயே அதிக அளவில் விற்பனையான ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் திகழ்ந்ததாகும்.

பின்னர் கிறிஸ்டல் என்ற பெயரில் ஸ்கூட்டர் ஒன்றை அறிவித்தது. ஆனால் இது வெளிவரவே இல்லை. இப்போது மொத்தமாக ஸ்கூட்டர் தயாரிப்புக்கே குட் பை கூறி விட்டது பஜாஜ்.

ஸ்கூட்டர்களுக்குப் பதில் மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக கவனம் செலுத்தப் போவதாக பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய நடுத்தர வர்க்க இந்தியாவின் பிரியமான வாகனம் மோட்டார் சைக்கிள்தான். எனவே அதில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக பஜாஜ் கூறியுள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் இந்த முடிவு குறித்து ஹமாரா பஜாஜ் என்ற மிகப் பிரபலமான பஜாஜ் ஸ்கூட்டர் விளம்பரத்தை தயாரித்த லவ் இந்தியாவின் தலைவர் பால்கி கூறுகையில், இந்தியா மாறி வருகிறது, அதேபோல பஜாஜும் மாறி வருகிறது என்றார்.

ஸ்கூட்டர்கள் மீதுதான் ஒரு காலத்தில் இந்திய மக்களின் ஏகோபித்த அபிமானம் இருந்தது. ஆனால் 90களின் இறுதியில் ஹீரோ ஹோண்டா நிறுவனம் வெளியிட்ட ஒரே ஒரு விளம்பரம் அப்படியே நிலைமையை தலைகீழாக மாற்றி விட்டது.

'ஃபில் இட் ஃபர்கட் இட்' என்ற வாசகத்துடன் கூடிய ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள் விளம்பரம் காட்டுத் தீ போல மக்கள் மனதில் பரவி, கால் வலிக்க ஸ்கூட்டரை எதற்கு உதைக்க வேண்டும், பெட்ரோலை போட்டு போட்டு ஏன் தவிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வர வைத்து மோட்டார் சைக்கிள்கள் பக்கம் மக்களை அப்படியே திருப்பி விட்டு விட்டது.

ஹீரோ ஹோண்டாவின் வருகையால்தான் ஸ்கூட்டர்கள் மீதான இந்தியர்களின் மோகம் குறைந்து போக முக்கியக் காரணம் என்று கூறலாம்.

எப்படியோ இந்தியர்களின் வீடுகளை அலங்கரித்து வந்த செல்ல வாகனங்களில் ஒன்று பிரியாவிடை பெற்றுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X