For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்!

By Chakra
Google Oneindia Tamil News

Old Man
சென்னை: வயதான பெரியவர்களை அரவணைக்காமல் அவர்களை அவமதிப்பதில் நாட்டிலேயே சென்னைதான் மிகவும் மோசமாக உள்ளதாக ஹெல்ப்ஏஜ் இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்ப்ஏஜ் நிறுவனத்திற்காக சிக்மா ரிசர்ச் அன்ட் கன்சல்டிங் நிறுவனம் நடத்திய இந்த கருத்தாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள முடிவுகள்:

- பெரியவர்களுக்கு மரியாதைக் காட்டாமல் இருப்பது, அவமதிப்பது ஆகியவை சென்னையில்தான் அதிகம் உள்ளது. அதாவது 71 சதவீத அளவுக்கு சென்னையில் முதியோர்களை அவமதிக்கும் செயல் காணப்படுகிறது. இதில் அடுத்த இடம் கொல்கத்தாவுக்கு. இங்கு இது 54 சதவீதமாக உள்ளது.

- நாட்டில் உள்ள முதியோர்களின் சராசரி குறைந்த வயது 68 வயதாக உள்ளது. கொல்கத்தாவில் உள்ள முதியவர்களில் பாதிப் பேர் 70 மற்றும் அதைத் தாண்டிய வயதில் உள்ளனர்.

- முதியவர்களில் நான்கில் மூன்று மடங்கு பேர் (அதாவது 74 சதவீதம்) திருமணமானவர்கள். கணவன், மனைவியாக இருப்பவர்கள். ஐந்தில் ஒரு பங்கு பேர் விவாகரத்து செய்தவர்கள்.

- முதியவர்களுக்கு குறைந்தபட்சம் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பாட்னாவில் இது 4 ஆக உள்ளது.

- வயதானவர்களில் பாதிப் பேர் மகன்களுடன்தான் வசிக்கின்றனர். அவர்களில் நான்கில் ஒரு பங்கு பேருர் (27 சதவீதம்) துணையுடன் (கணவன் அல்லது மனைவி) வசிக்கின்றனர். 10 சதவீதம் பேர் தனிமையில்தான் வசிக்கின்றனர். அவர்களை அவர்களது பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வதுடன் சரி.

- ஐந்தில் நான்கு பங்கு (82 சதவீதம்) முதியவர்கள் கல்வி அறிவு உடையவர்களாக உள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு பேர் (19 சதவீதம்) பட்டதாரிகளாகவும், பத்தில் ஒரு பங்குப் பேர் (13 சதவீதம்) முதுநிலைப் பட்டதாரிகளாகவும் உள்ளனர். ஐந்தில் ஒரு பங்குப் பேர் (18 சதவீதம்) கல்வி அறிவு இல்லாதவர்களாக உள்ளனர்.

- கொல்கத்தாவில்தான் படிப்பறிவில்லாத முதியவர்களின் எண்ணிக்கை அதிகம். அதாவது 42 சதவீதம் உள்ளனர். பாட்னாவில் குறைந்தபட்சமாக 3 சதவீதம் பேர் உள்ளனர்.

- முதியவர்களின் முக்கிய வேலையாக இருப்பது வீட்டு வேலைதான். அதாவது 26 சதவீத பெரியவர்கள் வீட்டு வேலையைத்தான் பிரதானமாக செய்கின்றனர். 19 சதவீதம் பேர் அன்ஸ்கில்ட் ஊழியர்களாக உள்ளனர்.

- ஐந்தில் ஒரு பங்கு முதியவர்கள் பொருளாதார ரீதியாக குடும்பத்துக்கு உதவியாக உள்ளனர்.

- ஐந்தில் 2 பங்குக்கும் மேற்பட்ட (45 சதவீதம்) முதியவர்கள் சுய வேலை மற்றும் சுயதொழிலை மேற்கொள்பவர்களாக உள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு பேர் கடை உரிமையாளர்களாக உள்ளனர்.

- முதியவர்களின் சராசரி மாதாந்திர வருவாய் ரூ. 12,045 ஆக உள்ளது. ஐந்தில் 3 மடங்கு முதியவர்களின் மாதாந்திர வருவாய் ரூ.10,000க்கும் குறைவாகவே உள்ளது.

- ஐந்தில் 2 பங்கு முதியவர்களுக்கு (45 சதவீதம்) ஓய்வூதியம்தான் முக்கியமான வருவாய் ஆதாரமாக உள்ளது. ஐந்தில் ஒரு பங்குப் பேர் சிறுசேமிப்பு, வைப்புத் தொகை ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வட்டியே வருமானமாக உள்ளது.

- முதியவர்களில் பாதிப் பேருக்கு சொந்தமாக சொத்துக்கள் உள்ளன. இது டெல்லியில்68 சதவீதமாகவும், ஹைதராபாத்தில் 28, கொல்கத்தாவில் 36 சதவீதமாகவும் உள்ளது.

- நான்கில் மூன்று பங்கு முதியவர்கள் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். 18 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.

- 46 சதவீத முதியவர்கள் தங்களது செலவுகளுக்காக மற்றவர்களை நம்பி வாழும் நிலையில் உள்ளனர். இது சென்னையில் 63 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 61 சதவீதமாகவும் உள்ளது.

- பாதிக்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்களது மகனை நம்பியே உள்ளனர். நான்கில் ஒரு பங்குப் பேர் மனைவி அல்லது கணவனை நம்பி உள்ளனர்.

- 44 சதவீத முதியவர்கள், தங்களை வயதானவர்கள் என்று புறக்கணிப்பதை அவமரியாதையாக கருதுகிறார்கள்.

- உணர்ச்சிப் பூர்வமாக தாங்கள் அவமானப்படுத்தப்படுவதாக 39 சதவீதம் பேரும், வாய் வார்த்தையாக அவமானப்படுத்தப்படுவதாக 378 சதவீதம் பேரும், அடிப்படைச் செலவுக்குப் பணம் கொடுக்காமல் உதாசீனப்படுத்துவதாக 35 சதவீதம் பேரும், மரியாதை தருவதில்லை என்று 34 சதவீதம் பேரும் கூறுகின்றனர். உடல் ரீதியாக தாங்கள் துன்புறுத்தப்படுவதாக 34 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

- 60 முதல் 69 வயதுக்குட்பட்டமுதியவர்களில் 21 சதவீதம் பேர் தாங்கள் புறக்கணிப்படுவதாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

- சிலநேரங்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக 51 சதவீதம் பேரும், தினசரி புறக்கணிக்கப்படுவதாக 40 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

- குடும்பத்தினர் தங்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதில்லை, செலவுக்குப் பணம் தருவதில்லை போன்றவற்றால் புறக்கணிக்கப்படும் உணர்வு வருவதாக பொதுவாக கருத்து தெரிவித்துள்ளனர் முதியவர்கள்.

- தங்களது வேலையில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள், தங்களைக் கவனிப்பதில்லை என்று 46 சதவீத முதியோர் தெரிவித்துள்ளனர்.

- பல வகைகளிலும் தாங்கள் அவமதிக்கப்படுவதாக தேசிய அளவில் 36 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இது போபாலில் 79 சதவீதமாகவும், சென்னையில் 59 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 44 சதவீதமாகவும் உள்ளது.

- பெரியவர்களை அவமதிக்கும் செயல்கள் சென்னையில்தான் அதிகம் உள்ளனவாம். இங்கு அது 71 சதவீதமாக உள்ளது. கொல்கத்தாவில் 54 சதவீதமாக உள்ளது.

- பெரியவர்களை திட்டும் செயல் மும்பையில்அதிக அளவில் உள்ளது. அங்கு இதன் அளவு 79 சதவீதமாகும். அகமதாபாத்தில் 57 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 53 சதவீதமாகவும் இது உள்ளது.

- உணர்வுப்பூர்வமாக அவமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை டெல்லியில் (62 சதவீதம்) அதிகம். கொல்கத்தாவில் இது 54 சதவீதமாக உள்ளது.

- உடல்ரீதியாக அவமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கொல்கத்தாவில் 23 சதவீதமாகவும், ஹைதராபாத்தில் 22 சதவீதமாகவும், மும்பையில் 21, அகமதாபாத்தில் 20 சதவீதமாகவும் உள்ளது.

- தங்களை அவமதிப்பதில் முதலிடத்தில் இருப்பவர்கள் குடும்பத்தினரே என்பது முதியோர்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு. அதில் முதன்மையாக இருப்பவர்கள் மகன்களும், மருமகள்களும்தான் என்று முதியோர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

- மகன்களால் அவமதிக்கப்படும் முதியோர்கள் அதிகம் இருப்பது போபாலில். அங்கு இதன் அளவு 70 சதவீதமாகும். பாட்னாவில் 57 சதவீதம், கொல்கத்தாவில் 54 சதவீதமாக இது உள்ளது.

- வீட்டு வேலைக்கு வருவோரால் அவமதிக்கப்படும் பெரியவர்களின் எண்ணிக்கை டெல்லியில் 19 சதவீதமாகவும், அகமதாபாத்தில் 13 சதவீதமாகவும் உள்ளது.

- சொத்துப் பிரச்சினை காரணமாக அவமதிக்கப்படும் முதியோர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக உள்ளது.

- 53 சதவீத முதியவர்கள், தாங்கள் அவமதிக்கப்படுவதை தட்டிக் கேட்கவோ, எதிர்ப்பு காட்டுவதோ இல்லை. அமைதியாக பொறுத்துக் கொள்கிறார்கள். இது சென்னையில் 80 சதவீதமாகவும், போபாலில் 69 சதவீதமாகவும், அகமதாபாத்தில் 62 சதவீதமாகவும் உள்ளது.

- 92 சதவீத முதியவர்கள், தங்களை அவமதிப்போர் குறித்து புகார் கொடுக்க முன்வருவதில்லை.

- தங்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை எடுத்தால் நல்லது என்று நினைக்கும் பெரியவர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக உள்ளது.

- தங்களை அவமதிப்போர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து தெரிந்து வைத்துள்ள முதியோர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாகும்.

சென்னை நகரில் முதியவர்களுக்கு மரியாதை இல்லை என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருத்த தலைக்குனிவாகும். இது கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வேண்டியதில்லை. நேரிலேயே நாம் தினசரி பார்க்கலாம். பெருகி வரும் முதியோர் இல்லங்கள் அதற்கு ஒரு நல்ல சான்று. தெருவுக்கு தெரு தற்போது நர்சரிப் பள்ளிகளை விட முதியோர் இல்லங்கள்தான் பெருகிக் கொண்டிருக்கின்றன.

நாளை நமக்கும் வயதாகும், முதுமை வரும் என்பதை ஒரு விநாடி இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் நினைத்துப் பார்த்தால், நிச்சயம் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளுக்கு வேலையே இருக்காது.

இந்த கருத்துக்கணிப்பு தொடர்பான முழுவிவரங்களையும் கீழ்க் கண்ட இணையதளத்தில் அறியலாம்:

www.helpageindia.org

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X