For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் தேவர் சிலையை உடைக்க முயன்ற விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 3 பேர் கைது!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலையை உடைக்க முயன்றதாக 3 பேரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ளது நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலை. சில தினங்களுக்கு முன் இந்த சிலையை சேதப்படுத்தியதாக மனநோயாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தேவர் சிலைக்கு பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 3 பேர் திடீரென்று தேவர் சிலை அருகே வந்தனர். அவர்கள் கையில் கடப்பாறை வைத்திருந்தனர். உடனே அங்கு காவலுக்கு நின்ற போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து கையில் வைத்திருந்த கடப்பாறையை பறிமுதல் செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் தேவர் சிலையை தகர்க்க வந்தவர்கள் என்று தெரியவந்தது. தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் 3 பேரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

அவர்கள், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் கதிரவன், மைலாப்பூர் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கலையரசன், மைலாப்பூர் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் ஸ்ரீதர் ஆகியோர்.

மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கட்சிக் கொடியை ஏற்றி விட்டு செல்லும்போது சிலர் கல் வீசி தாக்கியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேவர் சிலையை தகர்க்க வந்ததாகவும் கைதானவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினார்கள்.

சென்னையில் சாலை மறியல்

இதற்கிடையே, திருமாவளவன் கார் மீது கள்ளக்குறிச்சி அருகே நடந்த கல்வீச்சு சம்பவத்தை கண்டித்து சென்னையில் கோயம்பேடு, செம்பியம், எம்.கே.பி. நகர் ஆகிய இடங்களில் நேற்று பகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடத்திய சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். இரவு வடபழனி 100 அடி ரோட்டில் வெளியூருக்கு சென்ற 3 பஸ்கள் மீதும் சிலர் கல் வீசி தாக்கினார்கள்.

எந்த ஜாதிக்கும் எதிரானவர்கள் அல்ல-திருமா

இந் நிலையில் கள்ளக்குறிச்சியில் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன்,

மன்னார்குடியில் ஆதிதிராவிடர் சமூக அபிவிருத்தி சங்கம் சார்பில் நடைபெற்ற அம்பேத்கார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். இதன் பின்னர் மதுக்கூர் சாலையில் உள்ள பரவாக்கோட்டையில் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இரவு 10.30 மணியளவில் 4, 5 வாகனங்களில் சென்றோம்.

எதிர்பாராத வகையில் எனது வாகனத்துக்கு முன்பு சென்று கொண்டிருந்த அறிவிப்பு காரை சுற்றிவளைத்து சில இளைஞர்கள் கல்வீசி தாக்கினார்கள். அதன் பின்னர் தான் உள்ளூரில் இளைஞர்களிடையே இருந்த முரண்பாட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்ற எதிர்ப்பு உள்ளதை அறிந்து கொண்டேன்.

ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்புகிற கட்சியில் உறுப்பினராக இருப்பதும், அக்கட்சியின் கொடிகளை ஏற்றுவதும் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளே ஆகும். ஆனால் விடுதலை சிறுத்தைகளின் கட்சியை அப்பகுதியில் ஏற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் குறிப்பிட்ட சில இளைஞர்கள் ஈடுபட்டிருப்பது சமூகவிரோத செயலாகும்.

இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

எங்களைப் பொருத்தவரையில் எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கோ, சமயத்துக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக விடுதலை சிறுத்தைகளை தள்ளிவிடும் நிகழ்ச்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளை கேட்டுக் கொள்கிறேன்.

அறவழியில் எதிர்ப்பு தெரிவிக்கும் தோழர்கள் மீது காவல்துறை பொய்வழக்கு பதிவு செய்து வருவதாக அறிகிறோம். பாதிக்கப்பட்ட மக்கள் மீதான இந்த வழக்கை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X